Published : 06 Aug 2023 07:33 AM
Last Updated : 06 Aug 2023 07:33 AM

வாசகர் வாசல்: சுமையாகும் சிறப்பு வகுப்புகள்

மஞ்சள் வண்ணத் துணிக்கடைப் பையைத் தோளில் போட்டுக்கொண்டு தெரு முழுக்க இருக்கும் பெரிய, சிறிய, வயதொத்த பிள்ளைகள் ஒன்றாகக் கதை பேசிச் செல்லும் காலமெல்லாம் வரலாறாக மாறிவிட்டது.

வெள்ளை, நீல வண்ணச் சீருடைகள் பொதுமையாக இருந்தன. இன்று வண்ண வண்ணச் சீருடைகளாகத் தனிப்பட்ட நபரின் விருப்பங்களாக மாறிவிட்டன. ஆடைகளில் மட்டுமன்றி, உணவுக் கலாச்சாரமும் தற்போது மாறிவிட்டது. இடைவேளை நேரத்தில் ஓய்வறைக்குச் சென்று, அடித்துப் பிடித்துக்கொண்டு குழாயில் கை வைத்து லாவகமாக நீர் அருந்துவதே கலையாக இருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அப்படியல்ல. புட்டிகளில் நீர் அடைத்து, ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் டப்பாக்களில் கொண்டு வந்ததைத் தானே உண்ணும் கலாச்சாரம் வந்துவிட்டது.

பாடப் புத்தகங்களில் உள்ளவற்றை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிப்பார், அவற்றை மாணவர்கள் கற்றுச்சென்று வீட்டுப் பாடங்களை எழுதுவது ஒரு முறையாக இருந்தது. இன்றோ டியூஷன் என்கிற பெயரில் எங்கெங்கோ சென்று பள்ளிப் பாடத்தை மீண்டும் கற்கின்றனர். பாடங்களைப் படித்து மதிப்பெண்ணுக்குத் தயாராகும் கடினச் சூழலிலும் பள்ளிகளைவிடப் பயிற்சி மையங்கள் பெருகிவிட்டன.

கராத்தே ஒரு வகுப்பு, சிலம்பம் மற்றொரு வகுப்பு, நடனம், பாடல், செஸ், கிரிக்கெட் எனப் பிரத்யேக வகுப்புகளுக்குப் பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். தன் குழந்தை பள்ளிக்குச் செல்கிறது என்பதைக் காட்டிலும் அந்த வகுப்புக்குச் செல்கிறது, இந்த வகுப்புக்குச் செல்கிறது என்று கூறுவதிலே பெற்றோர்கள் பெருமிதம் அடைகின்றனர். பள்ளிக்குச் சென்று பாடம் படித்து அதை மதிப்பெண்ணாக மாற்றுவதே குழந்தைகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும் காலகட்டத்தில், பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றும் பெரும் பொறுப்பும் வந்துசேர்கிறது. பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரியும் குழந்தைகளைக் கதைகளிலும் கவிதைகளிலும் திரைப்படங்களிலும் மட்டுமே காணக்கூடிய காலமாக இது மாறிவருகிறது.

குழந்தைகள் விளையாட்டை இழக்கின்றனர், மகிழ்ச்சியை இழக்கின்றனர், நண்பர்களை இழக்கின்றனர், சிரித்துப் பேசுவதையே மறந்துவிட்டனர். குழந்தைகள் எதைச் சுமப்பது, எவ்வளவு காலம் சுமப்பது என்பது கேள்விக்குறியே. சுமைதாங்கிகளாக மாறிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ளும் காலம் எப்போது வரும்?

- அ. கிரேஸி மேரி, திருவெறும்பூர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x