Published : 05 Nov 2016 12:18 PM
Last Updated : 05 Nov 2016 12:18 PM
அடிக்கடி உண்ணாவிரதம் இருந்தால் உடல் இளைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இது மருத்துவ அறிவியல்படி சரியா?
இப்படிச் சொல்வது சரியில்லை.
சீக்கிரத்தில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால், மருத்துவ அறிவியல்படி உடல் இளைப்பதற்காக உண்ணாவிரதம் இருப்பது தவறு என்றே சொல்ல வேண்டும். காரணம், உண்ணாமல் இருப்பது நம் உடல் ஆரோக்கியத்தைப் பல வழிகளில் பாதிக்கிறது. அதிலும் தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும்; சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்படும்.
இயல்பும் மாற்றமும்
பொதுவாக இரவு பத்து மணிக்குப் பிறகு எந்த உணவையும் பெரும்பாலோர் சாப்பிடுவதில்லை, உறங்கிவிடுகிறோம். இது இயற்கையான செயல்பாடு என்பதால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்ததைத் தடுக்கும் விதமாகக் காலை உணவு அமைகிறது. ஆனால், பலரும் உடல் எடையைக் குறைக்கக் காலை உணவைத்தான் தவிர்க்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கம்.
இவர்கள் மதியம் அளவில்லாமல் சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் இவர்களுக்கு உடல் எடை குறைய வாய்ப்பில்லை. மதியம் நிறைய பசி எடுக்கும் என்பதால் உணவை நன்கு மெல்லாமல் அவசர அவசரமாகவும் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் நீடிக்குமானால், இவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்படும்.
அடிக்கடி சாப்பிடாமல் இருக்கும்போது ‘ஹைப்போகிளைசீமியா’ எனும் ரத்தச் சர்க்கரை குறையும் நிலைமை உண்டாகும். கை, கால் நடுக்கம், உடல் வியர்ப்பது, மயக்கம் போன்ற தொல்லைகள் வரலாம். உடல் எப்போதும் சோர்வாக இருக்கும். முக்கியமாகக் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகள், பயணம் மேற்கொள்வோர் - ஒருபோதும் உண்ணாவிரதம் இருக்கவே கூடாது.
எப்படிக் குறைப்பது?
உடல் பருமனாக இருப்பவர்கள் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அந்த அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை எடுக்க வேண்டும். அத்துடன், உணவுமுறையைச் சீராக்க வேண்டும். சராசரியாக ஒருவருக்குத் தினமும் 2,000 கலோரிகளைத் தரக்கூடிய உணவு தேவைப்படுகிறது. இதைக் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் சாப்பிடுவதற்குப் பதிலாக, இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக உணவை எடுத்துக்கொள்ளலாம்.
அரிசி-தானிய உணவின் அளவைக் குறைத்துக்கொண்டு காய்கறி, பழங்களை அதிகமாக உட்கொள்வது நல்லது. மாலை நேரத்தில் நொறுக்கு தீனிகளுக்கு இடம் தராமல், ஒரேயொரு சாக்லெட் சாப்பிடலாம். காபி, தேநீர், குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பர்கர், பீட்சா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். காலை நேரத்தில் 45 நிமிடங்களுக்கு நடப்பது, நீச்சலடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் அவசியம்.
மேற்சொன்ன வழிகளைப் பின்பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைப்பதுதான் ஆரோக்கியம். உண்ணாவிரதம் இருந்து ஒரே மாதத்தில் உடல் இளைத்துவிட முடியும் என்று நம்புவது தவறு.
(அடுத்த வாரம்: பழங்களை தோலுடன் சாப்பிடலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT