Last Updated : 28 Jan, 2024 08:11 AM

 

Published : 28 Jan 2024 08:11 AM
Last Updated : 28 Jan 2024 08:11 AM

வாசகியரின் உற்சாகத்தால் வண்ணமயமான ஈரோடு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ’பெண் இன்று’ சார்பில் ஈரோட்டில் ஜனவரி 21 ஞாயிற்றுக்கிழமை அன்று மகளிர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க, காலை முதலே வாசகியர் வரத் தொடங்கினர். சிந்தனைக்கு விருந்தளிக்கும் பேச்சரங்கமும் மனதுக்கு மகிழ்வளிக்கும் விளையாட்டுப் போட்டிகளுமாக நாள் முழுவதையும் வாசகியர் உற்சாகத்துடன் கழித்தனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொள்வது என ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி ரமேஷ் பேசினார். “கூட்டுக் குடும்பமாக இருந்தபோது சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளை ஆண்கள் செய்யத் தயங்கினர். ஆனால், இந்தத் தலைமுறையில் அதுபோன்ற சிக்கல்கள் குறைவு. ஆண்களும் சமையல் செய்கின்றனர். இது வரவேற்கக்கூடியது.

ஒருபுறம் இப்படி இருக்க, இன்னொருபுறம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் சிறுமியர் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு இருந்தால் குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம். 18 வயதுக்குக் குறைவான பெண்கள் விருப்பப்பட்டு, காதலித்துத் திருமணம் புரிந்தாலும் சம்பந்தப்பட்ட ஆண் மீது ’போக்சோ’ வழக்கு பதிவு செய்யப்படும். குடும்பங்கள் இதை உணர வேண்டும்.

ஈரோட்டில் வளர்ப்புத் தந்தையால் ஒரு பெண் குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு ஏற்பட்டது. அது பற்றிக் குழந்தையின் ஆசிரியை மூலம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தங்கள் குழந்தையைப் பற்றிய விஷயம் வெளியே தெரிந்தால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்கிற அச்சத்திலேயே பலரும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை வெளியே சொல்வதில்லை. இது தவறு. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர், வயது, ஊர் உள்ளிட்ட எந்த அடையாளமும் வெளியிடப்படாது. எனவே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படும் பெண் குழந்தைகளின் பெற்றோரும் அவர்களைச் சார்ந்தோரும் தைரியமாகக் காவல் நிலையங்களுக்கு வந்து புகார் அளிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் தந்தையால் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுத் தண்டனை பெற்றுத்தரப்பட்டது. தெரிந்த நபருடன்கூடப் பெண் குழந்தைகளைத் தனியாக அனுப்பக் கூடாது. பெண் குழந்தைகளுடன் பெற்றோர்கள், நண்பர்கள் போல உரையாட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வார்கள்” என்றார் வழக்கறிஞர் சுமதி.

பெண்களின் பாதுகாப்பில் காவல்துறையின் பங்கு குறித்து ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.சங்கீதா பேசினார்: “பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் ’போக்சோ’ சட்டம், பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல... ஆண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படும்போதும் ’போக்சோ’ வழக்குகள் பதிவு செய்யப்படும். 18 வயதுக்கு உள்பட்ட பெண்கள்போலவே, ஆண்களும் குழந்தைகள்தாம்.

வீட்டைவிட்டு எங்கே போவது என்கிற பயத்திலேயே பெண்கள் பலர் குடும்ப வன்முறையைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்தக் கவலை தேவையில்லை. அரசு ’ஒன் ஸ்டாப் சென்டர்’களை நடத்திவருகிறது. குடும்ப வன்முறையாலோ பிற சிக்கல்களாலோ வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள் அந்த மையங்களில் இரண்டு, மூன்று நாள்கள் தங்கவைக்கப்படுவர். அவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்பட்டு, அதற்குப் பிறகு அவர்கள் எங்கே செல்வது என முடிவெடுக்கப்படும்.

தற்போது பெண்களுக்கு எதிரான சைபர் குற்றகள் அதிகமாக நடைபெறுகின்றன. ஸ்மார்ட் போன்கள் நம் அனைத்து அந்தரங்கத் தகவல்களையும் ’ஆப்’கள் மூலம் அறிந்துகொள்ளும். இலவசமாகத் தரவிறக்கம் செய்கிற ’ஆப்’கள் அனைத்தும் ஆபத்தானவையே. பெண்கள் தங்களது மொபைல் போனில் ’காவலன் SOS’ செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இக்கட்டான காலத்தில் அந்தச் செயலி மூலம் தகவல் அளித்தால் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு உங்களை ஆபத்திலிருந்து காக்கும். குழந்தைகளின் பாதுகாப்புக்காக 1098 என்கிற கட்டணமில்லாத் தொலைபேசி எண் இருப்பதுபோல், பெண்களின் பாதுகாப்புக்காக 181 என்கிற எண் உள்ளது. அதன் மூலமும் பெண்கள் புகார் செய்யலாம்” என்றார் சங்கீதா.

பேச்சரங்கம் முடிந்ததும் சாதனைப் பெண்ணைக் கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது. எறிபந்து விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீராங்கனை வாசுதேவகிக்கு ’உஜாலா லிக்விடு டிடர்ஜென்ட்’ சார்பில் பரிசு கூப்பனோடு ’வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ என்கிற விருது வழங்கப்பட்டது.

வாசுதேவகி

தான் கடந்து வந்த பாதையைப் பற்றி வாசுதேவகி பகிர்ந்துகொள்ள, கலைநிகழ்ச்சிகள் வரிசைகட்டின. ஈரோடு ’கலைத்தாய்’ கலைக்குழு சார்பில் பறையாட்டம், சிலம்பாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், ஒயிலாட்டாம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வோர் ஆட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அதைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைச் சொன்னது சிறப்பு.

கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, வாசகியர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த போட்டிகள் தொடங்கின. பலூன் உடைத்தல், பொட்டு ஒட்டுதல், பால் பாஸ் செய்தல், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ஈரோட்டின் சிறப்பு குறித்த கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்த வாசகியருக்கு உடனடியாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் முத்தாய்ப்பாக இரண்டு வாசகியருக்கு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற வாசகியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சுதா மருத்துவமனை சார்பில் வாசகியருக்கு ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

ஈரோடு மகளிர் திருவிழாவை, ’இந்து தமிழ்’ நாளிதழுடன் இணைந்து, உஜாலா லிக்விடு டிடர்ஜென்ட், ப்ரெஸ்டா உமன்ஸ் வியர், ரத்தோர் எண்டர்பிரைசஸ் 115 கலெக் ஷன்ஸ், பவிழம் ஜுவல்லர்ஸ், ஹே உமன்ஸ் வியர், நாராயணா பேர்ல்ஸ், மில்கா வொண்டர் கேக், சக்தி மசாலா, சுதா மருத்துவமனை, எஸ்.கே.எம். பூர்ணா ஆயில், ரோஷன் பேக், அமிர்தா வெட் கிரைண்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

விழா நடைபெற்ற அரங்குப் பங்களிப்பாளராக ஈரோடு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினரும், டீ பார்ட்னராக வாக் பக்ரி டீ நிறுவனமும் இணைந்தனர். நிகழ்ச்சியைச் சின்னதிரை தொகுப்பாளர் தேவிகிருபா தொகுத்து வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x