Published : 25 Feb 2024 06:09 AM
Last Updated : 25 Feb 2024 06:09 AM

பெண்கள் 360: மகளிர் மட்டும் ஜிம்

பெரும்பாலான பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்கிற விவாதம் ஒரு பக்கம் இருக்க, சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்வதற்குக்கூடப் பலர் நேரம் ஒதுக்குவதில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லும் நிலையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையும் அனைத்துப் பெண்களுக்கும் இருப்பதில்லை. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதற்காக ரூபாய் பத்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சியின் 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதோடு, பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படச் சாத்தியமுள்ள கர்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘கால்சென்டர்கள்’ அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறையிலும் பாதுகாப்பின்மை?

பெண்கள் சிறையில் இருக்கும் கைதிகளில் சிலர் சிறைக்குள்ளேயே கருவுறுவதும் குழந்தை களைப் பிரசவிப்பதும் அதிகரித்து வருவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளது. மேற்கு வங்கச் சிறைகளில் அளவுக்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்படுவது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தபஸ் குமார் சமர்ப்பித்த விசாரணை முடிவுகள் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. மேற்குவங்க மாநிலத்தின் சிறைகளில் தற்போது 196 குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். சிறைக்குள் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இது எழுப்புகிறது.

தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்துப் பெண் கைதிகள் சொல்லும் புகார்களைச் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது. பெண்கள் சிறை வளாகத்துக்குள் ஆண் அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதுதான் நடைமுறை. அதையும் மீறி, பெண்கள் கருவுறுவது, சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையே காட்டுகிறது.

சிறையில் இருக்கும் பெண்கள், பாலியல் வல்லுறவால் கருவுறுவதும் குழந்தைகளைப் பிரசவிப்பதும் மோசமான அதிகார அத்துமீறல். சிறையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் சரியான முறையில் நடைபெறாததன் விளைவே இது. சிறையில் இருக்கும் பெண்கள்தானே என்கிற அலட்சிய மனோபாவத்தின் வெளிப்பாடாகவும் இதைக் கருதலாம். சிறையில்கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே நிதர்சனம்.

திருநருக்கு உயர்கல்வி

சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய செயல்பாடுகளே சமூக நீதியை நிலைநாட்டும். அந்த வகையில் திருநர் சமூகத்தினரின் முன்னேற்றத் தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் எனத் தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. “தமிழகத்தில் திருநர் சமூகத்தைச் சேர்ந்த மிகச் சிலரே உயர்கல்வி பயின்றுவரும் நிலையில் உயர் கல்வி பயில விரும்பும் திருநர்களின் கல்விக் கட்டணம், தங்கும் விடுதிச் செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். திருநர் சமூகத்தினருக்காக 2008இல் நலவாரியம் ஏற்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான். அதைத் தொடர்ந்து 2021இல் மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபோது அதைத் திருநர் சமூகத்தினருக்கும் விரிவாக்கியது பாராட்டுக்குரியது.

பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிப்பதற்காகத் தமிழகத்தின் முக்கியமான ‘சிப்காட்’ வளாகங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் தனியார் உதவியோடு அமைக்கப்படவிருப்பதாகவும் 2024-2025 நிதியாண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மகளிர் தினமும் தாய்மையும்

இந்தியக் குடும்பங்களில் திருமணம் நடந்தவுடன் குறைந்தது ஓராண்டுக்குள்ளேயே குழந்தை பிறந்துவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. குழந்தை பிறப்பது தள்ளிப்போனால், சம்பந்தப்பட்ட தம்பதி அனைத்துவிதமான மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுவர். எப்பாடுபட்டாவது ஒரு குழந்தையைப் பிரசவித்துவிட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பெண்களின் மீது திணிக்கப்படுகிறது. மக்களின் இந்த மனநிலையைச் சில தனியார் செயற்கைக் கருவூட்டல் மையங்களும் மருத்துவமனைகளும் பயன்படுத்திக்கொள்கின்றன. மருத்துவரீதியாகச் சிக்கல் இருக்கிற தம்பதிக்குச் சிகிச்சை அளிப்பதுதான் செயற்கைக் கருத்தரித்தல் மருத்துவமனைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், தாய்மை என்பது மட்டுமே பெண்ணின் அடையாளம் என்பதாக நிறுவி, அதைத் தக்கவைக்கவும் நிரூபிக்கவும் தாங்கள் உதவுவதாகச் சில தனியார் மருத்துவமனைகள் பரப்புரை செய்வது மோசமானது.

அடக்குமுறைகளில் இருந்து பெண்கள் விடுதலை பெறவும் பெண்ணுரிமையை நிலைநாட்டவும் கொண்டாடப்படுகிற மகளிர் தினத்தைக்கூட மகப்பேறு சிகிச்சையோடு இணைக்கிற செயற்கைக் கருவூட்டல் மையங்களும் இருக்கின்றன. மகளிர் தினத்தையொட்டி இலவசப் பரிசோதனை என்கிற அறிவிப்போடு ‘90 நாள்களில் தாய்மை’ என்று வாக்குறுதி அளிப்பது மோசமான முன்னுதாரணம். குழந்தை பெற்றுக்கொண்டால்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்கிற பிற்போக்குவாதத்தை உயர்த்திப் பிடிக்கிற இதுபோன்ற வாக்குறுதிகளை அளிப்போரை அரசு கட்டுப்படுத்த வேண்டும். செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவமனைகளில் நடைபெற்றுவரும் முறைகேடுகளைத் தடுக்க அது சார்ந்த சட்டமும் வழிகாட்டும் நெறிமுறைகளும் வெளியிடப்பட்ட பிறகும் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியாவது கண்டிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x