Published : 09 Feb 2025 11:02 AM
Last Updated : 09 Feb 2025 11:02 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் இந்த ஆண்டுக்கான முதல் மகளிர் திருவிழா வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.02) அன்று கோலாகலமாக நடைபெற்றது.
வேலூர் நலம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நர்மதா அசோக்குமார் பேசும்போது, “35 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த புரிதல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதவிடாய்ச் சுழற்சி முடிந்த ஐந்து நாள்களுக்குப் பிறகு கண்ணாடி முன்பாக நின்று நீங்களே மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இது தொடர்பாக நிறைய வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன. இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் கருப்பைவாய்ப் புற்று நோயின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். எனவே, பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதற்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
முனைவர் அ.மலர், “பெண்களின் கையில் இருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டுப் புத்தகத்தைக் கொடுங்கள் என்று சொன்ன தந்தை பெரியாரின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது என்று நினைக்கிறேன். பெண்கள் எதையும் விட்டுக்கொடுக்கத் தேவை இல்லை. அடுப்பறை என்பதை அடிமைப் படுத்தும் இடமாக இல்லாமல் சுதந்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வலி ஆண்களுக்குப் புரியாது. அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம்” என்று வாசகியரை ஊக்கப்படுத்தினார்.
உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் சார்பில் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருது வேலூரைச் சேர்ந்த திருநங்கை ஜெய்ஸ்ரீ. ஆற்காடு நிலா மகளிர் குழுவைச் சேர்ந்த நீலவேணி, திருவண்ணாமலை யோகா பயிற்சியாளர் கல்பனா. வாணியம்பாடியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் சங்கீதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தோல்பாவைக் கூத்து: வேலூர் மகளிர் திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக, குடியாத்தம் தெருவிளக்கு பொம்மலாட்டக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ராஜாகுப்பம் அரசினர் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தெருவிளக்கு கோபிநாத் குழுவினர் ‘பெண் கல்வி’ குறித்த தோல்பாவைக் கூத்தின் கருத்துப் பாடல்களை வாசகியர் வெகுவாக ரசித்தனர்.
போட்டியில் கலக்கிய வாசகியர்: பலூன் ஊதுதல், கயிறு இழுத்தல், பாட்டுக்குப் பாட்டு. கேள்விகளுக்குப் பதில், மனதுக்குப் பிடித்த பாடல்கள் எனப் பல்வேறு போட்டிகளில் அனைத்து வயதினரும் போட்டி போட்டுக்கொண்டு பங்கேற்றதுடன் பரிசுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.
வாசகியரைக் குஷிப்படுத்திய போட்டிகளுக்கு நடுவில் நடைபெற்ற வாக்'கில் இளம் பெண்கள் முதல் மூத்தவர்கள் வரை பங்கேற்று அரங்கை அதிரச் செய்தனர். குறிப்பாக, குடியாத்தம் கங்காதேவி, “எனக்குக் குழந்தைகள் இல்லை. 65 வயதாகிறது. மாற்றுத் திறனாளிகளுக்குச் சமூக சேவை செய்துவருகிறேன்” என்று சொன்னதோடு நடனமாடியபடி ரேம்ப் வாக் செய்தது அனைவரையும் கலகலப்பாக்கியது.
நெகிழ வைத்த பேச்சு: முன்னதாக, மகேஸ்வரி என்பவர் பேசும்போது, “எங்கள் ஊரில் பெண் பிள்ளைகள் ஐந்தாவது வரைதான் படிப்பார்கள். ஆனால், எங்கப்பா என்னைப் பக்கத்துக்கு ஊருக்கு மேல்படிப்புக்காக சைக்கிளில் கூட்டிச் சென்று வருவார். என் மூன்று பெண் பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்திருக்கிறேன். இதற்கெல்லாம் என் அப்பாதான் காரணம்” என்று கண்கள் கலங்கியபடி பேசியது வாசகியரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா கலகலப்புடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வாசகியரின் ஆரவார நடனத்துடன் விழா இனிதே நிறைவேறியது.
வேலூர் மகளிர் திருவிழாவை உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. பிரெஸ்டா, டார்லிங் எலெக்ட்ரானிக்ஸ், மொபைல் மற்றும் பர்னிச்சர், ஸ்ரீமாதங்கி டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் (நண்டு பிராண்ட்), காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட், லலிதா ஜூவல்லரி, செய்யார் ஸ்ரீகுமரன் நகை மாளிகை, சேத்துப்பட்டு திவ்யா சாரீஸ் சென்டர், வேவ்ஸ் டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம், நாராயணா பியர்ல்ஸ் (ஜெம்ஸ்-ஜூவல்ஸ்), ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, ஜே.சி.ஐ.வேலூர் கிங்ஸ், வேலூர் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம், வேணு புட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. மகளிர் திருவிழாவில் பங்கேற்ற வாசகியர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT