Last Updated : 14 Jul, 2025 12:15 PM

 

Published : 14 Jul 2025 12:15 PM
Last Updated : 14 Jul 2025 12:15 PM

“எதற்கும் அஞ்சாத நிலை...” - நெல்லையின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர் இ.பானுபிரியா உத்வேக பேச்சு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ. பானுபிரியா பேசினார். உடன் (வலமிருந்து) திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தி. கோமளவல்லி, சின்னத்திரை தொகுப்பாளினி தேவிகிருபா, வுமன் ஆப் சப்ஸ்டென்ஸ் விருது பெற்ற ஜெ.ரெனால்ட், டி. ராஜேஸ்வரி. | படங்கள்: மு. லெட்சுமி அருண் |

திருநெல்வேலி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் ‘மகளிர் திருவிழா’, திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், துணை செய்தி ஆசிரியரும், ‘பெண் இன்று’ பக்க பொறுப்பாளருமான பிருந்தா சீனிவாசன் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் இ.பானுபிரியா, திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தி. கோமளவல்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா பேசியதாவது: பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். நிறையபேர் சில விஷயங்களை விட்டு வெளியேவர யோசிப்பார்கள். தப்பு செய்தால் மட்டுமே வாழ்க்கையில் பயப்பட வேண்டும். எல்லா விஷயத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 1957-ம் ஆண்டிலிருந்து பெண் தீயணைப்பு அலுவலர் பணியாற்றவில்லை.

தற்போது முதன்முறையாக எனது பெயர் மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பெண்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். நம்மை நம்பி எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை திறம்பட செய்ய முடியும் என்பதை பெண்கள் நிரூபிக்க வேண்டும்.

நமக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதன்மூலமே சமூகத்தில் நமக்கான மதிப்பு உயரும். பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க பெண்கள் சம்பாதிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு நாம் உயர வேண்டும்.

எதையும் சாதிக்க முடியும்: இளம்பெண்கள் கஷ்டப்பட்டு படித்தால் அரசுத் தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப்பணியில் சேர முடியும். திருமணம் முடித்து 5 வயதில் மகன் இருக்கும் போதுதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வெற்றிபெற்றேன். திருமணம் ஆகிவிட்டால் படிக்க முடியாது என்ற நிலை இல்லை. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். தைரியமாக இருந்தால் எதையும் நிறைவேற்ற முடியும்.

பெண்கள் கண்டிப்பாக பணிக்கு செல்ல வேண்டும். அதுவும் அரசு பணிக்கு செல்ல வேண்டும். அதற்காக உங்கள் பெண் பிள்ளைகளை தயார்படுத்துங்கள். அரசு சார்பில் இலவசமாக வகுப்புகள் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிப் புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும்.

எனது மகனுக்கு தாய் என்பது தான் எனக்கான முதன்மையான அடையாளம். அந்த அடையாளம்தான் கடைசிவரை வரும். சந்தோஷமாக இருங்கள். நேர்மறையாக எப்போதும் யோசியுங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் தி. கோமளவல்லி பேசியதாவது: பொறுமை, அன்பு, கருணை, வீரம் எல்லாமே இயற்கையாக ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சமூகத்தில் நமக்கு அதிக கடமைகள் இருக்கின்றன. மாணவிகள் அதிகளவில் படித்து பல்வேறு துறைகளிலும் முன்னேற வேண்டும். கல்வி நமது உரிமை. அதை பெற்றோர்கூட தடுக்க முடியாது. கல்லூரிகளில் தொடக்கத்தில் பெண்கள் குறைவாகவே படித்தனர்.

இப்போது அதிகளவில் பெண்கள் படிக்கிறார்கள். சமுதாயத்தில் நிறைய சவால்கள் பெண்களுக்கு இருக்கின்றன. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். பாலியல் தொலலைகளில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பதின்ம வயது பெண்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். வரதட்சணை கொடுமை அதிகமுள்ளது. வரதட்சணை கொடுமையை போக்க கல்வி அவசியம். கல்வியும் சட்டமும் பெண்களுக்கு கவசம். சட்ட திட்டங்கள் குறித்து பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

விழாவில் உற்சாகமாக பங்கேற்ற வாசகியரில் ஒரு பகுதியினர்.

ஆரோக்கியம் முக்கியம்: எந்த குடும்பத்தில் நிதியை பெண்கள் கையாள்கிறார்களோ, அந்த குடும்பம் தற்சார்பு உள்ளதாக இருக்கும். கல்வி பெரிய அணிகலன். அறிவும் ஒழுக்கமும் பெண்களுக்கு முக்கியம். பெண்கள் எங்கிருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் தவறுகளை தைரியமாக எடுத்துக்கூற வேண்டும். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் இருக்க வேண்டும். ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குடும்பத்தின் ஆரோக்கியத்தை நமது கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வீடுகளில் அஞ்சறை பெட்டி மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவாப்பட்டை, வெள்ளைப்பூண்டு, மஞ்சள் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். எந்த வீட்டில் சமையல்அறை சரியாக இருக்கிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீடுகளில் மூலிகைகள் கண்டிப்பாக வளர்க்கப்பட வேண்டும். பிறரை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள், நம்மை வளர்த்து சமுதாயத்தை வளர்க்க வேண்டும். அப்படி செய்தால் உலகம் நம் வசமாகும். இவ்வாறு பேசினார்.

மகளிர் திருவிழாவில், வாசகியர் களுக்கு பலூன் ஊதுதல், கயிறு இழுத்தல், ரேம்ப் வாக் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து வயதினரும் இதில் போட்டி போட்டு பங்கேற்று உடனுக்குடன் பரிசுகளை பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மகளிரும் பரிசுகளை வென்றனர். நிகழ்ச்சியை சின்னத்திரை தொகுப்பாளினி தேவிகிருபா தொகுத்து வழங்கினார். விழாவில் உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் வுமன் ஆப் சப்ஸ்டென்ஸ் விருது மகளிர் இருவருக்கு வழங்கப்பட்டது.

தானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவரும் திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கிராமத்தைசேர்ந்த ஜெ. ரெனால்ட், திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது கல்வித்துறையில் பணியாற்றும் டி. ராஜேஸ்வரி ஆகியோர் இந்த விருதுகளை பெற்றனர்.

கடலூர் செம்மண்டலம் கிராமத்தை சேர்ந்த சங்கர் பார்வதி தம்பதியரின் மகள் மோகன சங்கரி (12) பரதம், கரகம், சிலம்பம் என பல்வேறு திறமைகளை மேடையில் செய்து காட்டி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதுபோல் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவிகள், சமூக ஊடகங்களில் குறிப்பாக செல்போனில் அதிகநேரத்தை செலவிட்டால் வரும் கேடுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மவுன நாடகத்தை நடித்துக் காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றனர்.

உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. பிரஸ்டா விமன்ஸ் வியர், லலிதா ஜூவல்லரி, ஒபே தி ரூல்ஸ் யூடியூப் சேனல், சத்யா ஏஜென்சீஸ், செல்வராணி பட்டு, ஜவுளி ரெடிமேட்ஸ், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், டோம்ஸ் ஸ்டேஷனரி, ராஜேஸ் எலெக்ட்ரிக்கல்ஸ், பிளாசம் அக்ரிடெக், மலாஸ் பழப்பொருட்கள் மற்றும் வென்யூ பார்ட்னர் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, டீ பார்ட்னர் வாஹ் பக்ரி, டிவி பார்ட்னர் மயூரி டிவி உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

பங்கேற்ற வாசகிகள் அனைவருக்கும் மதிய உணவும், நிச்சயப் பரிசும் வழங் கப்பட்டது. இரண்டு வாசகிகளுக்கு பம்பர் பரிசு வழங்கப்பட்டது. இதுபோல் ஒரு வாசகிக்கு மாடித் தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x