Published : 03 Dec 2016 12:00 PM
Last Updated : 03 Dec 2016 12:00 PM

நலம் நலமறிய ஆவல்: கல்லீரல் வீக்கத்துக்கு சிகிச்சை

சிறுநீரகத்தில் இருந்த கட்டியை அகற்றுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. அதேநேரம் எந்தச் சிகிச்சையையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், என்னுடைய நீரிழிவு ராண்டம் பரிசோதனையில், நீரிழிவு இல்லை என்று வருகிறது. சில நாட்களுக்கு முன் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டேன். அப்போது கல்லீரல் வீங்கியிருப்பதாகத் தெரியவந்தது. இதற்கான சிகிச்சையைப் பரிந்துரைக்கவும்.

- வி. நக்கீரன், மின்னஞ்சல்

இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் டாக்டருமான சு. முத்துச்செல்லக்குமார்:

கல்லீரலில் அதிகக் கொழுப்பு சேர்வதைத்தான், கல்லீரல் மிகைக் கொழுப்பு நோய் (Fatty liver disease) என்று சொல்கிறோம். இவ்வாறு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

உடல் கொழுப்பைக் கல்லீரலால் முறையாக வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த முடியாத நிலை உருவாகும் போதுதான், கல்லீரல் செல்களில் கொழுப்பு படிந்து, இந்த நோய் ஏற்படுகிறது.

இதற்குக் காரணமாக இருப்பதில் முக்கியமானது மது பழக்கம். மது பழக்கமில்லை என்றால், அடுத்த முக்கியமான காரணம் நீரிழிவு நோய்தான்! உடல் பருமனும், மிகை ரத்தக் கொழுப்பும் இந்த நோய்க்கு வழிவகுக்கும். சில மருந்துகளாலும், பரம்பரை காரணங்களாலும்கூட இந்நோய் ஏற்படலாம்.

உங்களுக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் இருப்பதாகவும், ஆனால் பரிசோதித்துப் பார்த்தபோது ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருப்பதால், சிகிச்சையை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஒரேயொரு ரத்தச் சர்க்கரை அளவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்பதால், ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கிறதா என்பதை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோன்று ரத்தக் கொழுப்பு அளவை கண்டறிவதும் அவசியம். மது பழக்கமிருந்தால் அதைக் கைவிடவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவில் மாவு,கொழுப்பு உணவைக் குறைத்து, காய்கறி, கீரை, பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் பலருக்கும் ஆரம்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பதால், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். இதன் காரணமாகக் கல்லீரலில் நாரிழை சேர்ந்து, கல்லீரல் செல்கள் நலிந்து சிரோசிஸ் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. எனவே, எச்சரிக்கை தேவை!



‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x