Published : 10 Aug 2025 08:19 AM
Last Updated : 10 Aug 2025 08:19 AM
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியே 100 மீட்டர் தொலைவுக்குப் பந்தல் அமைக்கப்பட்டு, தேசியக்கொடியுடன் பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ரிப்பன் மாளிகையில் தொடங்கி, புதுப்பிக்கப்பட்டுவரும் விக்டோரியா ஹால் வரை, ‘வேலையை நிரந்தரம் செய்க’ என்கிற கோரிக்கைக் குரல்கள் பலமாக ஒலித்தன.
தனியாரிடம் வேலையை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை அரசு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒரு வாரத்துக்கு மேலாகப் பெண் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளாகத் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் பெண்களே இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 90% பேர் பெண்கள். இவர்களில் பலரும் கணவனை இழந்து தனியாளாகக் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள்.
“இங்கே அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே வர்தா புயல், கரோனா போன்ற நெருக்கடிக் காலங்களில் மக்களுக்காக உழைத்தவர்கள். ஒருவாரமாக இதே இடத்தில் அமர்ந்திருக்கிறோம். எங்களைப் பார்க்க சமூக ஆர்வலர்கள், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் வருகிறார்கள்; உணவு அளிக்கிறார்கள். ஆதரவு அளிக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.
ஆனால், இதுவரை அரசு சார்பாக எந்தவொரு அதிகாரியும் எங்களை வந்து பார்க்கவில்லை. எங்கள் கோரிக்கைகளையும் கேட்கவில்லை. எங்கள் தேவை ஒன்றுதான்... எங்கள் பணியை அரசு அளித்த வாக்குறுதியின்படி நிரந்தரமாக்க வேண்டும். எங்களுக்கு அளிக்கப்பட்ட அதே சம்பளம் தொடரப்பட வேண்டும். என்னை நம்பிதான் என் இரண்டு குழந்தைகளும் உடல் நலம் சரியில்லாத அக்காவும் இருக்கிறார்” எனத் தங்கள் தரப்புக் கோரிக்கையை முன்வைத்தார் தூய்மைப் பணியாளர் தில்ஷாத்.
பெண்களுக்கு ஆதரவாக ஆண் தூய்மைப் பணியாளர்கள் சிலரும் தோழமையுடன் போராட்டத்தில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. தூய்மைப் பணியாளர் சுரேஷ் பாபு பேசும்போது, “கரோனா மட்டுமல்ல, பெருவெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்களப் பணியாளர்களாக எங்கள் பணிகளைச் செய்தோம். இங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பலரும் கணவரை இழந்தவர்கள். இன்னும் சிலரோ மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவனால் பாதிக்கப்பட்டவர்கள்.
இந்தப் பெண்களை நம்பித்தான் அவர்களின் பிள்ளைகளும் உள்ளனர். வீட்டு வாடகை, அடுத்த மாத வீட்டுச் செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் சாலையில் நிற்கிறோம். எங்கள் வேலைகளைத் தனியாருக்கு அரசு தாரைவார்க்கக் கூடாது; எங்கள் சம்பளம் எந்தப் பிடிப்பும் இல்லாமல் தரப்பட வேண்டும். அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும்வரை போராட்டம் தொடரும்” எனத் தன் வருத்தத்தைப் பதிவுசெய்தார்.
சென்னை புளியந்தோப்பில் தூய்மைப் பணி செய்யும் வரலட்சுமி 15 வருடங்களாக இதில் கிடைத்த வருமானத்தை வைத்துத்தான் தனி ஆளாகக் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார். தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவு தன்னைப் போன்ற பெண்களுக்கு அரசு செய்யும் துரோகம் என வரலட்சுமி கண்ணீருடன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “பல நாட்களாக இங்கேதான் அமர்ந்திருக்கிறோம். பேருந்தில் செல்லும் மக்கள் எங்களை விநோதமாகப் பார்க் கிறார்கள். மாலையில் எங்கள் குழந்தைகளும் எங்களைத் தேடி இங்கே வந்துவிடுகிறார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு முறையான உணவு அளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
எங்களுக்கு அளிக்கப்பட்ட 23,000 ரூபாய் சம்பளத்தை உறுதி செய்து அரசே எங்கள் பணியை உறுதிசெய்ய வேண்டும். அளித்த வாக்குறுதியின்படி எங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். எங்களின் போராட்டம் எல்லாப் பெண்களுக்கும் தெரிய வேண்டும். அவரவர் உரிமைகளுக்காகப் பெண்கள் வெளியே வந்து குரல்கொடுக்க வேண்டும்” என்றார்.
தங்கள் பணி உரிமைக்காக சென்னை ரிப்பன் மாளிகையில் தொடங்கப்பட்ட தூய்மைப் பணியாளர் போராட்டம் பெண்களின் உறுதியால் தூய்மைப் பணியாளர்களின் அடையாளப் போராட்டமாகத் தற்போது மாறியிருக்கிறது. வரலாற்றில் எல்லாக் காலத்திலும் பெண்களே உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து உரிமைகளை மீட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தூய்மைப் பணியாளர்களின் போராட்டமும் இணைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT