Published : 24 Sep 2016 11:08 AM
Last Updated : 24 Sep 2016 11:08 AM
வயிற்று வலி, நெஞ்சு வலி, தசை வலி என எல்லா உடல் வலிகளுக்கும் வாயுக் கோளாறு ஒரு காரணம் என்கிறார்கள். இது சரியா?
சரியில்லை.
இந்த இடத்தில் பொருத்தமான ஓர் உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். என் நண்பரின் தந்தைக்குத் திடீரென நெஞ்சில் வலி வந்தது. அவரோ, அது ‘கேஸ் டிரபி’ளாக இருக்கும் என நினைத்துக் கவனிக்காமல் விட்டுவிட்டார். நாளாக ஆக வலி அதிகரித்தது, நண்பர் வலுக்கட்டாயமாக என்னிடம் அவரை அழைத்துவந்தார். பரிசோதித்துப் பார்த்தபோது, அவருக்கு இதயத் தமனிகளில் மூன்று அடைப்புகள் இருந்தன. தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நலம் தேறிவிட்டார். வாயுக் கோளாறு என இன்னும் சிறிது காலம் அவர் அலட்சியமாக இருந்திருந்தால், அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
உடலில் வலி ஏற்படுவதற்கும் வாயுக்கும் தொடர்பில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் பிரச்சினையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். இது வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை. ஆனால், பொதுவாக வாயுவுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.
வாயு எப்படி உற்பத்தியாகிறது எனும் அறிவியலைத் தெரிந்துகொண்டால் இதன் உண்மை புரியும். நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதையிலும் உணவுப் பாதையிலும் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போலத் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பது இல்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.
நாம் அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப்பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
குடலில் உணவு செரிக்கும்போது அங்குள்ள தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் மூலம் பல வேதிமாற்றங்களை ஏற்படுத்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இப்படி நாள்தோறும் சுமார் ஏழு லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, ரத்தத்தில் இது உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாகக் குடலில் 600 மி.லி. வாயு இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லதுதான்.
சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் பிரியும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்க்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாகக் கெட்ட வாடையுடன் வெளியேறும்.
புரத உணவுகள், கிழங்குகள், வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற காய்களை அதிகமாகச் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல் காசநோய், புற்றுநோய் போன்றவற்றாலும் வாயு அதிகமாகலாம்.
(அடுத்த வாரம்: கை கழுவ சானிடைசர் பயன்படுத்தலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT