Published : 25 Jan 2024 05:33 PM
Last Updated : 25 Jan 2024 05:33 PM
திருநர் சமூகத்தைச் சேர்ந்த 300 பேருக்கு 15 விதமான தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் சகோதரன் தன்னார்வ அமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிஜிஐ ஆகியவற்றால் லயோலா கல்லூரி வளாகத்தில் அண்மையில் தொடங்கப்பட்டது.
இதில் குறுகிய பயிற்சிகளாக பூ, கூடை முடைதல், மூலிகைகளைக் கொண்டு சோப் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளையும், அழகுக் கலை, மூன்று, நான்கு சக்கர வாகனம் ஓட்டுவது, கணினிப் பயிற்சி, சிறப்பு கணினிப் பயிற்சி உள்ளிட்ட நீண்ட கால பயிற்சிகளை அளிக்கும் திட்டத்தை உடல் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கிவைத்துப் பேசினார்.
"திருநர் சமூகத்தினருக்கு பலன் அளிக்கும் விதமாக நலவாரியம் தொடங்கியது முதல் பல்வேறு நலத்திட்டங்களை அரசு நடத்திவருகிறது. சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் திருநருக்கான பிரத்யேகமான சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கும் அங்கு வசதி உள்ளது. அவர்களுக்கான பாலின மாற்று சிகிச்சைகளையும் அங்கு செய்துகொள்ளலாம்.
234 தொகுதிகளில் ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி பெற்ற 500 பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் ஆட்டோ வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் என்னுடைய தொகுதியைச் சேர்ந்த 150 நபர்களுக்கு (147 பெண்கள், 2 திருநங்கை, 1 திருநம்பி) ஆட்டோ ஓட்டுவதற்குப் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆட்டோவும் கிடைப்பதற்கு வழிசெய்தேன். தற்போது சிஜிஐ நிறுவனம் வழங்கும் குறுகியகால பயிற்சி, நீண்டகால பயிற்சிகளை முறையாகக் கற்றுக் கொண்டு சான்றிதழ்களைப் பெறுபவர்களுக்கு அவர்கள் பயிற்சி பெற்ற துறைகளுக்கேற்ற உதவிகளை அரசு மானியத்துடன் அளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. மனிதனுக்கு சுயமரியாதை அவசியம். சுயமரியாதையுடன் வாழ்வதற்கு சுயதொழில் அவசியமானது." இவ்வாறு அவர் பேசினார்.
சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன், சிஜிஐ நிறுவனத்தின் துணைத் தலைவர் கோபிநாத் தட்சிணாமூர்த்தி, சகோதரன் தன்னார்வ அமைப்பின் நிறுவனர், இயக்குநர் சுனில் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT