Last Updated : 04 Feb, 2024 08:43 AM

 

Published : 04 Feb 2024 08:43 AM
Last Updated : 04 Feb 2024 08:43 AM

பெண்கள் 360: முதல் சுபேதார்

பாதுகாப்புப் படைகளில் பணிக்குச் சேர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை சொற்பமாக இருக்கும் நிலையில் ராணுவப் படைப்பிரிவில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறார் பிரீத்தி ரஜக். துப்பாக்கிச் சுடுதலில் காற்றில் நகரும் இலக்கைக் குறிபார்த்துச் சுடும் வீராங்கனை இவர். அந்தப் பிரிவில் சிறந்து விளங்கியதற்காக ராணுவக் காவல் பிரிவில் ஹவில்தார் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. ராணுவத்தில் பணிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இவர். 2022இல் சீனாவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நகரும் இலக்கைக் குறிபார்த்துச் சுடும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். இந்த வெற்றிதான் ராணுவத்தில் பதவி உயர்வு பெறக் காரணமாகவும் அமைந்தது.

நகரும் இலக்கைச் சுடும் பிரிவில் இந்திய அளவில் ஆறாம் இடத்தில் இருக்கும் இவர், தற்போது ’சுபேதா’ராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். ராணுவத்தில் சுபேதார் பொறுப்பு வகிக்கும் முதல் பெண் என்கிற பெருமையையும் பிரீத்தி பெற்றிருக்கிறார். பிரீத்தியின் திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் விளையாட்டிலும் ராணுவத்திலும் அவர் செலுத்திய பங்களிப்புக்கும் இந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பெண்கள் முன்னிலை

கேரளம், தெலங்கானா, ஹரியாணா, அசாம் உள்ளிட்ட 26 இந்திய மாநிலங்களில் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளில் ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என உயர்கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பு (2021-2022) முடிவுகள் தெரிவிக்கின்றன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆசிரியர் - மாணவர் விகிதம் போன்றவை இதைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 2014-15 முதலே பெண்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரித்துவருகிறது. 18 – 23 வயதினரை உள்ளடக்கிய இந்தக் கணக்கெடுப்பின்படி பொறியியல், வணிகவியல் தவிர்த்த கலை, அறிவியல் உள்ளிட்ட பெரும்பாலான கல்விப்புலங்களில் உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x