Published : 09 Jul 2023 07:56 AM
Last Updated : 09 Jul 2023 07:56 AM
கொடைக்கானல் சென்று வந்த முதல் சுற்றுலாவைப் பற்றி எழுதலாமா, வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த என்னை, அடிக்கடி சென்று வரும் தஞ்சை ரயிலில் நடந்த நிகழ்வு பாதித்தது. தஞ்சையில் உள்ள என் பெரியம்மா வீட்டுக்குப் பெரும்பாலும் நான், என் அம்மா, என் தங்கை மட்டுமே செல்வோம்.
என் பெரியம்மா-பெரியப்பாவின் திருமண வெள்ளி விழா என்பதால் எங்கள் தந்தையும் எங்களுடன் வந்திருந்தார். திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் சற்று நெரிசலாகவே இருக்கும். நாங்கள் திருச்சி ரயில்நிலையத்தை அடுத்த முதல் நிறுத்தமான பொன்மலையில் ரயிலுக்காகக் காத்திருந்தோம். அங்கே அதிக நேரம் ரயில் நிற்காது என்பதால் எங்களை ஏதேனும் ஒரு பெட்டிக்குள் நுழைத்துக்கொள்ள வேகமாகச் சென்றோம். ஒரு பெட்டியில், நடுவில் நிற்பதற்கு இடம் இருக்கக் கண்டு, அதில் ஏற வந்தபோது படியின் அருகில் இருந்த இளைஞர் “இடமில்லை, இங்கே நுழையாதீர்கள்” என்று என் அம்மாவைத் தடுத்தார். என் அம்மாவோ முதலில் எங்களை ஏற்றிவிட எண்ணி எங்களை விரைவாகச் செல்லச் சொன்னார். கல்லூரிக்குச் சென்று வரும்போது கூட்ட நெரிசலில் பயணித்த எனக்கு, இருவர் வழியில் நிற்க அந்த இருவரிடையே இருந்த சிறிய இடைவெளிக்குள் புகுவது கடினமாகத் தெரியவில்லை. என்னைப் பின்பற்றி என் தங்கையும் புகுந்துவிட்டாள். வாசலைக் கடந்து காலியாக இருந்த நடுப்பகுதிக்கும் நாங்கள் சென்றுவிட்டோம்.
அந்த இளைஞரோ உள்ளே நுழைய வேண்டாம் என என் அம்மாவைத் தள்ளினார்போல. உடனே என் அப்பா அந்த இளைஞரை நோக்கிச் சத்தம்போட்டார். எப்படியோ அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்துவிட்டனர். என் அப்பாவும் அந்த இளைஞரும் கொஞ்சம் சத்தமாகத் தங்கள் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர். என் அப்பா இறுதியாக, உனக்கு வயதாகும்போது புரிந்துகொள்வாய் என நிறுத்திவிட்டார். அதற்கடுத்த நிறுத்தங்களில் அந்த இளைஞர் ஏதும் சொல்லாமல் பிறருக்கு வழிவிட்டார். இந்தப் பிரச்சினை பேருந்துகளிலும் அதிகம் நடக்கும். முதலில் ஏறியவர்கள் உள்ளே சென்று வழிவிட வேண்டுமா இல்லை பின்னால் ஏறுபவர்கள் உள்ளே செல்ல வேண்டுமா என்று பட்டிமன்றமே நடத்துவார்கள். சிலர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப்போவதாகச் சொல்லி வாசலிலேயே நிற்பர். என்னைப் பொறுத்தவரை நாம் உள்ளே சென்று வழிவிட வேண்டும். அவ்வாறு முடியாதென்றால், குறைந்தபட்சம் மற்றவர் உள்ளே செல்ல வழியாவது விட வேண்டும். பயணம் சிறிதெனினும் கற்றுக்கொண்ட பாடம் பெரிது. எங்கள் அடுத்த நிறுத்தத்தில் ஏறியவர்களுக்கு இடம் கொடுக்க நாங்கள் இன்னும் உள்ளே சென்றோம், அவர்களும் எங்களைப் போன்றவர்களே என உணர்ந்ததால்.
- பி. ஷைனி எபிமா, திருச்சி.
நீங்களும் சொல்லுங்களேன்... தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை பிறருக்குப் பாடமாக அமையும் அனுபவம் எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். இந்து தமிழ்திசை, பெண் இன்று, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT