Published : 03 Mar 2024 07:43 AM
Last Updated : 03 Mar 2024 07:43 AM
‘சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அந்த மாற்றத்தை உங்களிடமிருந்து முதலில் தொடங்க வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சமூகத்தில் பல்வேறு துறைகளில் பல தடைகளை மீறிச் சாதித்துக் காட்டிய ஏழு திருநங்கைகளுக்கு ‘மாற்றம்’ விருதுகளை வழங்கிக் கௌரவப்படுத்தியது சென்னை, அண்ணாநகரில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மகளிர் கல்லூரியில் செயல்படும் ரோடராக்ட் கிளப்.
பன்முகத்தன்மை மற்றும் நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்டாடுவதற்கான சக்திவாய்ந்த விழாவாக அது அமைந்தது. சமூகத்தில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காகச் செயல்படும் அமைப்பை நீண்ட காலமாக நடத்திவரும் திருநங்கை நூரிக்குச் சிறந்த சமூகப் பணிக்கான விருதை வழங்கினர்.
கிராமியக் கலைவடிவமான கரகாட்டத்தில் தன் தனிப்பட்ட திறமையால் வியக்கவைக்கும் கே.மீனாட்சிக்குச் சிறந்த நுண்கலைஞருக்கான விருதும், முதன் முறையாக வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவுசெய்த சக்தி ஸ்ரீஷர்மிளாவுக்குச் சட்ட நிபுணருக்கான விருதும், ஆதரவற்ற திருநர் மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வழிகளை ஏற்படுத்தித் தரும் டாக்டர் இன்பா இக்னேஷியஸுக்குச் சிறந்த பரோபகாரத்துக்கான விருதும் வழங்கப்பட்டன.
‘காஞ்சனா’ திரைப்படத்தில் மருத்துவ மாணவியாக நடித்ததன் மூலம் பல திருநங்கைகளுக்கு உத்வேகம் அளித்த பிரியாவுக்குச் சிறந்த திரைப் பங்களிப்பாளருக்கான விருதும், ஆளில்லா விமானத்தை இயக்கும் பயிற்சியாளரான பிரக்யாவுக்குச் சிறந்த தொழில்நுட்ப வித்தகருக்கான விருதும், தனியார் நிறுவனத்தில் மனித வள அதிகாரியாகப் பணியாற்றும் காவியா லம்பாவுக்கு வணிக நிர்வாகத் துறைக்கான விருதும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சமூக ஆர்வலரான நடிகை சாய் தீனா, பாடகர் தினேஷ், நடிகர் பிரகாஷ் ஆகியோர் விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசினர்.
தாங்கள் கடந்துவந்த பாதையில் குறுக்கே இருந்த பல தடைக்கற்களைத் தகர்த்து எறிந்துதான் இத்தகைய சாதனைகளைத் திருநங்கைகள் சமூகம் நிகழ்த்திவருகிறது என்பதைத் தெரிவிக்கும் வகையில் ‘பாத் பிரேக்கர்’ என விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. முழுக்க முழுக்க மாணவிகளே விழா ஏற்பாடுகளை மிக நேர்த்தியாகவும் திட்டமிடலுடனும் செய்திருந்ததைப் பாராட்ட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT