Published : 03 Nov 2024 07:50 AM
Last Updated : 03 Nov 2024 07:50 AM
கொரியத் தொடர்களிலும் படங்களிலும் வருவது போலவே நிஜ வாழ்விலும் பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்படுவார்கள்; ஆண்கள் அன்பின் மறு வடிவமாகவும் வெள்ளந்தியாகவும் இருப்பார்கள் எனப் பலரும் நினைக்கிறார்கள். திரையில் வருவதை உண்மை என நம்பி காதலைத் தேடிச் செல்லும் அயலகப் பெண்களும் உண்டு.
பிரபல தென்கொரிய இசைக் குழுவான BTS-ஐ காண வேண்டும் என்கிற ஆசையில் தமிழகப் பள்ளி மாணவியர் சிலர் கொரியா செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் போலீஸாரால் மீட்கப்பட்ட செய்தி யைப் படித்திருப்போம். திரையில் நாம் பார்த்து ரசிக்கும் கொரிய தேசம் நிஜத்திலும் அதையே பிரதிபலிக்கிறதா?
தென்கொரியாவிலும் பிற நாடுகளைப் போலவே ஆண் - பெண் பாலின இடைவெளி அதிகமாகவே உள்ளது. அங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பாலி யல் துன்புறுத்தலும் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன.
தங்களுக்கான சிறு உரிமைகளைக்கூட கொரியப் பெண்கள் இன்றும் போராடியே பெறுகிறார்கள். கொரியாவில் வீடு தொடங்கி அலுவலகம் வரை எங்கும் நிலவும் ஆணாதிக்க மனநிலையை உடைப்பதற்கு ‘4 பி’ (4 B - No to biyeonae, bihon, bisekseu, bichulsan) போன்ற போராட்டங்களையும் பெண்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
2024இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஹன் காங், தனது பெண்ணுரிமைக் கருத்துகளுக்காகச் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். ஹன் காங்கின் புத்தகங்கள் பெண்களைத் தவறாக வழிநடத்தும் என்கிற பிரச்சாரம் கொரியப் பிற்போக்கு வாதிகளால் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் ஹன் காங்கின் இலக்கியச் சேவைக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசு கொரிய இளைஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிளாக் பிங்க்
மேற்கத்திய நாடுகளைப்போல் கொரியாவின் சுயாதீனப் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகம். கொரியாவின் பிடிஎஸ் ஆடவர் இசைக் குழு இளைஞர்களிடம் எவ்வளவு பிரபலமோ அதற்குச் சற்றும் குறையாத பிரபலத் தன்மையுடன் கடும் போட்டியாளர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் ‘பிளாக் பிங்க்’ குழுவினர். ஜிசோ, ரோஸ், ஜென்னி, லிசா ஆகியோர்தான் இந்த இசைக் குழுவில் இடம்பெற்றுள்ள நான்கு பெண்கள்.
தொடக்கத்தில் ‘பிளாக் பிங்க்’ இசைக் குழுவுக்கு எதிராக கொரிய இளைஞர்களால் அவதூறுகள் பரப்பப் பட்டன. அக் குழுவில் இடம்பெற்றிருந்த ஜென்னி, லிசா இருவரும் ஆடைத் தேர்வுகளுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அந்த இசைக்குழுவினர் கொரியா வின் அடையாளத்திலிருந்து விலகி மேற்கத்திய கலாச் சாரத்துக்குத் தங்களை விற்றுவிட்டார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ‘பிளாக் பிங்க்’கை ஒவ்வொரு நாளும் நெருக்கடிக்குள்ளாக்கியது. எனினும், எதிர்மறையான விமர்சனங்களுக்குச் செவி கொடுக்காமல் பாடல்களின் வழியே பெண்களை வலிமையாக்கும் வரிகளைப் புகுத்தி கொரிய இளம் பெண்களின் கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக ‘பிளாக் பிங்க்’ குழுவினர் மாறினர். ‘How You Like That’, ‘Ddu-Du Ddu-Du’, ‘love to hate me’ போன்ற பாடல்களில் பெண்களுக்கான வலிமையையும் சுய அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தி பாப் இசை உலகில் பல சாதனைகளைப் புரிந்தனர்.
ஆரம்பத்தில் உருவக் கேலி, கருத்து ரீதியான அவதூறுகளுக்கு உள்ளான ‘பிளாக் பிங்க்’ குழுவினர் தற்போது ‘கே-பாப்’ இசை உலகில்தவிர்க்க முடியாதவர்களாக மாறியுள்ளார்கள். தொடர்ச்சி யான ஹிட் பாடல்கள் ஆசிய பாப் இசையின் முகமாக இவர்களை மாற்றியுள்ளது.
சிறு வெளிச்சம்
கொரியாவின் ‘fx' இசைக் குழுவின் முக்கிய உறுப்பினரான சூலி (sulli) தனது, ‘நோ பிரா’ (NO BRA) பிரச்சாரத்துக்காகச் சமூக ஊடகங்களிலும் பொது வெளியிலும் மோசமாக விமர்சிக்கப் பட்டார். கொரியாவின் ‘கீ போர்டு போராளிகள்’ சூலி மீது சைபர் தாக்குதலைத் தொடர்ந்தனர். முடிவில், சூலி தற்கொலை செய்துகொண்டார். சூலியின் தோழியும் நடிகையுமான கோ ஹரா, தனது தனிப்பட்ட ஒளிப் படங்களைப் பகிர்ந்த காதலனின் செயலால் உயிரை மாய்த்துக்கொண்டார்.
சாங் யோ ஜங், சா இன் ஹா உள்படப் பல கொரிய பிரபலங்களின் மரணங்கள் கொரிய இசை உலகத்தை அதிர்ச்சி அடையச் செய்தன. பிரபலங்களின் தொடர் மரணங்களால் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கச் சிந்தனைகளைப் பரிசோதனைக்கு உள்படுத்த கொரிய இளம் சமூகம் முன்வந்துள்ளது. புகழை நோக்கி ஓடுகையில், இலக்கை அடைந்ததும் ஒரு கட்டத்தில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற வெறுமையும், சமூகத்தின் மதிப்பீடுகளும் பிரபலங்களை நிலைகுலையச் செய்கின்றன. கொரியாவின் பாப் பிரபலங்களும் இதே நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
எனினும் பெண்ணுரிமை, சைபர் பாதுகாப்பு, மன அழுத்தம், புகழின் மறுபக்கம் குறித்தெல்லாம் கொரியப் பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களிடம் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருப்பது இருண்டு கொண்டிருந்த கொரிய இசை உலகில் சிறு வெளிச்சத்தைக் கொண்டு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT