Published : 22 Oct 2023 07:22 AM
Last Updated : 22 Oct 2023 07:22 AM
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொதுமுடக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள்தாம். என்ன செய்வது என்று அவர்களுக்கும் தெரியவில்லை. அவர்களை வீட்டில் எப்படிச் சமாளிப்பது என்று பெற்றோர்களுக்கும்புரியவில்லை. பொதுமுடக்கக் காலத்தில் தெருவில் குழந்தைகளின் குரல்கள் குறையத் தொடங்கின. ஆரவாரம் இன்றித் தெரு வெறிச்சோடியது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது புதிதாக உருவாக்கப்பட்டது ஒரு வாட்ஸ்அப் குழு.
ஏதாவது தலைப்பு கொடுத்து ஓவியங்கள் வரைந்தோ பாடல்களைப் பாடியோ குழுவில் பகிரலாம் என்று பதிவிட்டோம். ஓவியங்கள் வரைந்து அனுப்புபவர்களுக்குப் பரிசுகள் தரப்படும் எனச் சொன்னதும் குழந்தைகள் ஆர்வத்துடன் ஓடோடி வரத் தொடங்கினர்.
எங்கள் வீட்டில் மொட்டை மாடியில் நிறைய காலி இடம் இருந்ததும், அக்கம் பக்கத்து வீடுகளும் அவ்வாறே இருந்ததால் குழந்தைகள் கூடிப் பேசிட வசதியாக அமைந்தது.
செய்தித்தாள் வாசிப்பு தொடங்கியது. கேரம், செஸ் என விளையாட்டுகளும் தொடர்ந்தன.
விளையாட்டு அலுக்கும்போது புத்தகங்கள் வாசிக்கலாம் என்ற போதுதான் குழந்தைகள் வாசிப்பதற்கான புத்தகங்கள் வீட்டில் அவ்வளவாக இல்லை என்பதே தெரிந்தது. சரி, நூலகத்துக்கு அழைத்துச் சென்று உறுப்பினர் ஆக்கிவிடலாம் என்று அழைத்துச் சென்றபோதுதான் அங்கும் சிறார் புத்தகங்கள் இல்லை. எங்கள் பகுதியில் கிளை நூலகம் ஒன்று சற்றுத் தொலைவில் இருந்தது.
ஒருநாள் நூலகம் சென்று திரும்புகையில் கொளுத்திய வெயில் வேளையில், “நம்ம தெருவிலேயே ஒரு நூலகம் இருந்தால் நன்றாக இருக்குமே! அதுவும் நமக்குப் பிடித்த புத்தகங்களோடு” என்று குழந்தைகள் கேட்டனர். அது சிறந்த யோசனையாகத் தோன்றியது. அதற்குள் பள்ளிகள் தொடங்கிவிட, அந்த யோசனை அப்படியே தள்ளிப்போயிற்று.
மீண்டும் பள்ளிகள் சிறிது காலம் மூடப்பட்ட நிலையில் நூலகம் வேண்டும் என்கிற கோரிக்கையைக் குழந்தைகள் எழுப்பினர். நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கிடப் பணம் வேண்டும், இடம் வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அதை எங்கள் தெரு வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டோம். ’புக்ஸ் ஃபார் சில்ரன்’ பதிப்பகம் மூலம் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்க முதல்கட்டமாக 6,500 ரூபாய் தேவை என்று தெரிவிக்கப்பட்டது. தெருப் பெண்கள் உடனடியாகத் தங்களால் இயன்ற தொகையைத் தர முன்வந்தார்கள். அரை நாளுக்குள் 7,500 ரூபாய் கிடைத்துவிட்டது. 2022 நவம்பர் 14 இல் குழந்தைகளை வைத்தே திறப்புவிழா கண்டது எங்கள் ‘தெரு நூலகம்’. இப்போது 500க்கும் மேல் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன.
குழந்தைகள் உற்சாகமாக வாசிக்கிறார்கள், வாசித்ததைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கதைகள் சொல்லியும் கேட்டும் மகிழ்கிறார்கள். வாசித்த கதைகள் காட்சியாக்கப்பட்டு நாடகமாக, கவிதையாக, ஓவியமாக உருவெடுத்து வருகின்றன. குழந்தைகளோடு அம்மாக்களும் சேர்ந்து வாசிக்கிறார்கள், கதைகள் சொல்கிறார்கள். மாதந்தோறும் புத்தகங்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டு அவரவர் வீடுகளில் புத்தக அலமாரிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. வளரும் தலைமுறை வாசிக்கும் தலைமுறையாகட்டும். வாசிப்பின் வழி வானம் வசப்படட்டும்.
- சண்முக வடிவு, ஆத்தூர்.
புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT