Published : 08 Oct 2016 12:44 PM
Last Updated : 08 Oct 2016 12:44 PM
ஜிம்முக்குப் போகிறவர்கள், உடலை வலுப்படுத்த நினைப்பவர்கள் உடல் வலிமைக்குத் தினமும் புரோட்டீன் (புரதம்) பவுடர் உட்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா?
இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு.
புரதச் சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது; செல்களின் தேய்மானத்தைக் குறைத்துப் புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன் (இயக்குநீர்), வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகப் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை.
நமக்குத் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவிலிருந்தே பெறலாம். சைவம் சாப்பிடு பவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச் சத்தைப் பெறலாம்.
இப்படி இயற்கையாக உற்பத்தியாகும் உணவைச் சாப்பிடும்போது, புரதச் சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்ட்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு, பைட்டோகெமிக்கல் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேர வழியில்லை. செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், உடனடியாக வேறு உணவை நாம் சாப்பிடவும் முடியாது.
ஊட்டச்சத்து குறைபாடு வரும்
பொதுவாக, புரதச்சத்துப் பானம் என்பது புரதச் சத்துக்குறைவு (Protein energy malnutrition) ஏற்பட்ட குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் பரிந்துரை செய்யப்படும் பானம். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரோட்டீன் பவுடர்களை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு. இவர்களுக்கு மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஜிம்முக்குப் போகிறவர்களுக்கு மற்றவர்களைவிடப் புரதச் சத்து கூடுதலாகத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படிப்பட்டவர்கள் தகுந்த அளவுடன், மற்ற ஊட்டச்சத்துகளும் உடலில் சேருவது பாதிக்கப்படாமல் உட்கொள்ள வேண்டும்.
இது சத்துபானம்தானே என்று அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தைப் பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதயநோய்க்குப் பாதை அமைக்கும். கல்லீரல் நோய்க்கு அடிபோடும்.
ஜிம்முக்குச் செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.
(அடுத்த வாரம்: ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளலாமா? கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT