Last Updated : 28 Jan, 2024 08:33 AM

 

Published : 28 Jan 2024 08:33 AM
Last Updated : 28 Jan 2024 08:33 AM

என் பாதையில்: மனைவி கணவனின் உடைமையல்ல

இந்தியச் சமூகத்தில் திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போடும் நிகழ்வாக அமைவதை மறுக்க முடியாது. குழந்தைப் பருவத்திலிருந்து பெண், ஆண் இருபாலரும் ஒரே மாதிரியான வளர்ப்பு, கல்வி, பணி என்று இருந்தாலும்கூடத் திருமண வாழ்க்கை என்று வரும்போது பெண்ணின் அனைத்துத் தகுதிகளும் திறமைகளும் புறக்கணிக்கப்பட்டுக் கணவனுக்காகவே வாழவேண்டியவளாகச் சமூகம் கட்டுப்படுத்துகிறது. பெண்ணின் குறிக்கோளோ, மன மகிழ்வோ ஒரு பொருட்டாகக்கூடப் பெரும்பாலான குடும்பங்களில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

பெண்ணுக்கென்று தனித்த சிந்தனையுண்டு, அவளுக்கென்று ஆசைகளுண்டு என்பதைச் சிந்திக்கத் தவறிய சமூகமாகவே நம் சமூகம் இன்றும் செயல்படுகிறது. திருமணத்துக்குப் பிறகும் பெண்ணின் அடையாளத்தைச் சிதைக்காத, அவளது லட்சியப் பயணத்துக்குக் கைகோத்து உடன்வரும் ஆணை உருவாக்க இச்சமூகம் கூட்டாக முயல வேண்டும். இப்படியான கருத்தாக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை குறித்த புரிதலை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும். ஆனால், சில ஊடகங்களே இச்சிந்தனைக்கு எதிரான மனநிலையில் செயல்படுவதையும் காண முடிகிறது. திரையில் மின்னும் நடிகைகள், ’திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்’ என்று கூறுவதைக் காலம் காலமாகக் கேட்டுப் பழகியவர்கள் நாம். அந்த நடிகைகளை மணந்துகொண்ட நடிகர்களும் இதை வழிமொழிவார்கள்.

சில மாதங்களுக்கு முன் திருமணம் புரிந்துகொண்ட நடிகர் அசோக் செல்வனிடம் ஊடகவியலாளர் ஒருவர், “உங்கள் மனைவி இனி நடிப்பாரா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அசோக் செல்வன், “நான் அவருக்கு ஓனர் அல்ல, பார்ட்னர்தான்” என்று பொட்டில் அறையும்படி பதிலளித்துள்ளார். அதே போன்று கீர்த்தி பாண்டியனிடம், “உங்களுக்குத் திருமணமாகிவிட்டது. இனித் திரைப்படங்களில் நடிப்பீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்க, “இதே கேள்வியை என் கணவர் அசோக் செல்வனிடம் கேட்பீர்களா?” என்று திருத்தமாகப் பதிலளித்துள்ளார். பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையைத்தான் இந்தக் கேள்விகள் பிரதிபலித்துள்ளன.

மனமுதிர்ச்சியோடும் பெண் மீதான மதிப்போடும் நடிகர் அசோக் செல்வன் அளித்த பதிலை அவருடைய மனைவிக்கானதாக மட்டும் பார்க்க இயலாது. ஒட்டுமொத்த ஆணாதிக்கச் சமூகக் கருத்தியல்களைப் புரட்டிப்போட்ட பதிலாகத்தான் அது அமைந்துள்ளது. பெண்ணை ஆணின் இணைப்பாக மட்டுமே பார்க்கும் பார்வையை இனியேனும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. திருமணத்துக்குப் பிறகும் பெண்ணுக்கு இலக்குகள் உண்டு, தன் குறிக்கோளை நோக்கிப் பயணிக்க உத்வேகம் உண்டு, சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை உண்டு என்று புரியவைக்க வேண்டிய காலம் இது. திருமணத்துக்குப் பிறகு மனைவியை உடைமைப் பொருளாக எண்ணாமல், அவளது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும், அவளது லட்சியங்களுக்குத் தோள்கொடுக்கும் சக தோழனாகக் கணவன் விளங்கும்போது மட்டுமே மனைவியால் உரிமையோடும் விடுதலையோடும் மகிழ்வோடும் வாழமுடியும். பரந்த மனப்பாங்கும் முதிர்ச்சியான சமூகப் பார்வையும் மட்டுமே இன்றைய திருமண வாழ்க்கைக்குத் தேவை. பெண்ணை மதிக்கும் மனநிலையை இச்சமூகத்தில் உருவாக்குவது மட்டுமே பெண்ணைப் பிற்போக்குத்தனமான கட்டுகளிலிருந்து விடுவிக்கும்.

- ஏ.இராஜலட்சுமி

நீங்களும் சொல்லுங்களேன்...

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். முகவரி: இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x