Published : 08 Oct 2016 12:52 PM
Last Updated : 08 Oct 2016 12:52 PM
இந்த வாரக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் டாக்டருமான சு. முத்துச்செல்லக்குமார்:
என் வயது 46. எனக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக ‘ஹைபோ தைராய்டு’ பிரச்சினை உள்ளது. என்னுடைய தோல் கருக்கிறது, திடீரென்று கோபம் வருகிறது, செரிமானம் சரியாக இருப்பதில்லை, முடி உதிரும் பிரச்சினை அதிகம் உள்ளது, என் காலும் கடுமையாக வலிக்கிறது. திடீரென்று உடல் எடை ஏறுகிறது, சட்டென்று குறைகிறது. இந்தப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை, மிகவும் குழப்பமாக உள்ளது, தயவு செய்து உதவுங்கள்.
- செல்வி சிவாஜி, மின்னஞ்சல்
இந்த வயதில் பெண்களுக்கு ஏற்பட சாத்தியமுள்ள நோய், தைராய்டு சுரப்புக் குறைபாட்டு நோய் ( Hypothyroidism).
இந்த நோய் வந்தது தெரிந்தால், தைராய்டு சுரப்பு குறைபாடு எதனால் ஏற்பட்டது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். ஏனென்றால், தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலோ, அயோடின் குறைபாட்டாலோ, தன்நோயெதிர்ப்பு நோய்களாலோ (Autoimmune disorders), பிட்யூட்டரி சுரப்பி நோய்களாலோ, Sulfonylureas, Amiodarone போன்ற சில வகை மருந்துகளாலோ இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
தைராய்டு சுரப்புக் குறைபாட்டு நோயால் உடல் எடை அதிகரிக்கும். அதன் காரணமாக கால் வலி ஏற்படலாம். ரத்த கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. முடி உதிரவும் நேரிடலாம். இதற்குச் சிகிச்சையாக நாளமில்லாச் சுரப்பி நிபுணரை (Endocrinologist) ஆலோசித்து -
1. முதலில் சுரப்புக் குறைபாட்டுக் கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள்.
2. நீங்கள் எடுத்துவரும் ஹார்மோன் மருந்து (Thyroxine) போதுமான அளவில் உள்ளதா என்பதற்கான ஆலோசனையும் பெறுங்கள்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்; உடல் எடையைக் குறையுங்கள்; உணவில் காய்கறி மற்றும் நார்ச்சத்துள்ள உணவை அதிகரித்து, கொழுப்பு உணவைக் குறையுங்கள்.
தோல் நிற மாற்றம், முடி உதிர்தலுக்கு தோல் மருத்துவ நிபுணரையும், மற்ற பிரச்சினைகளுக்கு உரிய மருத்துவ நிபுணரையும் கண்டு சிகிச்சையைப் பெறுங்கள்.
எனக்குக் காதில் எப்போதும் விசில் போன்ற இரைச்சல் கேட்கிறது. இதனால் காது கேளாமை பிரச்சினை வந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். இதனால் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. இதற்கான தீர்வை பரிந்துரைக்கிறீர்களா?
- லட்சுமிகாந்த், நெல்லை
காதில் இப்படி இரைச்சல், பல்வேறு ஒலி (விசில் சத்தம் உட்பட) கேட்பதை காது இரைச்சல் பாதிப்பு (Tinnitus) என்கிறார்கள்.
இதற்கு பல காரணங்கள் உள்ளன: அதிக சப்தத்தை தொடர்ச்சியாகக் கேட்கும்போது, இந்த பாதிப்பு ஏற்பட அதிக சாத்தியம் உண்டு. மேலும், காது அழுக்கு-அடைப்பு, ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகள், மெனியரிஸ் நோய் (Meniere's disease), மன உளைச்சல், நடுச் செவியில் ஒலியைக் கடத்தும் சிற்றெலும்புகளில் கோளாறுகள், மது, புகை, தாடைப் பிரச்சினை, இதய, ரத்தஅழுத்தம், நீரிழிவு, நரம்பியல் பிரச்சினைகள், தைராய்டு நோய்கள் என இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
எனவே காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காண்பித்து காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. அதேநேரம் பாட்டு கேட்கவும், செல்போன் பேசவும், தொடர்ச்சியாகவும் சத்தமாகவும் ஹெட்ஃபோன்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் காதில் போட்டுக்கொள்ளுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT