Last Updated : 15 Jul, 2014 10:00 AM

2  

Published : 15 Jul 2014 10:00 AM
Last Updated : 15 Jul 2014 10:00 AM

முதுகு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை

முதுகு வலி எனப்படும் ‘பேக் பெயின்’ ஒரு காலத்தில் முதியவர்களுக்கான பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழ். 25 - 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குக்கூட இந்தப் பிரச்சினை தற்போது பரவலாகிவிட்டது. பெருகிவரும் இந்தப் பிரச்சினைக்கு ஆயுர்வேத சிகிச்சையை நாடுவோர் அதிகரித்து வருகிறார்கள். ஆயுர்வேத சிகிச்சையில் முதுகு வலி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா? அது எப்படிச் சாத்தியம்?

இந்த அவசர உலகில் 80 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு வகையில் முதுகு வலி இருக்கிறது. முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் வலிதான் பேக் பெய்ன் எனப்படும் முதுகு வலி. இதில் பல வகைகள் உண்டு. ஜவ்வு வீங்குல், ஜவ்வு விலகுதல், எலும்புத் தேய்மானம், எலும்பு பலவீனம் அடைதல், அடிபடுதல் எனப் பல காரணங்கள் உள்ளன.

இதனால் வரும் முதல் பிரச்சினையே வலிதான். பின்னர் வீக்கம் வரும். வீக்கம் வரும்போதுதான் வலியின் வீரியம் கூடும். வலி கூடக்கூட வலி ஏற்படும் இடத்தில் விறைப்புத் தன்மை (Stiffness) உருவாகும். இந்த விறைப்புத் தன்மை நாளடைவில் நம் நடையையே மாற்றிவிடும் என்கிறார் சென்னை சஞ்ஜீவனம் ஆயுர்வேதிக் தெரபி சென்டரின் சீனியர் மெடிக்கல் ஆபீசர் பி. ராஜேஷ்.

நடையை மாற்றும் வலி

“விறைப்புத் தன்மைக்கு என்ன காரணம் என்றால், வலி இருக்கும்போது குறிப்பிட்ட இடத்தை நாம் அதிகம் பயன்படுத்தமாட்டோம். வலியை உணராமல் இருப்பதற்காக உட்காரும் முறையை மாற்றுவோம். இப்படிச் செய்யும்போது நாளடைவில் நம் நடை மாறிவிடும். இதை மருத்துவத்தில் ‘ஈகிள் வாக்’ என்பார்கள். கழுகு நடப்பது போல இருப்பதால், இதற்கு அந்தப் பெயர். இதை ஆயுர்வேத மருத்துவத்தில் ‘கிரித்வம்’ என்கிறோம். இந்தப் பிரச்சினையில் நரம்புகள் அமுக்கப்படும்போது வலி அதிகரிக்கும். இடுப்பில் தொடங்கி, தொடை, கணுக்கால் என நம் பாதத்தின் பெருவிரல் வரை வலியை ஏற்படுத்தும். நாள்பட்ட வலி தொடரும்போது விறைப்பு ஏற்பட்டு, பின்னர் அந்த இடம் மரத்துப் போய்விடும். இதனால் ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவீர்கள்.

சிகிச்சை என்ன?

இதற்கு ஆயுர்வேதத்தில் சிறந்த சிகிச்சை கிடைக்கும். மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு வலி வந்தவுடன் 3 நாட்கள் ஓய்வு எடுத்துப் பார்க்கவும். வலி குறையாவிட்டால் சிகிச்சை பெறுவதே நல்லது. ஆயுர்வேதத்தில் மூலிகை மருந்துகளே வழங்கப்படுகின்றன. உடனடியாக வலியைக் குறைக்கவும் மருந்துகள் இருக்கின்றன.

இவையெல்லாமே பக்கவிளைவு இல்லாத மருந்துகள். வலி உள்ள இடத்தில் மருந்து தடவி சிகிச்சை அளிக்கப்படும். மருந்துடன் கஷாயம் கலந்து வலி உள்ள இடத்தில் படரவிட்டுச் சிகிச்சை அளிப்பது ஒரு முறை. இது வீக்கத்தைக் குறைத்து வலியின் தீவிரத்தை மட்டுப்படுத்தும். தொடர்ந்து 3 அல்லது 5 நாட்கள் இப்படிச் செய்தாலே வலி குறைந்துவிடும்.

ஆயுர்வேதத்தில் நீண்ட நாள் சிகிச்சை மட்டுமல்ல, குறைந்த காலச் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. உடனடித் தீர்வும் உண்டு. எந்த வலியாக இருந்தாலும் குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடங்கி அதிகபட்சமாக 21 நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். முதலில் வலி எதனால் வருகிறது என்பதை அறிந்து, அதன் பிறகு சிகிச்சையைத் தொடங்குகிறோம். சிகிச்சையைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சியுடன், 1 வாரம் ஓய்வு எடுத்தால் போதும்.

வஸ்தி சிகிச்சை

ஆயுர்வேதத்தில் ‘வஸ்தி’ என்ற ஒரு சிகிச்சை உள்ளது. வாதம், கபம் தொடர்புடைய நோய்களுக்கு வஸ்தி சிகிச்சை முறை மிகவும் நல்லது. இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளும்போது உடலில் உள்ள வாயு குறைந்துவிடும். ஆசன வாய் வழியாக இந்த மருந்தைச் செலுத்தும்போது குடல் மூலம் விறைப்புத்தன்மை குறைக்கப்பட்டுத் தசையை வலுப்படுத்தும். அது வெளியேறும்போது கழிவுகள் மட்டும் தனியாக வந்துவிடும். வாயுக்கள் வெளியேறிவிடுவதால் வலியும் குறைந்துவிடுகிறது. இந்தச் சிகிச்சை அதிகபட்சமாக 8 நாட்கள் தேவைப்படும். இது மட்டுமல்லாமல் தனியாக மருந்தும் கொடுக்கிறோம்.

அபியங்கம் சிகிச்சை

ஆயுர்வேத தெரபியில் ‘அபியங்கம்’ என்ற சிகிச்சை உள்ளது. இது எண்ணெய் மசாஜ்தான். வயது, வலி, பாதிப்புக்கு ஏற்ப இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். எண்ணெயோடு மூலிகை கலந்த மருந்தை இதற்குப் பயன்படுத்துகிறோம். மசாஜ் செய்யும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வலி குறையும்.

ஒரே நேரத்தில் பயிற்சி பெற்ற இரண்டு பேர் மசாஜ் செய்வார்கள். ஒரே நபர் இடம் மாறி மாறி மசாஜ் செய்தால் பலன் கிடைக்காது. தேவைப்பட்டால் மட்டுமே மசாஜ் செய்யப்படும். இல்லாவிட்டால் லேகியம், கஷாயம் போன்ற மருந்துகள் மூலமாகவே வலியைச் சரி செய்து விடலாம்.

மீண்டும் வராமல் இருக்க

ஆயுர்வேத சிகிச்சையைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். ஒருமுறை சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு வராமல் இருக்க, ஆண்டுக்கு ஒரு முறை 10 நாட்களோ அல்லது 15 நாட்களுக்கோ வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், எப்போதும் வலி இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

குறிப்பாக, நீச்சல் பயிற்சி மிகவும் நல்லது. வாயு பிரச்சினைகளை உருவாக்கும் உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு, கொண்டைக் கடலை வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் அவசியம். பைக் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதும் பயன் தரும். ஒருக்களித்துப் படுப்பதால் உணவு விரைவில் ஜீரணமாகும்.

இதனால் வாதம் தாக்காமல் இருக்கும். சமதளமான இடத்தில் படுத்து உறங்கவும். மேடு பள்ளமான பகுதியில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். சமதளப் பரப்பில் நடக்க வேண்டும். நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியவர்கள் பெல்ட் அணிந்து செல்வது நல்லது. இது ஜவ்வைப் பாதுகாத்து வீக்கம் ஏற்படாமல் தடுக்கும். சென்னை சஞ்ஜீவனம் ஆயுர்வேதிக் தெரபி சென்டர்களில் மேலே குறிப்பிட்ட சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன" என்கிறார் மருத்துவர் ராஜேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x