Published : 09 Mar 2025 01:16 PM
Last Updated : 09 Mar 2025 01:16 PM

பழங்குடியினரின் கலைத்திறமை | வாழ்ந்து காட்டுவோம்!

குறும்பர் ஓவியம் தொழில் குழு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாரம் கெங்கரை ஊராட்சியில் உள்ள பாவியூர் கிராமத்தில் 10 உறுப்பினர்களுடன் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறும்பர் பழங்குடியினர் பண்டைய காலந்தொட்டே ஓவியக்கலையில் சிறந்து விளங்கியுள்ளனர். இதைப் பறைசாற்றும் விதமாக கோத்தகிரி வட்டாரம் கரிக்கியூர் கிராமத்தில் அமைந்துள்ள பொரிவரை பாறையில் 4000 வருடங்கள் பழமை வாய்ந்த ஓவியங்கள் குறும்பர் பழங்குடியின மக்களின் முன்னோர்களால் வரையப்பட்டு இருப்பதை இன்றளவும் காண முடிகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஓவியக்கலையை மிகக் குறைவானவர்களே அறிந்திருப் பதால் அடுத்த தலைமுறையினர் இக்கலை பற்றி அறிந்து கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறும்பர் இனத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தைப் பற்றி அறிந்து அதன் சிறப்பு அம்சமான சமுதாயத் திறன் பள்ளி மூலம் குறும்பர் ஓவியத்தை மீட்டெடுத்துள்ளார். இதன் முதல் கட்டமாக, கெங்கரை ஊராட்சியில் உள்ள 15 இளைஞர்களுக்கு 30 நாள்கள் பயிற்சி வழங்கினார். பிறகு பயிற்சி பெற்ற மக்களைக் கொண்டு மலையரசன் தொழில் குழு, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு தொடக்க நிதி மானியமாக ரூ.75,000 வழங்கப்பட்டது. அதன் தொடர்சியாக இரண்டாம் கட்டமாக, பாவியூர் கிராமத்தில் 15 பேருக்கு ஓவியப் பயிற்சி இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு, பிறகு தொழிற் குழுவாக மாற்றப்பட்டது.
இப்பழங்குடி மக்கள் வளங்களைப் பாதுகாக்கும் முனைப்போடு ஓவியங்கள் தீட்டப் பயன்படுத்தும் வண்ணங்களுக்காக இறந்த மரங்களின் பட்டைகளையே பயன்படுத்துகின்றனர்.

குறும்பர் ஓவியத்தில் விடுகதைகள், கலை, கோயில் விழாக்கள் மற்றும் 7 வகையான பாறை ஓவியங்கள் வெள்ளை வண்ணம் மற்றும் செம்மன் வண்ணங்களில் தயார் செய்து வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இத்தகைய வாய்ப்பை வழங்கிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு நன்றி!

நிலக்கடலை சாகுபடியால் நீங்கிய வறுமை!

என் பெயர் சுப்புலெட்சுமி நான் திருநெல்வேலி மாவட்டம் சிதம்பராபுரம் ஊராட்சியில் உள்ள வையகவுண்டான்பட்டி கிராமத்தில் வசித்துவருகிறேன். என்னிடம் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் நீண்ட நாளாக நெல் பயிரிட்டு வந்தேன். பருவக் காலங்களில் மழைகுறைவால் நெல் பயிரில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரிசெய்ய முடியாத நிலையில் என் குடும்பம் வறுமையில் இருந்தது.
அப்போதுதான் எங்கள் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டதின் மூலம் தொழில்சார் சமூக வல்லுநராகப் பணிபுரிந்து வரும் சிவனம்மாள், சமுதாயப் பண்ணைப் பள்ளி பற்றி விளக்கம் அளித்தார். நிலக்கடலை சமுதாயப் பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. அதில் இசக்கியம்மாள் பயிற்றுநராக இருந்தார். வாரம் இரண்டு முறை 16 வகுப்புகள் நடைபெற்றன.

நான் அதில் கலந்துகொண்டேன். நிலக்கடலையை எப்படிச் சாகுபடி செய்ய வேண்டும் என்பதைச் செயல்முறை விளக்கத்துடன் கற்றுக் கொடுத்தார்கள். என் தோட்டத்துக்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டனர். வயலின் மண் பரிசோதனை செய்யப்பட்டது. எங்கள் வயலில் செம்மண் என்பதால் குறிகிய காலத்தில் விளைச்சல் காணலாம் என்றனர்.

அதன்பிறகு, வயலில் நிலக்கடலை சாகுபடி செய்தேன். விளைச்சலுக்கு எற்றவாறு நுண்ணூட்டச்சத்துகள் அளித்தேன். பிறகு விதை நேர்த்தி செய்து களை எடுத்தோம். அறுவடை செய்த பின் 20 மூட்டை நிலக்கடலை கிடைத்தது. அவற்றை சந்தையில் விற்றதில் 3 மடங்கு லாபம் கிடைத்தது. எனது குடும்பத்தின் வறுமையும் குறைந்தது. நிலக்கடலை சாகுபடி மூலம் அதிக வருமானம் கிடைக்கச் செய்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு நன்றி. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x