Published : 24 Dec 2016 11:33 AM
Last Updated : 24 Dec 2016 11:33 AM
வளரும் குழந்தைகளுக்கு முட்டையைப் பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு ‘பச்சை முட்டை’ தருவது நல்லது என்றும் கூறுவது எந்த அளவுக்கு உண்மை?
குழந்தை முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும் 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளைக் கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு.
மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள ‘கரோட்டினாய்டு’ (Carotenoid), ‘ஸாந்தோபில்’ (Xanthophyil) எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தைத் தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் ‘லூட்டின்’ எனும் நிறமிதான் அதிகம்.
மற்றச் சத்துகள் என்ன?
100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின்- ஏ, வைட்டமின்-டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்குக் காலை உணவுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும்.
ஆபத்து எப்படி வருகிறது?
இன்றைய தினம் துரித உணவகங்களில் பல வகை வண்ணச் சுவையூட்டிகளையும் மசாலாக்களையும், எண்ணெய்களையும் கலந்து பலதரப்பட்ட முட்டை உணவுகளைத் தயாரிக்கிறார்கள். முட்டையால் கிடைக்கிற கொலஸ்ட்ரால் ஆபத்தைவிட, இந்தக் கலப்புப் பொருள்களால் குடல் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துகள் வருவதுதான் பெரும் கவலைக்குரிய விஷயம்.
பச்சை முட்டை நல்லதா?
‘முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்' என்று பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றோர் அதிகச் சத்தைப் பெறுவதற்காகப் பச்சை முட்டையைக் குடிப்பார்கள். இதில்தான் ஆபத்து உள்ளது.
‘பச்சை முட்டை’யின் வெள்ளைக்கருவில் ‘அவிடின்' (Avidin) எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் இணையும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும். இதன் பலனாக, முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தைவிட பயாட்டின்தான் நமக்கு முக்கியம். குறிப்பாகக் கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. ஆகவே, வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே எப்போதும் நல்லது.
முட்டையில் ‘சால்மோனல்லா’ போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. முட்டையை அவிக்கும்போது, அவை இறந்துவிடும் என்பதால் முட்டையின் மூலம் டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய் த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
இப்போது ஹார்மோன் ஊசி போட்டுத்தான் பெரும்பாலான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் பாதிப்பு இறைச்சியில் மட்டுமல்லாமல், முட்டையிலும் இருக்கும் சாத்தியம் உள்ளது. முட்டையை வேகவைக்கும்போது இந்தப் பாதிப்புகள் குறைந்துவிடும். இருந்தாலும் நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கிப் பயன்படுத்துவதே மிகச் சிறந்தது.
(அடுத்த வாரம்: ஆஸ்துமாவுக்கு இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்தலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT