Published : 24 Dec 2023 09:46 AM
Last Updated : 24 Dec 2023 09:46 AM
திருமணத்துக்குத் தேவை மனமா, பணமா என்பதைத் தாண்டி குடிப்பழக்கம் இல்லாதவன் என்பதும் அடிப்படைத் தகுதியாகிறது. அன்பு மகளை ஆசை ஆசையாக வளர்த்து, நன்கு படிக்கவைத்து, நல்ல வேலையில் அமர்த்திவிட்டு மாப்பிள்ளை தேடும்போது பையன் நன்றாகப் படித்திருக்கிறானா, நல்ல வேலையில் இருக்கிறானா, கை நிறைய சம்பாதிக்கிறானா என்பதை மட்டும் பார்த்துத் திருமணத்தைப் பெற்றோர் முடிவு செய்கிறார்கள். பையனுக்குக் குடிப்பழக்கம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. அப்படியே அவனுக்குக் குடிப்பழக்கம் இருப்பதாகத் தெரிந்தாலும்கூட, ‘இந்தக் காலத்துல யாரு குடிக்காம இருக்கா?’ என்று அசட்டை செய்துவிடுகின்றனர்.
குடிப்பழக்கம் அதிகரித்து குடிநோயாளியாக மாறுவோர் திருமணமாகி இரண்டு, மூன்று வருடங்களிலேயே மரித்துப் போக, எந்தப் பாவமும் அறியாத அந்தப் பெண்ணோ கைக்குழந்தையுடன் ‘கணவனை விழுங்கியவள்’ என்கிற பட்டத்துடன் படாதபாடெல்லாம் படுகிறாள். அவளுடைய பெற்றோரும் மனம் உடைந்து இனி வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்பதுபோல் ஆகிவிடுகிறார்கள். ஒருவன் குடித்தான்,செத்தான் என்கிற அளவில் இந்தப் பிரச்சினை நிற்பதில்லை. அவனுடைய மனைவி, பிள்ளைகள் என அவனோடு தொடர்பில் இருந்தவர்களையும் பாதிக்கிறது.
கணவன் இறந்த பிறகு தன் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கும்போது ஏறக்குறைய எல்லாப் பெண்களுமே கணவனின் பெயரைத்தான் இனிஷியலாக வைக்கிறார்கள். அவன் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் இவர்களே செய்கிறார்கள். அவன் இல்லை. ஆனால், அவன் இனிஷியல் மட்டும் இருக்கிறது. ஒன்றுக்கும் உதவாதவன் போய்விட்டான். ஆனால், இந்தச் சமூகத்துக்கு அவன் பெயர் முக்கியமானதாக இருக்கிறது. அந்த இனிஷியலுக்குப் பின்னால் ஒரு பெண்ணின் கண்ணீர் வலியும் அவமானமும் இருக்கின்றன. இப்படி உயிரற்ற இனிஷியலை வாங்குவதற்காகவா எக்கச்சக்கமாகச் செலவுசெய்து பெண்ணுக்குத் திருமணம் செய்கிறார்கள் பெற்றோர்கள்? அந்த இனிஷியலுக்கு உரியவன் உயிரோடு இருக்க வேண்டும். அவன் தன் கடமையைச் செய்ய வேண்டும்.
குடிப்பவர்கள் எல்லாரும் அல்ப ஆயுசிலா போகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். எல்லாரும் இள வயதிலேயே சாவதில்லைதான். ஆனால், அவன் குடும்பம் நடத்துகிற லட்சணம் எப்படி இருக்கும்? தன்னையே கவனித்துக்கொள்ளாதவன், தான் குடிப்பதால் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழந்து வருகிறது என்கிற உணர்வே இல்லாதவன் எப்படித் தன் மனைவியையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வான்? தன் பிள்ளைகளை எப்படி வளர்ப்பான்?
குடிக்கே நிறைய பணத்தைச் செலவழிப்பதால் அவன் குடும்பம் உயர்ந்த நிலைக்கு வர முடியுமா? இந்தச் சமூகத்தில் கௌரவமான ஓர் இடம் அவனுக்குக் கிடைக்குமா? தன்னை மணந்துகொண்டான் என்கிற காரணத்துக்காக அந்தப் பெண் காலம் முழுவதும் அவனுடன் போராட வேண்டுமா? இதுவே படிப்பு, சம்பளம் போன்றவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும்கூடக் குடிப்பழக்கம் இல்லாதவனாக இருந்தால் அந்தப் பெண் வாழ்க்கையில் கொஞ்சமாவது நிம்மதியாக வாழ முடியும்.
பெண்ணைப் பெற்றவர்கள் எல்லாரும் குடிப்பழக்கம் உள்ளவனுக்குப் பெண்ணைத் தர மாட்டோம் என்கிற திடமான முடிவுக்கு வந்தால்தான் குடிமகன்கள் எண்ணிக்கை கொஞ்சமாவது குறையும். நல்ல படிப்பு இருக்கிறது, நல்ல வேலை இருக்கிறது, நிறைய சம்பளம் வருகிறது. அதனால், தனக்கு எப்படியும் பெண் கிடைத்துவிடும் என்கிற துணிச்சலில் ஆண்கள் பலர் குடிப்பழக்கத்தைத் தவறான பழக்கமாக நினைப்பதில்லை. அவர்களது எண்ணம் உண்மையும் கூட. திருமண மேடையில் ‘காஸ்ட்லியான’ மாப்பிள்ளையை நிறுத்தினாலே குடும்பத்துக்குப் பெருமை தன்னாலே வந்துவிடும் என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கிறார்கள். இது குடிகார மாப்பிள்ளைகளுக்கு வசதியாகிவிடுகிறது.
பெண்ணைப் பெற்றவர்கள் ‘குடிப்பழக்கம் இல்லாதவன்’ என்கிற தகுதியை முதன்மைப்படுத்தி வரன்பார்க்க ஆரம்பித்தால் பெரும்பாலான பெண்களின் வாழ்வு நலமாக அமையும்.
- ஜே. லூர்து, மதுரை.
நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். முகவரி: இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT