Published : 30 Apr 2016 01:25 PM
Last Updated : 30 Apr 2016 01:25 PM
அமெரிக்கா போன்ற நாடுகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவது எளிதாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள சட்ட நடைமுறைகளால் உறுப்பு தானம் பெறுவது சிக்கலாகவே இருந்துவருகிறது.
சென்னை ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரியும் சுரேஷ், அவரது சகோதரரான அமெரிக்க வாழ் இந்தியர் கணேஷ் ஆகியோரைச் சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் உறுப்பு தானம் மிகவும் அவசர, அவசியத் தேவையாக இருக்கிறது என்று அப்போது கூறினார்கள்.
சிக்கலான உடல் தானம்
அவர்களுடைய தந்தை எம். குப்புசாமியும் உறுப்பு தானத்தில் அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார். அவர் மத்திய அரசின் ‘ஜியலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா' இயக்குநராக இருந்தவர். தான் இறந்தவுடன் சடலத்தை மருத்துவக் கல்லூரி ஒன்றுக்குத் தானமாக வழங்கி, மாணவர்கள் பயில்வதற்குப் பயன்பட வேண்டும் என்று அவர் சொல்லி வந்திருக்கிறார். அதற்காக 77 வயதில் உயிலும் எழுதி வைத்திருக்கிறார். அவர் இறந்த பிறகு, அவருடைய சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றபோது, கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
காரணம், இந்தியாவில் உறுப்பு தானத்துக்கான சட்டங்கள் மிகவும் கடுமையாக இருப்பதுதான். இருந்தபோதும் சடலத்தை ஐஸ் பெட்டியில் வைத்துப் பாதுகாத்து, சிபாரிசுக்குப் பிறகு சடலத்தை அந்தக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்.
குப்புசாமியின் மனைவி லோகநாயகி கூறுகையில், “ஓய்வு பெற்றதும் இயற்கை மருத்துவராகப் பணிபுரிந்துவந்தார். யாராவது விபத்தின் மூலம் மூளைச்சாவு அடைந்தால், அவரது உறுப்புகளை எப்படித் தானம் செய்ய வேண்டும், ஏன் தானம் செய்ய வேண்டும் என்று பார்ப்பவர்கள் அனைவரிடமும் விளக்கமாக அறிவுறுத்துவார்” என்றார்.
அமெரிக்காவில் எளிது
கணேஷ் கூறும்போது, “அமெரிக்காவில் மக்களும் அரசும் உறுப்பு தானத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
குடும்பத்தாரின் அனுமதியுடன் யார் வேண்டுமானாலும் தங்களுடைய உடலைத் தானம் செய்வதாக அரசில் பதிவு செய்துகொள்ளலாம். தானம் செய்பவரின் ஓட்டுநர் உரிமத்தில் அதற்கான அடையாளக் குறியீடு, ‘டோனர்' என்று பதிவு செய்யப்படும்.
எதிர்பாராதவிதமாக விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தால், குடும்பத்தாரின் அனுமதியில்லாமலேயே அவரின் உடல் உறுப்புகளைத் தானமாக எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு உடல் உறுப்பு தானத்துக்கு அமெரிக்க அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
உறுப்பு தானம் பெற்றுக்கொள்பவர்களிலும் சில முன்னுரிமைகள் உண்டு. விஞ்ஞானிகள், ராணுவத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், 25 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள், அறிஞர்கள் என்று போற்றப்படுபவர்களுக்கு உறுப்புகளைத் தானமாகப் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றார்.
தேவையும் பற்றாக்குறையும்
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும், இரண்டு லட்சம் பேருக்குச் சிறுநீரகமும் ஒரு லட்சம் பேருக்குக் கல்லீரலும் தேவைப்படுகின்றன. ஆனால், இதில் 2.3 சதவீதம் பேருக்குத்தான் உறுப்புகள் தானமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உறுப்புக்காகக் காத்திருந்து தானம் கிடைக்காமலேயே ஆறாயிரம் பேர் இறந்துபோகிறார்கள். ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கும் உறுப்பு தானம் கிடைக்காமல் ஒருவர் இறந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு 13 நிமிடத்துக்கும் புதிதாக உறுப்பு தானம் தேவைப்படுபவர்களின் பட்டியலில் ஒருவர் இணைகிறார்.
கடந்த வருடத்தில் விபத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல். இவர்களில் இளைஞர்கள் மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேல். அதிலும் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களில் 82 சதவீதம் பேர் ஆண்கள். இதில் இன்னொரு வேதனையான விஷயம், சாலை விபத்துகளில் தேசிய அளவில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம்!
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், கிடைப்பது என்னவோ ஐந்தாயிரம் மட்டும்தான். அதுபோல ஐந்தாயிரம் இதயங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், கிடைப்பதோ இரண்டாயிரம் மட்டும்தான். 50 ஆயிரம் கல்லீரல்கள் தேவைப்படும் இடத்தில் கிடைப்பதோ 700 மட்டும்தான். ஒரு லட்சம் கண்கள் தேவைப்படும் இடத்தில், கிடைப்பது என்னவோ 25 ஆயிரம் மட்டும்தான்.
யார் முன்வருகிறார்கள்?
உலகச் சுகாதார நிறுவனக் கணக்குப்படி, இந்திய மக்கள்தொகையில் 0.01 சதவீதம் பேர் மட்டுமே உறுப்புகளைத் தானம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 70 முதல் 80 சதவீதம் பேர் தானம் செய்ய முன்வருகிறார்கள்.
உலகிலேயே ஈரானில் மட்டும்தான் உறுப்பு தானத்துக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் பூர்த்தி செய்யப்பட்டு, காத்திருப்பவர்களே இல்லாத நிலை உள்ளது. நேரெதிராக ஜப்பான் மட்டும்தான் உறுப்பு தானம் செய்வதற்குச் சட்டப்பூர்வமாக மறுத்துவருகிறது. இதனால் பல ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உறுப்பு தானம் பெறுகிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு உறுப்பு தானம் தேவைப்பட்டால், அவரது நெருங்கிய உறவினர்களே தானம் செய்யலாம். மற்றபடி மூளைச்சாவு அடைந்த நேரத்தில் இருந்து மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரலை இன்னொருவருக்குத் தானமாகக் கொடுக்கலாம். சிறுநீரகத்தை 24 மணி நேரத்துக்குள் தானம் செய்யலாம்.
சிக்கலாக்கிய சட்டம்
இந்தியாவைப் பொறுத்தவரை உறுப்பு தானத்துக்கு என ‘தேசிய உறுப்பு மாற்றுச் சட்டம், 1984' என்று சட்டத்தின் கீழ் உறுப்பு தானம் நடைபெற்று வந்தது. வடஇந்தியாவில் நிறைய மருத்துவமனைகளில் சிறுநீரகத் திருட்டு எனும் பெரிய மோசடி நடைபெற்றது. இந்தியா முழுவதும் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுமதி இல்லாமல் ‘கிட்னி' திருடப்படவே, உறுப்பு தானத்தில் கடுமையான சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியது.
விளைவாக உறுப்பு தானம் என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சிக்கலாகிவிட்டது. இதன்படி, அரசின் அனுமதி கமிட்டியின் மேற்பார்வையில்தான் உறுப்பைத் தானமாகப் பெற முடியும். ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இருந்தாலும், சிலவற்றில்தான் உறுப்பு தான அறுவைசிகிச்சையைச் செய்துகொள்ள முடியும்.
தேவை மாற்றம்
அதனால், ஏழைகள் உறுப்பு தானம் பெறுவது எட்டாக்கனியாகிவிட்டது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளில் ரூ. 10 லட்சம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 50 லட்சம், இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 40 லட்சம் செலவாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் விபத்துகளால் மூளைச்சாவு அடைவோரின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல். இதில் ஆயிரம் பேருக்கும் குறைவானவர்களிடம் இருந்துதான் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன.
இந்தியாவில் உறுப்பு தானத்துக்கான சட்டங்களை உடனே மாற்றியமைத்து, அதைக் கண்காணிக்க ஆணையங்களை உருவாக்கலாம். அப்படிச் செய்தால் உலகிலேயே இந்தியாதான் உறுப்பு தானத்தில் முதல் இடத்தைப் பிடிக்கும்.
கட்டுரையாளர், சட்ட ஆலோசகர் (மனநலம்)
தொடர்புக்கு: senthilnayakam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT