Published : 28 May 2016 12:06 PM
Last Updated : 28 May 2016 12:06 PM
“இந்தியாவில் வெயில் வாட்டுகிறது! போர் வேண்டாம், தாய்நாட்டுக்குத் திரும்பிவிடலாம்” என்று புகழ்பெற்ற மொகலாய அரசர் பாபரின் படை வீரர்கள் புலம்பும் அளவுக்குக் கிலியூட்டியது நம்மூர் வெயில். இந்தச் செய்தியைப் பதினாறாம் நூற்றாண்டு வரலாறு பதிவு செய்துள்ளது. பல காலமாக வெயில் பழகிய நமக்கே, இந்த வருடச் சூரியனின் உக்கிரம் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கோடைக் காலத்தில் நாம் பயன்படுத்தும் படுக்கை, தண்ணீர், உடை, வாழ்க்கை முறையில் உள்ள குறைகள் என்ன? அந்தக் குறைகளை நிறையாக்கும் வழிகள் என்ன?
வெயிலுக்கு இலவம் பஞ்சு
இலவம் பஞ்சு மெத்தைப் பயன்பாட்டை நார், இழை வகைகள் மற்றும் ஃபோம் மெத்தைகள் காலப்போக்கில் மறக்கடித்துவிட்டன! வெயில் காலத்தில் மெத்தையில் படுக்க வேண்டிய அவசியம் இருந்தால், இலவம் பஞ்சால் செய்த மெத்தையே உகந்தது. இலவம் பஞ்சு மெத்தை உடல் சூட்டை நீக்கும் என்பதை ‘இலவம்பஞ்சுப் படுக்கை கேகு மனலம்’ என்ற பதார்த்தக் குணச் சிந்தாமணி பாடல் உறுதிப்படுத்துகிறது.
`இலவு காத்த கிளி’க்கு வேண்டுமானால் இலவ மரம் கனியைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இலவம் பஞ்சு நிச்சயம் உடல் சூட்டைக் குறைத்து, நல்ல நித்திரையைத் தரும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. கொதிக்கும் வெயிலில் `ஃபோம்’ வகை மெத்தைகளைப் பயன்படுத்தும்போது தோலில் எரிச்சல், கட்டி, அரிப்பு போன்றவை வருவதற்கான சாத்தியம் அதிகம்.
படுப்பதற்கு கோரைப் பாய்
காற்றின் இசைக்கேற்ப ஆற்றங்கரையோரம் நடனமாடும் கோரைப் புற்களைச் சேகரித்து, பதப்படுத்தி, கற்றாழை நாரால் கோத்து சேர்த்த கோரைப் பாய்களின் பயன்பாடு அதிகமாக இருந்த காலத்தில், படுக்கையால் உண்டான நோய்கள் மிகக் குறைவு. இப்போது ஆதிக்கம் செலுத்திவரும் நெகிழிப் பாய்களை, குளிர் காலத்தில் பயன்படுத்தலாம் என்றாலும், அவற்றில் எவ்வித மருத்துவக் குணங்களும் இல்லை.
வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் உறங்கினால், நம் தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதிக்கின்றன. பாரம்பரியமிக்க கோரைப் பாய், படுக்கையாகப் பயன்படுவது மட்டுமின்றி மருத்துவக் குணங்களையும் கொண்டது. காய்ச்சலைத் தணித்து, பசியை அதிகரிக்கும். ‘கோரைப்பாய்…..குளிர்ச்சியுறும்…..நன் நித்திரை’ என்ற பாடல் வரி, கோடைக் காலத்தில் நாம் தேடும் குளிர்ச்சியை வழங்கி, சுகமான உறக்கத்தையும் கோரைப் பாய் அள்ளிக் கொடுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
வேண்டாம் ஜீன்ஸ்
இரண்டு வயது குழந்தைக்குக்கூட ஜீன்ஸ் அணியச் செய்யும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மென்மையான உடல் அமைப்புடைய குழந்தைகளின் தோலில் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றி பெற்றோர் கவலைப்படுவதில்லை. வெளிநாட்டுப் பருவ நிலைக்கு ஏற்ற ஜீன்ஸ், நம் வெப்பநிலைக்குக் கொஞ்சமும் பொருந்தாது.
`மென்புகையைப் போல’, `பாம்புச் சட்டையைப்போல’ என உவமை கூறும் அளவுக்குக் கோடைக் காலத்தில் மெல்லிய ஆடைகளை அக்கால மக்கள் அணிந்ததாகச் சங்க கால நூல்கள் கூறுகின்றன. ஆனால் இன்று `யானைத் தோல்போல’ என உவமை கூறும் அளவுக்குக் கனமாக இருக்கின்றன ஜீன்ஸ் வகையறாக்கள்!
இறுக்க உடை நோய்
வெயில் நேரத்தில் தோலோடு ஒட்டும் அளவுக்கு ஜீன்ஸ் உடுத்துவதால், தோலில் சிவந்த நிறக் கொப்புளங்கள், கடுமையான அரிப்பு, எரிச்சல், படர்தாமரை போன்ற தோல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். தொடர்ந்து இறுக்கமான உடைகள், ஜீன்ஸ் பயன்படுத்துவதால், கால்களில் நரம்புகளும் தசைகளும்கூடப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த அறிகுறிகளை மொத்தமாக ‘Tight pants syndrome’ என மருத்துவச் சமூகம் அழைக்கிறது. இப்போது ஃபேஷனாகக் கருதப்படும் ‘பென்சில் ஃபிட்’, `ஜெக்கின்ஸ்’ லெகிங்ஸ் ஆடைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, மேற்கூறிய பாதிப்புகள் உண்டாகலாம்.
வசப்படுத்தும் விசிறி
காற்றோட்டத்தை ஏற்படுத்தவும் வெப்பத்தைக் குறைக்கவும் பனையோலை விசிறி, மயிலிறகு விசிறி, வெட்டிவேர் விசிறி, வெண் சாமரம் எனப் பல விசிறி வகைகளைப் பயன்படுத்தி இளைப்பாறியவர்கள் நம் முன்னோர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் நாம் அறவே தொலைத்துவிட்டவை இந்த `இயற்கை விசிறிகள்’. ‘
வாசவெட்டிவேர் விசிறி வன்பித்த தோடமொடு வீசுமெரிச்சலையும் வீழ்த்துங்காண்’ என்ற பாடல், வெட்டிவேர் விசிறியின் குணங்களைக் குறிக்கிறது. பித்தம், எரிச்சல், அதிகத் தாகம் போன்றவற்றைக் குறைக்கும் ஆற்றல் வெட்டிவேர் விசிறிக்கு உண்டு. பனையோலை விசிறி வாத, பித்த, கபத்தைச் சமனப்படுத்தும்.
மின்விசிறியைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு, இயற்கை விசிறியை லாவகமாக வீசினால் குளிர்ந்த காற்று நம்மை வசியப்படுத்தும். கோடைக் காலத்தில் நம்மை ஆசுவாசப்படுத்த, இயற்கையே அமைத்துக் கொடுத்த மின்சாரமில்லா உயர்ந்த விசிறிகள் தென்னை, வேம்பு, புங்க மரங்கள்! விசிறிகளின் சுவாசத்தில் இளைப்பாற வேண்டியதுதான் பாக்கி!
உணவு நெறி
அக்னி வெயில் முடிவடைந்தாலும், வெயிலின் தாக்கம் கொஞ்ச காலம் நீடிக்கவே செய்யும். எனவே, வெயில் கால உணவுக் கட்டுப்பாடுகளை உடனடி யாகத் தளர்த்தாமல், தொடர்ந்து பின்பற்றுவது அவசியம். காலை டீ, காபிக்குப் பதிலாக நெல்லிச் சாறு / எலுமிச்சைச் சாறு (நோய் எதிர்ப்புக்கு).
காலை உணவு - சிறுதானிய உணவுகள் / கூழ் வகைகள் (ஆற்றலுக்கு).
பதினோரு மணி அளவில் மோர் / இளநீர் / பழச்சாறுகள் (நீரிழப்பைத் தடுக்க).
மதிய உணவு பட்டை தீட்டாத அரிசி, நீர்க்காய்கள், கீரைகள், மோர்க் குழம்பு, தயிர் சாதம்.
மாலைச் சிற்றுண்டி - பூண்டு, சீரகம் சேர்த்த முளை கட்டிய பயிர் வகைகள் (புரதம் நிறைந்தது) மற்றும் பழத்துண்டுகள் / பழச்சாறு.
இரவு உணவு (7 8 மணிக்குள்) ஆவியில் வேகவைத்த, எளிதில் செரிக்கக்கூடிய உணவு (இட்லி, இடியாப்பம்). கோடைக் காலத்தில் அசைவ உணவு வயிற்றுப் போக்கு, செரியாமை, வயிற்று வலி போன்ற தொந்தரவுகளை உருவாக்குவதால், சைவ உணவில் ஆர்வம் செலுத்தலாம். வயிற்று நோய்கள் மற்றும் மூலத்தை உண்டாக்கும் மசாலா உணவு, துரித உணவு, மைதா சேர்த்த உணவுக்குத் தடை விதிக்கலாம்.
வேண்டாம் பிளாஸ்டிக்
செம்பு, வெள்ளி, பித்தளை பாத்திரங்களில் தண்ணீரைச் சேகரித்து வைத்து, அதனால் கிடைக்கும் விதவித மான நன்மைகளை அனுபவித்தோம்! இன்றோ நிலைமை முற்றிலும் மாறி பிளாஸ்டிக் கேன்களில் நீரைச் சேமித்து, பலவித இன்னல்களை அடைந்துகொண்டிருக்கிறோம். அதிலும் வெயில் காலத்தில் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் நீண்ட நேரம் நீரைச் சேமித்து வைப்பதால், தண்ணீரில் வேதிப்பொருட்கள் சேர அதிக வாய்ப்பு உண்டு.
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேன்களில், `சூரிய ஒளி நேராக விழுவதைத் தவிர்க்கவும்’ என எச்சரிக்கைக் குறிப்பு இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், அவை நம் வீடு வந்து சேரும் முன், எவ்வளவு நேரம் சூரியனின் தாக்கத்தில் இருந்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. பிளாஸ்டிக் கேன்களில் ஒளிந்து கிடக்கும் நஞ்சுகள், வெப்பம் காரணமாக நீரில் கலந்து, ஹார்மோன் சார்ந்த நோய்களை உண்டாக்கத் தவம் கிடக்கின்றன! தவத்தைக் கலைக்கும் வகையில், கேன் நீரைச் செம்பு,
பித்தளை பாத்திரங்களில் சேமித்து வைத்தால் பாதிப்புகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம். கோடைக் காலத்தில் பாத்திரங்களில் இருக்கும் நீர் ஓரளவு குளிர்ச்சியாக இருப்பதையும், கேன்களில் இருக்கும் நீர் வெப்பமாகவே இருப்பதையும் உணரலாம். மண்பானைகளும் செம்பு, பித்தளைப் பாத்திரங்களும் மறுபிறப்பெடுக்கத் தயாராக இருக்கின்றன. வாய்ப்பளிப்பது நம் கையில்!
வெயில் காலம் வந்துவிட்டால், வீட்டுக்கு வெளியே கோரைப் பாயை விரித்து, இரவில் வீசும் தென்றல் காற்றின் தாலாட்டில் மெய்மறந்து உறங்கிய வாழ்க்கை முறையும், செம்பு பாத்திரத்தில் நீரைச் சேமிக்கும் நீர் அறிவியலும், காலத்துக்கேற்ப உடை அணியும் நுணுக்கமும் நவநாகரிக மனிதர்களிடமும் தொற்றிக்கொண்டால், நோய்களைப் பற்றி கவலைப்படத் தேவையிருக்காது. அதற்குப் பெரிய மெனக்கெடல்கள் தேவையில்லை, மேற்கூறிய சின்னச் சின்ன திருத்தங்களே போதும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT