Published : 21 Jan 2024 08:35 AM
Last Updated : 21 Jan 2024 08:35 AM
உடலையும் மனதையும் ஒருசேரக் குலைக்கும் கொடுமையிலிருந்து மரணம் ஒன்றே விடுவிக்கும் என்கிற நிலையில்தான் ‘ஆறுதல் மகளிர்’ இருந்தனர். ஆனால், போர் முடியும் வரைக்கும் உயிர்த்திருக்க வேண்டும் என லீ ஓக் சான் முடிவெடுத்தார். அது மரணத்தைவிடவும் கொடுமையாக இருந்தது. ஜப்பான் சரணடைந்தது, போர் முடிவுக்கு வந்தது. லீ ஓக் சான் அடைத்துவைக்கப்பட்டிருந்த ‘ஆறுதல் மைய’த்தின் நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். அங்கிருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விடுதலை கிடைத்தது. ஆனால், எங்கே செல்வது என்கிற கேள்வியும் குழப்பமுமே அவர்களுக்கு மிஞ்சின.
“நான் எங்கே போக முடியும்? என் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தப்பட்ட அவமானத்தோடு என்னால் ஊர் திரும்ப முடியுமா? நான் ஆறுதல் மையத்தில் இருந்தேன் என்று என் முகத்திலேயே எழுதப்பட்டிருக்கிறதே, இதை வைத்துக்கொண்டு நான் என் ஊரில் நடமாட முடியுமா? இந்த அடையாளத்தைச் சுமந்துகொண்டு என் அம்மாவைப் பார்க்கிற துணிவு எனக்கு இல்லை” என்று தான் அன்றைக்குக் கடந்துவந்த வேதனையைப் பகிர்ந்துகொண்ட லீ ஓக் சான், பல நாள்களைத் தெருக்களில் தூங்கிக் கழித்தார். கொரியாவுக்குச் செல்லாமல் சீனாவிலேயே தங்க முடிவெடுத்தார். மனைவியை இழந்த ஒருவரை மணந்துகொண்டு அவருடைய குழந்தைகளை வளர்த்தார். ‘ஆறுதல் மைய’த்தில் அவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையால் ‘சிஃபிலிஸ்’ எனப்படும் பால்வினை நோயால் தாக்கப்பட்டு மோசமான நிலைக்குச் சென்றார். அதிலிருந்து மீண்டு, ‘ஆறுதல் மைய’ங்களில் அடைக்கப்பட்டுத் தன்னைப் போலவே பாதிப்புக்குள்ளான பெண்களோடு சேர்ந்து நீதி கேட்டுப் போராடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT