Last Updated : 15 Apr, 2022 03:41 PM

 

Published : 15 Apr 2022 03:41 PM
Last Updated : 15 Apr 2022 03:41 PM

சப்போட்டா பழத்தை ஏன் சாப்பிட வேண்டும்?

சப்போட்டா ஆரோக்கியத்தின் ஊற்று

கோடைகாலத்தில் அதிகம் விரும்பப்படும் பழங்களில் சப்போட்டாவும் ஒன்று. எங்கும் எளிதில் குறைந்த விலையில் கிடைக்கும் அந்தப் பழத்தின் சுவை பலராலும் விரும்பப்படும் ஒன்று. சப்போட்டா அல்வா, சப்போட்டா சாஸ், சப்போட்டா மில்க் ஷேக் எனச் சப்போட்டா பழத்தைப் பல வடிவில் நாம் சாப்பிட முடியும்.

சப்போட்டா ஆரோக்கியத்தின் ஊற்று. நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் சப்போட்டாவைச் சாப்பிடுவது, நம் உடலுக்குப் போதிய ஆற்றலை உடனடியாக அளிக்கும். அளவில்லா ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்போட்டாவுக்கு, பல நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் திறன் உண்டு. சப்போட்டா பழத்தைச் சாப்பிடுவது நம் உடலுக்குப் புத்துணர்வு அளிக்கும்.

சப்போட்டாவால் கிடைக்கும் நன்மைகள்

ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும்: சப்போட்டாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்; ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தும். எனவே, சப்போட்டாவைத் தினமும் சாப்பிடுவது, ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்தி, சமநிலையில் வைக்க உதவும்.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்: சப்போட்டாவைச் சாப்பிடுவது, சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும். சிறுநீரகக் கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சப்போட்டாவைச் சாப்பிடுவதன் மூலம், தங்கள் அவதியைக் குறைத்துக்கொள்ள முடியும்.

ஜலதோஷத்திலிருந்து விடுதலை: சப்போட்டா பழத்தில், ஆன்டிபாக்டீரியல், ஆன்டிவைரல் பண்புகள் மிகுந்து காணப்படுகின்றன. ஜலதோஷம், பருவகால காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கும், ஒருவேளை பாதிப்புக்கு உள்ளானால் நம்மை மீட்பதற்கும் சப்போட்டா பயனுள்ளதாக இருக்கும்.

இரும்புச்சத்து: நம் உடல்நலனுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்திவாசியமானது. இரும்புச்சத்து குறைந்தால், நாம் எளிதில் எரிச்சல் அடையும் நிலையில் இருப்போம்; கவனமின்மையும் அதிகம் இருக்கும். சப்போட்டாவில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அதைச் சாப்பிடுவது நம் உடல் நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தும்.

சப்போட்டாவை அதிகம் சாப்பிடலாமா?

சப்போட்டாவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்போ வாயில் புண்ணோ ஏற்படலாம். குறிப்பாக, நன்கு பழுக்காத பச்சையான சப்போட்டாவைத் தவிர்க்க வேண்டும். சப்போட்டாவைக் காயாகச் சாப்பிட்டால், தொண்டையில் அரிப்பு, வாயில் புண் போன்றவற்றோடு, செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் சேர்ந்து ஏற்படலாம்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், சப்போட்டா பழத்தை எவ்வளவு சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x