Last Updated : 22 Jul, 2014 10:12 AM

 

Published : 22 Jul 2014 10:12 AM
Last Updated : 22 Jul 2014 10:12 AM

உலகக் கல்லீரல் அழற்சி நாள் ஜூன் 28- கல்லீரலைக் காப்போம்

இதயம், மூளையைப் போலவே முக்கியமான இன்னொரு உடல் உள் உறுப்பு கல்லீரல். ஆனால் இதயம், மூளை ஆகிய உறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கல்லீரலுக்குக் கொடுக்கப்படுவதில்லை. உடலின் ரத்தம் முழுவதும் கல்லீரல் வழியே தினமும் பல முறை கடந்து செல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளைக் கல்லீரல் செய்கிறது. ஆனால், குடிப் பழக்கம், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கல்லீரலைப் பல வகைகளில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.

இன்றைக்கு உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது கல்லீரல் கோளாறுகள்தான். உலகில் ஒவ்வோர் ஆண்டும் 15 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. சிக்கல் என்னவென்றால் கல்லீரலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அது உடனே தெரிய வராது. பிரச்சினை தீவிரமடைந்த பிறகே அறிகுறிகள் தெரியவரும். அதனால் கல்லீரல் நோய்களை லேசாக எடுத்துக்கொண்டால், நமக்குத்தான் ஆபத்து.

ஹெப்படைட்டிஸ் என்றால்

கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளை ஹெப்படைட்டிஸ் என அழைக்கிறார்கள். ஹெப்படைட்டிஸ் கிருமிகளில் ஏ, பி, சி, டி, இ எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளே. பொதுவாக வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதாலேயே ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்றவும் முடிகிறது.

இன்றைக்கு உலகில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஹெப்படைட்டிஸ் பி, சியை கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.

கடுமையான வகை

மருத்துவத்தில் கல்லீரல் அழற்சியைக் கடுமையான வகை, நீடித்த கடுமையான வகை என்று இரண்டு பிரிவாக அழைக்கிறார்கள். கடுமையான வகை கல்லீரல் அழற்சி என்று கண்டறியப்பட்டால் கல்லீரல் உறுப்பு மாற்றம் செய்ய வேண்டிய நிலைகூட வரலாம். மஞ்சள் காமாலை நோய்கூட கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும்போதே வருகிறது. காய்ச்சல், உடல் சோர்வு, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, பசியின்மை, புகைப்பிடிக்க வெறுப்பு, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, கண்கள், தோல் மஞ்சள் நிறமடைதல் (மஞ்சள் காமாலை), வயிற்று வலி ஆகியவை இதற்கு அறிகுறிகள்.

நீடித்த கடுமையான வகை

நீடித்த கடுமையான வகையில் பலருக்கும் ஹெப்படைட்டிஸ் இருப்பதே தெரியாது. கல்லீரல் சேதமடைந்துள்ளதைப் பொறுத்து, இந்த வகையில் நோயின் தீவிரம் வெளியே தெரியும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளுடன் வயிறு உப்பி இருப்பது, எடை குறைதல், ரத்தக் கசிவு, முகப்பரு, அளவுக்கு அதிகமாக மாதவிடாய் நீள்வது, சிறுநீரக அழற்சி, வீக்கம் ஆகியவை இந்த வகைக்கான அறிகுறிகள். பொதுவான அறிகுறியாக ஜீரணப் பிரச்சினையும் ஏற்படலாம்.

காரணம்

கல்லீரல் அழற்சி எப்படி ஏற்படுகிறது? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நோய்த் தொற்றுகள், சில மருந்துகள், நச்சுப் பொருட்கள், குறிப்பாக குடிப் பழக்கம், கல்லீரல் புற்றுநோய் காரணமாகக் கல்லீரலில் ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமிகள் தொற்றிவிடுதல் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ‘சிரோசிஸ்’ எனும் நோய்தான் , கல்லீரல் நோய்களின் கடைசி நிலை. இதற்கு மிகவும் முக்கியக் காரணம் மது அருந்துவது.

தடுப்பு முறைகள்

சீரான உணவு முறை, உடற்பயிற்சி, உரிய ஓய்வு ஆகியவையே கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், ஆரோக்கிய வாழ்வுக்கும் அடிப்படை. ஹெப்படைட்டிஸ் ஏ, ஹெப்படைட்டிஸ் பி வராமல் தடுக்கத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம். மது அருந்துவது கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் குடிப் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். கல்லீரலைப் பாதிக்காத மருந்து, மாத்திரைகளை மட்டுமே பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மருந்தையும் மருத்துவர் அறிவுரையின்றி நீண்ட நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தம், உறுப்பு, திசுக்கள், விந்து ஆகிய வற்றைத் தானமாக அளிக்கக் கூடாது.

என்ன செய்யலாம்?

• கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்குச் சைவ உணவே சிறந்தது.

• திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினசரி குடிப்பதன் மூலம் சிறுநீர் எளிதாகப் பிரியும். மலம் இளகும்.

• எலுமிச்சை சாறு சேர்த்த நீரைக் குடித்தால் கல்லீரலின் செல்கள் பலமடையும். இது மஞ்சள் காமாலைக்கும் நல்லது.

• பூண்டைத் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. சீரகப் பொடி கலந்த மோர் பருகினால் ஜீரணம் மேம்படும்.

• கல்லீரல் கோளாறு உள்ளவர்களும், கல்லீரல் நோய் வராமல் தடுத்துக்கொள்ள நினைப்பவர்களும் சமையல் எண்ணெயை மிகக் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x