Published : 10 Sep 2023 07:17 AM
Last Updated : 10 Sep 2023 07:17 AM
ஒரு பெண்ணை அவமானப் படுத்துவது, அந்தப் பெண்ணிடம் மூர்க்கமாக நடந்துகொள்வது, அந்தப் பெண் எதிர்பார்க்கும் வகையில் அவரிடம் பண்பாக நடந்துகொள்ளாதது போன்றவை பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல்கள் அல்ல என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்னை ‘அழுக்கானவள்’ என்று பொருள்படுகிற சொல்லால் திட்டியதற்காகத் தன் கணவன் மீது ஒரு பெண் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின் மீதான தீர்ப்பில்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா.
நீதித் துறையில் பல்லாண்டுகளாக நிலவிவரும் பாலினரீதியிலான அடையாளப்படுத்துதல்களைக் களையும்விதமாக 30 பக்கங்கள் கொண்ட கையேட்டைக் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. பழமைவாதங்களின் அடிப்படையில் பெண்கள் மீது திணிக்கப்படும் பாலினரீதியிலான சொற்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு மாற்றுச்சொற்களைப் பரிந்துரைப்பது, பெண்கள் மீது சுமத்தப்படும் பாலின ரீதியிலான பிற்போக்குத்தனங்களைக் கண்டறிந்து அவை குறித்து விவாதிப்பது, பாலினரீதியிலான அடையாளப்படுத்துதலைக் கடந்த முன்னோடித் தீர்ப்புகளை முன்வைத்து, குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள் அவற்றைப் பின்பற்றும் வகையில் செய்வது போன்றவையே அந்தக் கையேட்டின் அடிப்படை நோக்கங்கள். ‘பெண்கள் என்றால் இப்படித்தான்’ என்று காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பிற்போக்குத் தனமான கருத்தாக்கங்களையும் சொல்லாடல்களையும் நீதிபதிகளும் நீதித் துறையில் செயல்படுவோரும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் ஒரு கையேட்டை வெளியிட்டிருக்கும் நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்தச் சர்ச்சைக்குரிய கருத்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT