Published : 19 Nov 2016 12:38 PM
Last Updated : 19 Nov 2016 12:38 PM
இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் டாக்டருமான சு. முத்துச்செல்லக்குமார்:
எனக்கு வயது 27, ஒரு வாரமாகப் பின்புறத் தலையில் நரம்புடன் சேர்த்து வலிக்கிறது. பார்வையில் சிறிது குறையையும்உணர்கிறேன். தலை மந்தமாக இருப்பது போலத் தோன்றுகிறது. என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆலோசனை கூற முடியுமா?
- முகைதீன், குவைத்
பின்புறத் தலைப் பகுதியில் வலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன:
பின் தலையில் அடிபட்டிருந்தால் வலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலியாலும் இப்படி ஏற்படலாம் (Migraine headache). பின்பகுதி ரத்தநாள அழற்சி பாதிப்புகளால் வலி ஏற்படலாம். முதுகெலும்புச் சிதைவு நோய்களாலும், கழுத்து சதை பிடிப்பாலும் தலைவலி ஏற்படலாம். சில வகை வலிப்பு நோய்களாலும் இந்தத் தொந்தரவுகள் ஏற்படலாம்.
மனச்சோர்வாலும், மிகை ரத்த அழுத்தத்தாலும் இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். பின்பகுதி தலை நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பாலும் (Occipital neuralgia) பின்பகுதி தலைப் பகுதியில் வலியும் மதமதப்பும் ஏற்படலாம்.
பின்புற மூளைப்பகுதி பாதிப்புகளாலும் (Occipital lobe), நோய்களால் அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதாலும் பின்புறத் தலைவலி ஏற்படுவதுடன் பார்வை கோளாறுகளும் ஏற்படலாம்.
எனவே, நீங்கள் நல்ல நரம்பியல் நிபுணர், கண் நோய் சிறப்பு நிபுணர் ஆகியோரிடம் மருத்துவ ஆலோசனை பெற்று உரிய பரிசோதனைகளைச் செய்வதுடன், தலைப் பகுதியில் ஸ்கேன் பரிசோதனையும் செய்து நோய்க்குத் தீர்வு காணலாம்.
வலிநிவாரணிகளைத் தற்காலிகமாக மட்டும் பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT