Published : 02 Apr 2016 01:15 PM
Last Updated : 02 Apr 2016 01:15 PM

பொக்கிஷம்: நீரிழிவைக் கட்டுப்படுத்தும் 3 மந்திரங்கள்

சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் உடல்நலனைப் பற்றி, அதிலும் சுயமாக உடலைக் கவனித்துக்கொள்வதைப் பற்றி அனுபவப்பூர்வமாக எழுதப்பட்ட இரண்டு சிறு புத்தகங்கள். ஒன்று 1960-களிலும் மற்றொன்று 2015-லும் என 55 ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை. அதேநேரம் இரண்டிலும் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் ஒரே மாதிரி அமைந்திருந்தது ஆச்சரியம்தான். அடிப்படைகள் எந்தக் காலத்திலும் மாறுவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

விரிவான ஆராய்ச்சி

முதல் புத்தகத்தை எழுதியவர், பிரபல எம்.ஜி.ஆர். திரைப்படங்களை இயக்கியதற்காக அறியப்பட்ட இயக்குநர் ப. நீலகண்டன். அவருக்குச் சிறு வயதிலேயே நீரிழிவு நோய் வந்திருக்கிறது. நீரிழிவு என்பது குறிப்பிட்ட காலச் சிகிச்சையில்கூட முழுமையாகத் தீர்வு கண்டுவிடக்கூடிய ஒரு நோயல்ல. வாழ்நாள் முழுக்க அதைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்க முடியும். இதன் காரணமாக நீரிழிவு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் ப.நீலகண்டன்.

எந்த மருந்து சிறந்தது, அலோபதியா - சித்த மருத்துவமா, நீரிழிவு நோய் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது, நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்படி உடலைப் பராமரிக்க வேண்டும், எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என விலாவாரியாக, தனித்தனி அத்தியாயங்களாக ‘பல்லாண்டு வாழ்க’ (வானதி பதிப்பகம்) என்ற நூலில் விவரித்து எழுதியுள்ளார். நீரிழிவு நோய் பற்றி அந்தக் காலத்தில் மருத்துவர்களுக்கே இவ்வளவு சிறப்பான, ஒருங்கிணைந்த புரிதல் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சிறந்த பரிந்துரை

அது மட்டுமல்லாமல் நீரிழிவு நோயை எப்படியெல்லாம் கையாளலாம், கட்டுப்படுத்தலாம் என்பதைப் பல்வேறு பரிசோதனைகள் செய்து, அதில் சிறந்தவற்றைப் பரிந்துரைத்திருக்கிறார். நிறைய கைமருத்துவம், வீட்டுச் சிகிச்சைகள், அன்றாட மருந்துகள் போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

இத்தனையையும் எழுதிவிட்டு, ‘இது மருத்துவ நூலல்ல’, ‘நான் மருத்துவனுமல்ல’ என்ற முன்னெச்சரிக்கையுடன் புத்தகத்தை ஆரம்பித்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் பேசுபொருள் தொடர்பான திருக்குறள், நீதிவெண்பா போன்ற பழந்தமிழ் மேற்கோள்களுடன், பேச வரும் விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதைப் போல ஆரம்பித்திருக்கிறார்.

நீரிழிவு மந்திரங்கள்

நீரிழிவைக் கட்டுப்படுத்த அவர் சில மந்திரங்களைக் கூறுகிறார்: ஒன்று, மருந்து - ஒவ்வொருவருடைய உடல்நிலைக்கு ஏற்ப. இரண்டாவது, உணவுக் கட்டுப்பாடு. நீரிழிவு எவ்வளவு குறைவாக இருந்தாலும், உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் கைவிட்டு விடவே கூடாது. மூன்றாவதாக, நீரிழிவும் உணவும் எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும் அன்றாட உடற்பயிற்சி - நடைப்பயிற்சி அத்தியாவசியம் என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறார்.

நீரிழிவைப் பற்றி இவ்வளவு விரிவாக ஆராய்ந்து எழுதிவிட்டு, கடைசியில் நீரிழிவுக்குத் தான் எந்த மருந்துமே எடுத்துக்கொள்வதில்லை. மிகக் குறைந்த காலம் சித்த மருந்து எடுத்துக்கொண்டதுடன் சரி, அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் நீரிழிவைக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தேன் என்று கடைசி அத்தியாயத்தில் கூறி முடிக்கிறார். இதை வாசிப்பவர்களுக்கு அவரைப் போலவே நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை ஏற்படும்.

சுவாரசியப் படைப்பு

இந்தப் புத்தகம் பதிப்பிக்கப்படாமலேயே 1960-களில் நீண்டகாலத்துக்குத் தனிச்சுற்றில் மட்டும் படிக்கப்பட்டு வந்துள்ளது. வானதி பதிப்பக நிறுவனர் சு. திருநாவுக்கரசு ஏற்பாட்டில் 1980-களுக்குப் பிறகு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் சார்ந்த நூல்களே தமிழில் அரிதாக இருந்த அந்தக் காலத்தில், அனுபவபூர்வமான மருத்துவ நூல் என்பது நிச்சயம் புதுமையாகவே இருந்திருக்கும்.

நீரிழிவு போன்ற நோய்களை ஒரு நோயாளி முழுமையாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பெரும்பாலான விஷயங்களை மிக எளிமையான மொழியில், நகைச்சுவை ததும்ப, அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார் ப. நீலகண்டன். அந்தக் காலத்தில் தொழில்முறை எழுத்தாளராக இல்லாதவர்களிடமும்கூட, மொழியைக் கையாளும் திறமையும் சுவாரசியமாக எழுதும் திறனும் இருந்தது என்பதற்கு இந்த நூல் நல்ல எடுத்துக்காட்டு.

பல்லாண்டு வாழ்க,
ப. நீலகண்டன்,
வானதி பதிப்பகம் (தற்போது அச்சில் இல்லை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x