Published : 02 Jun 2024 07:39 AM
Last Updated : 02 Jun 2024 07:39 AM
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ‘கான்’ திரை விழாவில் ‘கிராண்ட் பிரி’ விருது பெற்றிருக்கிறார் இந்திய இயக்குநர் பாயல் கபாடியா. இவர் இயக்கிய ‘All we Imagine as Light’, இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் படம் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறது. இந்தப் பிரிவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்ற இந்தியப் படமும் இதுதான்.
முன்னணி நடிகரும் நடிகைகளும் இல்லாத, ‘பிரபலம்’ ஆகாத பெண்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் படுதோல்வி அடையும் என்பது இந்தியத் திரையுலகின் எழுதப்படாத நம்பிக்கை. ஆனால், பாயல் கபாடியா இது போன்ற சட்டகங்களுக்குள் தன்னைத் திணித்துக்கொள்ளாதவர். விருது அறிவிக்கப்பட்டதுமே தன் படத்தில் நடித்த திவ்யபிரபாவின் கையைப் பிடித்துக்கொண்டு மேடையேற, அந்தப் படத்தின் இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த கனி குஸ்ருதி, சாயா கதம் இருவரும் அவர்களோடு சென்றனர். பெண்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் வெற்றி இது. “சிக்கல்கள் இல்லாத பாதுகாப்பான இடத்தில் கலை வெளிப்படாது” என்று சொல்லியிருக்கும் பாயல், சமூகம் மறைக்க நினைக்கிற இருட்டுப் பக்கங்களைத் தன் திரைப்படங்களில் துணிவோடு வெளிப்படுத்துகிறவர்.
‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படத்தில் நடித்திருக்கும் கனி குஸ்ருதி, ‘கான்’ திரை விழாவில் பங்கேற்கத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சர்வதேச அரங்குக்குக் கருத்துச் சொல்லவும் பயன்படுத்திக்கொண்டார். 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுவரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக் கொடியைப் பிரதிபலிக்கும்படியான தர்பூசணிப் பழத்துண்டு வடிவிலான கைப்பையை வைத்திருந்தார். தற்போது ரஃபா நகர் மீதான தாக்குதலுக்கு உலக அளவில் கண்டனம் வலுத்துவரும் நிலையில் நடிகை கனி குஸ்ருதியின் தர்பூசணிப்பழக் கைப்பை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
‘The Shameless’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகை விருது பெற்றிருக்கும் அனசுயா சென்குப்தா, இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நடிகை. காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்று டெல்லி பாலியல் விடுதியிலிருந்து தப்பிக்கும் பெண்ணைச் சுற்றி நகரும் கதை இது. மாற்றத்துக்கான குரல் களும் மக்களுக்கான கருத்துகளும் நிச்சயம் அங்கீகாரம் பெறும் என்பதை இந்தப் பெண்களின் வெற்றி உணர்த்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT