Published : 25 Aug 2024 12:51 PM
Last Updated : 25 Aug 2024 12:51 PM
தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்தித் திரையுலகம், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ள எல்லாவிதமான ஜால வித்தைகளையும் சமீப ஆண்டுகளில் புரியத் தொடங்கியிருக்கிறது. பரிசில்கள், விருதுகள், பட்டங்கள் போன்றவை அரசு அங்கீகாரங்களாக முன்மொழியப்படும்போது, ஆட்சியாளர்கள் விரும்பும் மாதிரிகளைப் போல உருவாக்கவே பலரும் தலைப்படுவார்கள். தேசியத் திரைப்பட விருதுகளும் அப்படி ஒரு நோக்கத்துடன் மடைமாற்றப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் சிற்சில மாற்றங்களைச் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசியத் திரைப்பட விருதுகளில் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டில் தேசிய அளவில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய 3 விருதுகளை மலையாளத் திரைப்படமான ‘ஆட்டம்’ பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் ஏகர்ஷிக்கு இது முதல் படம்.
ஆட்டம் என்றால் பழந்தமிழில் நாடகம்என்று பொருள். சந்தர்ப் பத்துக்கு ஏற்பவும் சந்தர்ப்பம் மாறும்போதும் மனிதர்கள் எப்படி யெல்லாம் நிறத்தையும் குணத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள் / நடிக்கிறார்கள்; ஒரு விஷயத்தின் மீதான தங்கள் கருத்தை தங்கள் வசதிக்கு ஏற்ப ஆண்கள் எப்படிப் பற்றிக்கொள்கிறார்கள் / மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் திரைவிலக்கிக் காட்டுகிறது. இவர்களுக்கு இடையில் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை ஒரு பெண் எப்படி எதிர்க்கிறாள், தன் நிலையை நிறுவுவதற்காக எந்தப் பொய்யையும் கூறாமல் இருக்கிறாள் என்பதே ஆட்டமாக விரிகிறது.
இந்தத் திரைப்படத்தின் கதை மிகச் சிறியது. ஹயவதனா என்கிற நாடகத்தில் ஒரு நாடகக் குழுவினர் நடிக்கிறார்கள். அந்த நாடகத்தைக் காண வரும் வெளிநாட்டவர் இருவர், அந்தக் குழுவினரைத் தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைக் கிறார்கள். விருந்து உண்ட பின் நாடகக் குழு அந்த வீட்டிலேயே இரவில் தங்குகிறது.
அந்த நாடகக் குழுவில் 12 பேர் வெவ்வேறு வயது கொண்ட ஆண்களாக இருக்கும்போது, சிறு வயதில் இருந்தே அந்தக் குழுவில் தொடரும் நாயகி அஞ்சலி (ஸரின் ஷிகாப்) மட்டுமே ஒரே பெண். அந்த நாடகக் குழு தனக்குப் பாதுகாப்பான ஓர் இடம் என்று அவள் நம்புகிறாள். அந்த நம்பிக்கை அன்றைய இரவில் தகர்ந்துபோகிறது. அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் அதிகாலையிலேயே தன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறாள்.
அந்தக் குழுவில் மிகச் சமீபத்தில் சேர்ந்தாலும் ஆதிக்கம் செலுத்து பவனாக ஹரி இருக்கிறான். காரணம், அவன் திரைப்பட நடிகனாகவும் இருப்பதே. அவனே அந்தக் குற்றத்தைச் செய்தவன். அவனைக் குழுவை விட்டு நீக்குவது குறித்து மற்ற 11 ஆண்களும் கலந்துரையாடுகிறார்கள். ஆனால், அந்த முடிவை எடுக்க வேண்டாம், அவனுக்கு அந்தத் தண்டனை அவசியமா என்பது முதலில் ஒரு சிலருடைய கேள்வியாக இருக்கிறது. அது எப்படிப் பெரும்பான்மையினரின் கேள்வியாக மாறுகிறது என்பதையே படம் ஆராய்கிறது.
ஒரு புள்ளியில் நாயகியே சொல்வதுபோல் ஹரி அந்தத் தவறைச் செய்திருக்கவில்லை என்றால், வேறு யார் அதைச் செய்தது என்பது குறித்து யாருமே வாய்திறப்பதில்லை. ‘ஆண்கள் எல்லாரும் உத்தமர்தானா?’ என்கிற கேள்வியின் விரிவுதான் ஆட்டம் திரைப்படம். அதே குழுவில் இருக்கும் நாயகியின் காதலன் (வினய் ஃபோர்ட்), பல வகைகளில் நாயகிக்கு ஆதரவாக இருந்தாலும், ஒரு சந்தேகக் கேள்வியில் அவனும் சிக்கிக் கீழே சரிந்து விழுந்துவிடுகிறான்.
தமிழில் இதுபோன்ற கருப்பொருள் களைக் கொண்ட திரைப்படங்களில் அதிநாயக பிம்பமும் வன்முறை வெறியாட்டமும் திகட்டத் திகட்ட நம் தலையில் திணிக்கப்படும். மாறாக, எதார்த்தத்தின் அருகில் நின்று நம்மைக் கேள்வி கேட்கிறது ஆட்டம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலுக்கு எதிரான ‘# மீ டூ’ இயக்கம் சர்வதேச அளவில் மட்டுமல்லாமல், இந்திய / தமிழக அளவிலும் சமீப ஆண்டுகளாகப் பேசுபொருளாக இருந்துள்ளது. அது சார்ந்து அரசியல் ரீதியிலும் சமூகரீதியிலும் பெரிய மாற்றங்கள் வந்துவிடவில்லை. அதேநேரம் இந்தப் பாலியல் சுரண்டல் நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்பதையே, இப்போதுதான் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம்.
பல பிற்போக்குத்தனங்கள் நிறைந்த நமது சமூகத்தில் இதுபோன்ற ஆணாதிக்கச் சிடுக்குகள் அவ்வளவு எளிதில் பொதுச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவோ, அங்கீகரிக்கப்படவோ செய்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதற்குப் பிறகே அதிலிருந்து எப்படி விடுபடுவது என்கிற நிலைக்கு நகர முடியும். இது சார்ந்து ஆண்களும் பெருமளவு பெண்களுமேகூடக் கேட்கத் தயங்கும் கேள்விகளை ஆட்டம் கேட்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT