Published : 22 Sep 2017 06:00 PM
Last Updated : 22 Sep 2017 06:00 PM
எனக்கு பித்தப்பையில் மிகச் சிறிய கற்கள் இருக்கின்றன. அதேநேரம் வயிற்றில் வலி எதுவும் இல்லை. ஆனால், குமட்டல், வாந்தி, அஜீரணம், வாயுக்கோளாறு போன்றவை அடிக்கடி தொல்லை தருகின்றன. என் பிரச்சினைக்குப் பித்தப்பைக் கற்களை அகற்றுவது ஒன்றுதான் தீர்வா? இல்லை, வேறு சிகிச்சைகள் உள்ளனவா?
எஸ். புனிதா சுப்பிரமணியன், மின்னஞ்சல்
உங்கள் பிரச்சினைகளுக்கும் பித்தப்பை கற்களுக்கும் தொடர்பில்லை. சாப்பிட்டு மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து மேல் வயிற்றில் வலிக்கிறது என்றால், பித்தப்பையில் பிரச்சினை எனக் கருதலாம். பித்தப்பையில் கற்கள் ரொம்ப நாட்களாக இருந்து பித்தப்பையில் அழற்சி ஏற்பட்டிருந்தால், பித்தப்பை வீங்கிவிடும். அப்போது மேல் வயிற்றில் ஆரம்பிக்கும் வலி நெஞ்சு முழுவதும் பரவும். பிறகு வலது தோள்பட்டைக்குத் தாவும். அப்போது பித்தப்பையை அகற்றியே ஆக வேண்டும். இப்போதைக்கு உங்களுக்குப் பித்தப்பையை அகற்ற வேண்டிய அவசியமில்லை. அப்படியே அகற்றினாலும் உங்கள் இரைப்பை, குடல் பிரச்சினைகள் சரியாகாது.
இப்போது உங்களுக்கு உடனடித் தேவை உணவு முறை மாற்றம். கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள். காரம், மசாலா சேர்த்த உணவு வேண்டாம். வாயுவை ஏற்படுத்தும் உணவையும் தவிருங்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள். மூன்று வேளை உணவை, ஆறு வேளை உணவாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் நல்லது. திட உணவைச் சிறிது காலம் குறைத்துக்கொண்டு, திரவ உணவை அதிகப்படுத்துங்கள். உதாரணமாக காய்கறி சூப், பழச்சாறுகளை அருந்துவது, கீரை, பழம், தேவையான அளவுக்குத் தண்ணீர் எடுத்துக்கொண்டு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
‘நலம், நலமறிய ஆவல்'
கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்:
nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT