Published : 01 Oct 2023 07:16 AM
Last Updated : 01 Oct 2023 07:16 AM
பெண்களை அதிகாரப்படுத்தும் 33% இட ஒதுக்கீடு குறித்துப் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால் உடனடியாக ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி 2024 தேர்தலிலேயே அமல்படுத்தப்படும் வகையில் முடிவெடுக்க முடியாதா?
புதிய நாடாளுமன்றத்தில் தனது முதல் தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் விதம்தான் கேள்விக்குறியாக உள்ளது. இந்த மசோதாவை அமலாக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு போன்ற நிபந்தனைகளை மத்திய அரசு சொல்லியிருக்கிறது. இதற்காகவா சிறப்புக் கூட்டம்? இதை ஆணாதிக்கத்தின் ஆணவப் போக்காகத்தான் பார்க்க முடிகிறது. அரசு நினைத்தால் தற்போதைய தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான இட இதுக்கீட்டைச் செயல்படுத்திவிட்டு 2029 தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பு செய்துகொள்ளலாம். இந்த மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட நிலையில், மாநிலச் சட்டமன்றங்களில் இதை அமல்படுத்துவதற்கான சிறப்புக் கூட்டத்தையும் நடத்தியிருக்கலாம்.
மற்ற எல்லாவற்றிலும் முன்னுதாரணமாகத் திகழும் தமிழ்நாடு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வழங்கி பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் முன்னோடியாகத் திகழலாம். பெண்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும் கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை வரும் தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகமாக அமையும்.
- எஸ். துரைசிங், திண்டுக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT