Published : 10 Jun 2014 12:00 AM
Last Updated : 10 Jun 2014 12:00 AM
ரத்தம் என்பது நமது உயிர் இயந்திரம் இயங்கத் தேவையான அடிப்படை அம்சம். அது எல்லோருக்கும், எந்த வயதினருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் எனப் பல காரணங்களுக்காக ரத்தம் தேவைப்படுகிறது.
ஆனால், திரைப்படங்களில் காட்டப்படுவது போல, ஒருவரின் கையில் இருந்து ரத்தத்தை எடுத்து இன்னொருவருக்கு நேரடியாகக் கொடுப்பது என்பதெல்லாம் நிஜத்தில் எந்தக் காலத்திலும் முடியாது. அப்படியானால், விபத்தில் அடிபட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ரத்தம் கொடுப்பது?
ரத்த வங்கிகள்
ரத்தத்தைப் பெற்று, அதைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் தரும் பணியை ரத்த வங்கிகள் செய்துவருகின்றன. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று, ரத்தம் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவும் அமைப்புதான் ரத்த வங்கி.
ரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. ஏ, பி, ஓ, ஏபி ஆகியவையே அவை. இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இந்த வகைகளில் ஒன்றைத்தான் மனிதர்கள் பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு நபரும் தங்கள் ரத்த வகையை அறிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல வீட்டில் உள்ளவர்களும் அதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவசர காலத்துக்கு இது மிகவும் அவசியம்.
ரத்தப் பொருத்தம்
பொதுவாக ரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்கள் ‘ஏ’ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு வகைக்கும், அந்தந்த வகை ரத்தத்தை மட்டுமே பதிலாகச் செலுத்த முடியும். ஆனால், மிகுந்த நெருக்கடியான நேரங்களில் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘ஓ’ வகை ரத்தத்தை அவருக்குச் செலுத்தலாம். அதனால்தான் இந்த வகை ரத்தம் உள்ளவர்களை ‘யுனிவர்சல் டோனர்’ என்றழைக்கிறார்கள். அதேபோன்று ‘ஏபி’ ரத்த வகையைப் பெற்றவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் செலுத்தலாம்.
ரத்தம் தேவைப்படுவோரில் பலருக்கு முழு ரத்தமும் தேவைப்படுவதில்லை. உதாரணத்துக்கு, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்குச் சிவப்பணுக்கள் மட்டுமே தேவைப்படும். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் மட்டுமே தேவைப்படும். விபத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்தம் உறையாதவர்களுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் மட்டுமே தேவைப்படும்.
நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதே தானம். எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் கொடுப்பது சிறந்த தானம். ஒருவரது பசியைப் போக்கினால் அன்னதானம். பார்வை கொடுத்தால் கண் தானம். ஆனால், ஒருவருக்கு உயிரையே கொடுக்கலாம் என்றால் அது ரத்தத் தானம் தானம். ஏனென்றால், ரத்தத் துளி என்பது உயிர்த் துளி.
விழிப்புணர்வு குறைவு
ஆனால், இந்த நவீன உலகில்கூட ரத்த தானம் கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. ரத்தம் கொடுத்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள். இதன் காரணமாக ரத்தத்ததைத் தானமாகக் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பல இடங்களில் ரத்தத்தைப் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலையே உள்ளது.
உலகில் 60 நாடுகளில் 99 சதவீதம் கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெற முடிகிறது. 73 நாடுகளில் இன்றும்கூட ரத்தம் தேவைப்படுபவர்கள் உறவினர்களையே சார்ந்திருக்க வேண்டி யிருக்கிறது. அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டியே நிலை உள்ளது என்கிறது உலக சுகாதார அமைப்பு.
மாற்றம் தேவை
இந்த நிலை மாற வேண்டாமா? பாதிக்கப்பட்டவர்கள் கொடையாளர்களுக்குப் பணம் கொடுக்காமல் ரத்தம் தானம் பெறுவதை 2020-ம் ஆண்டுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு இலக்காக வைத்துள்ளது. இதன் காரணமாகவே ரத்த தானம் செய்வது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்றிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே 2004-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14-ம் தேதி உலக ரத்தக் கொடையாளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதற்கு ஜூன் 14-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது ஏன்? ஏ பி ஓ ரத்த வகைகளைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் 1868-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி ஆஸ்திரியாவில் பிறந்தார். அவருடைய நினைவாகவே உலக ரத்தக் கொடை யாளர்கள் நாள் அன்றைக்குக் கடைபிடிக்கப் படுகிறது.
தான ரத்தம் பாதுகாப்பானதா?
#ரத்தத்தைத் தானமாக அளிப்பவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம், ரத்த வங்கியில் முழுமையாகப் பரிசோதிக்கப்படும்.
#எய்ட்ஸ், பால்வினை நோய், மலேரியா, மஞ்சள் காமாலை போன்று ஏதாவது நோய் தாக்கியிருப்பவரின் ரத்தமா என்பது நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் அங்குப் பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் சுத்தமானது என்று தெரிந்த பிறகுதான், ரத்த வங்கியின் பாதுகாப்பு அறைக்கு ரத்தம் கொண்டு செல்லப்படும்.
#பாதுகாக்கப்படும் ரத்தம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் வைக்கப்படும்.
#தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தைச் சுமார் 35 நாட்கள் வரை வைத்திருப்பார்கள். அதற்குள் பெறப்பட்ட ரத்தத்தைப் பயன்படுத்தி விடுவது நல்லது.
#தற்போது நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் ரத்தத்தில் உள்ள செல்களைத் தனித்தனியே பிரித்துப் பாதுகாக்கும் முறை வந்துவிட்டது.
#ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணு, ரத்தத்தை உறைய வைக்கும் செல், பிளாஸ்மா என எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்தெடுத்துப் பாதுகாக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT