Published : 20 Oct 2024 07:42 AM
Last Updated : 20 Oct 2024 07:42 AM

திருமண அபராதம்

வேலைக்குச் செல்லும் தெற்காசியப் பெண்களில் பலரும் திருமணம் என்கிற உறவுக்குத் தங்கள் வேலையையே ‘அபராத’மாக அளிக்கிறார்கள் என உலக வங்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமும் குழந்தைப்பேறும் அந்தப் பெண்களின் பணிவாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த பின்னடைவை ஏற்படுத்துகின்றன. ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் முன்னேற்றத்தையும் 13 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வையும் பெறுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலின இடைவெளியை இது உணர்த்துகிறது.

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் வேலையைத் துறக்கும் முடிவுக்குத் தள்ளப்படுன்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே இவர்கள் வேலையைவிட்டு நின்றுவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெண்களின் பணி வாழ்க்கையில் ஏற்படும் இந்த வீழ்ச்சி ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கிறது. குழந்தை பிறந்த பிறகு இந்தப் பெண்கள் மற்றொரு ‘அபராதம்’ செலுத்த வேண்டியதாக இருக்கிறது. தெற்காசியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக (35%) இருக்கிற நிலையில் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றையொட்டி ஏற்படும் இந்தச் சரிவு, பெண்களின் பணி வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது.

வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்களிக்காதது, குழந்தை வளர்ப்புக்கான ஏற்பாடுகள் இல்லாதது, பேறுகாலப் பராமரிப்பு குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவையே பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பெரிதும் பாதிக்கின்றன. குழந்தை வளர்ப்பு என்பது முழுக்க முழுக்க பெண்ணுக்கானதாக மட்டும் பார்க்கப்படும் மனநிலையில் பெரிதாக மாற்றம் இல்லை. ‘இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024’இன் படி ஆணுடன் ஒப்பிடுகையில் இளம் பெண் ஒருவர் ஆறு மடங்கு அதிகமான நேரத்தை ஊதியமில்லா வீட்டு வேலைகளில் செலவிடுகிறார். பெண்களின் பொதுவெளிச் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையிலான அரசுத் திட்டங்களும் வீடுகளில் வேலைப் பகிர்வும் இருந்தால் திருமணத்துக்கும் குழந்தைப்பேறுக்கும் பெண்கள் ‘அபராதம்’ செலுத்தத் தேவையிருக்காது.

பாலைவனப் பூ

“ஆப்ரிக்காவின் சோமாலியப் பாலை வனத்தில் கால்நடை மேய்க்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள் நான். ஆப்ரிக்காவின் முதுகெலும்பே பெண்கள்தான். ஆனால், கடும் உழைப்பாளிகளான அவர்கள் அதிகார மற்றவர்களாகவும் எதையும் மறுக்கும் உரிமையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இயற்கையின் அற்புதத்தைக் குறிப்பிடும் வகையில் என் அம்மா எனக்குப் பெயர் வைத்தார். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று பொருள். அரிதாக மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பிழைத்திருக்கும் பாலைவனத்தில் பூக்கும் திறனுடையது பாலைவனப் பூ. எனக்கு 13 வயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது வீட்டை விட்டு வெளியேறினேன். பாலைவன வெளியில் ஓடிக்கொண்டிந்த என் முன் ஒரு சிங்கம் நின்றது. ‘என்னைத் தின்றுவிடு’ என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். அது தன் நாக்கை நீட்டியபடி என் அருகே வந்தது. அது என் தலையைக் கவ்வும் நொடிக்காகக் காத்திருந்தேன். ஆனால், அது வந்த வழியே திரும்பிவிட்டது. அதன் பசிக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் என நினைத்திருக்கும் போல. சிங்கம் என்னைக் கொல்லாமல் சென்றதற்கு ஏதோவொரு காரணம் இருக்கும். இந்தச் சமூக முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

குழந்தைகளும் பெண்களும் இங்கே மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. மனிதர்களைவிடத் தரம் தாழ்ந்தவர்களாகத்தான் அவர்கள் நடத்தப்படுகிறார்கள். பெண்ணுறுப்புச் சிதைப்பு எனும் கொடுமையே அதற்குச் சிறந்த உதாரணம்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x