Published : 20 Jul 2025 09:41 AM
Last Updated : 20 Jul 2025 09:41 AM
“என்னை நான் ஏற்றுக்கொண்ட பிறகு, எல்லாம் தலைகீழாக மாறியது.. உங்கள் நிறத்தைப் புறக்கணிக்காதீர்கள்; அப்படியே ஏற்றுகொள்ளுங்கள்” எனத் தொடர்ச்சியாக நிறப் பாகுபாட்டுக்கு எதிராகப் பேசிவந்தவர் சான் ரேச்சல்.
மனிதர்களின் நிறம் தனித்துவமானது; கறுப்பு, பழுப்பு, மஞ்சள்,வெள்ளை என நாம் காணும் அனைத்து நிறங்களும் இயல்பானவை. ஆனால், இந்தியச் சமூக அமைப்பில் கருப்பு தோல் மீதான அழகியல் மதிப்பீடு இன்றும் பின்தங்கியே உள்ளது.
குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்திருக்கிறதா என்பதைவிடக் குழந்தை வெளுப்பா, கறுப்பா என்று அறியவே பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். குழந்தை கறுப்பாகப் பிறந்துவிட்டால் அதை வெளுப்பாக்குவதற்கு மஞ்சள், முல்தாணிமட்டி என ஒரு பட்டியலையே இன்றைய தாய்மார்கள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். ‘பொண்ணு நிறம் குறைவுதானே.. கூடுதலாக நகை போடுங்கள்’ என சிறிதும் தயக்கமின்றிக் கேட்பவர்களும் இங்கு உண்டு.
சிக்கிக்கொள்ளும் பெண்கள்
தங்கள் மீது திணிக்கப்படும் அழகு சார்ந்த மதிப்பீடுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் பெண்கள் நிறம் சார்ந்த தாழ்வுமனப்பான்மையில் பல சோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக, சினிமா - ஊடக வாய்ப்புகளுக்காக லேசர், மருத்துவ உதவியுடன் நிறத்தை மாற்றிக்கொள்கின்றனர். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்த எந்த அச்சமும் அவர்களிடம் இல்லை. சொல்லப்போனால், சிகிச்சைகள் மூலம், நிறத்தை மாற்றிக்கொள்வதை வாழ்நாள் சாதனையாகச் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பெண்கள் அதிகரித்திருக்கிறார்கள். அயல்நாடுகளில் மெலனின் மிகுதிக்காகக் கொண்டாடப்படும் கறுப்பு நிறம், இங்கு வறுமை, குற்றம், தாழ்வு மனப்பான்மையின் அடையாளமாக மாறியுள்ளது அறியாமையின் வெளிப்பாடே.
தனித்து நின்ற ரேச்சல்
சமூகமும் குடும்பமும் அளித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது கறுப்பு நிறத்தை அடையாளமாகவும் பெருமையாகவும் முன்னிறுத்தியவர் புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல். சிறு வயது முதலே நிறம் சார்ந்த பல்வேறு புறக்கணிப்புகளை எதிர்கொண்ட ரேச்சல், சமூகத்தால் ஒதுக்கப்படும் கறுப்பு நிறத்தையே தனது பெருமையாக மாற்றிக்கொண்டார்.
கல்லூரிக் கால நிராகரிப்புகளுக்கு மத்தியில் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளாமல் மாடலிங் துறையில் திறமையை நிரூபித்தவர் ரேச்சல். 2019 இல் ‘மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு’, 2020 – 2021இல் ‘மிஸ் புதுச்சேரி’, 2022இல் ‘குயின் ஆஃப் மெட்ராஸ்’ போன்ற பல்வேறு அழகிப் பட்டங்களை ரேச்சல் தனத்தாக்கிக் கொண்டார்.
2023இல் ‘மிஸ் ஆப்ரிக்கா கோல்டன் இந்தியா’வில் பங்கேற்ற ரேச்சலுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. இவர் லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ் , தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச அழகிப் போட்டிகளில் இந்தியா சார்பாகவும் பங்கேற்றார். நகைக் கடை விளம்பரம் ஒன்றில் மாடலாக நடித்து, காலம் காலமாகத் தொடர்ந்துவந்த தடையை உடைத்தார்.
அழகிப் பட்டம் மூலம் கிடைத்த புகழை வெறும் வணிக நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல், நிறம் சார்ந்த புறக்கணிப்புகளுக்கு எதிராகவும், கறுப்பு நிறத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திலும் ரேச்சல் தீவிரமாகச் செயல்பட்டார். தமிழ் மொழியில் திறமை பெற்ற ரேச்சல், கிடைக்கும் மேடை வாய்ப்புகளில் எல்லாம் மாடலிங் துறை, திரைத்துறையில் நிலவும் நிறவெறுப்பைப் பதிவு செய்து வந்தார். மாடலிங் ஏஜென்சி மூலம் இளம் பெண்கள் மாடலிங் துறையில் சாதிக்கப் பயிற்சி வழங்கிவந்தார்.
மிஸ் இந்தியா, உலக அழகி போன்ற பட்டங்களை வெல்ல வேண்டும் என்கிற கனவோடு பயணித்து வந்த ரேச்சல் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். ரேச்சலின் மரணம் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு மாடலிங் துறையில் சாதிக்க நினைத்த பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடி - மன அழுத்தம் போன்றவை ரேச்சலின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிறமே அழுகு எனப் போதிக்கும் சமூகத்தில், தன்னைப் போன்ற பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்து, எந்த நிறமும் தாழ்வில்லை எனச் சாதித்துக் காட்டிய ரேச்சல் கறுப்பு நிறத்தின் குரலாக எப்போதும் ஒலிப்பார்.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட
அரசு உதவி எண்: 104
சி நேகா தற்கொலை தடுப்பு மையம்: 044 - 24640050
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT