Published : 05 Mar 2016 11:32 AM
Last Updated : 05 Mar 2016 11:32 AM
உலகக் கண் நீர் அழுத்த உயர்வு வாரம் மார்ச் 6-12
ராமநாதன் கண் மருத்துவரிடம் செல்லும்போதே ஒரு கண்ணில் ஏறக்குறைய 50 விழுக்காடு பார்வை பறிபோயிருந்தது. ‘கண்ணில் பிரஷர் அதிகமானதால்தான் உங்கள் பார்வை பாதிக்கப்பட்டு, இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டது’ என்று கண் மருத்துவர் சொன்னதைக் கேட்டு ராமநாதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'கண்ணில் பிரஷரா? அது எப்படி வரும். எனக்கு உடம்பில்கூடப் பிரஷர் இல்லையே' என்று குழம்பிப் போய்விட்டார்.
கண்ணில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும், அதை அவ்வளவு சீக்கிரமாக யாரும் கண்டுகொள்வதில்லை. ஆரம்பத்திலேயே சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது; பின் சுயவைத்தியமாக எதையாவது செய்துகொண்டு, பிரச்சினை அதிகமான பிறகே மருத்துவரை நாடுவது என்ற போக்குதான் பரவலாகக் காணப்படுகிறது. அப்படித் தாமதமாகப் போகும்போது சில நேரம் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். ராமநாதனுக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டது அப்படித்தான்.
அது என்ன கண்ணில் பிரஷர்?
நம் உடலில் ரத்த அழுத்தம் பராமரிக்கப்பட்டுவருவது நமக்குத் தெரிந்ததுதான். இது 120/80 மி.மீ. பாதரச அளவு அழுத்தத்தைவிட அதிகரித்தால், அதை ‘உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். பி.பி. என்றோ அல்லது பிரஷர் என்றோ சொன்னால் இன்னும் எளிதாகப் புரியும். இதைப் போலவே கண்ணிலும் ஓர் அழுத்தம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயல்பாக 10-லிருந்து 20 மி.மீ. பாதரச அழுத்தத்துக்குள் அது இருக்க வேண்டும். இதைவிட அழுத்தம் உயர்ந்தால் அதுதான் ‘கண் நீர் அழுத்த உயர்வு’ (கிளாகோமா).
கண் நீர் அழுத்த உயர்வு ஏற்படக் காரணம் என்ன?
முன்கண்ரசம் பற்றி சிறுவயதில் படித்தது நினைவிருக்கலாம். கண் கோள வடிவில் இருப்பதற்கும் கண்ணில் உள்ள அழுத்தத்துக்கும் இதுவே காரணம். சில நேரம் முன்கண்ரசம் உற்பத்தியாவதில் ஏற்படும் பிரச்சினை காரணமாகவோ அல்லது அதன் இயல்பான சுழற்சிப் பாதையில் ஏற்படும் தடை காரணமாகவோ கண் நீர் அழுத்தம் உயரலாம். பொதுவாக இந்நோய் வயதானவர்களுக்கே வரும் என்றாலும் சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும்கூட வந்துவிடும் சாத்தியம் உண்டு.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல், ராமநாதனைப் போன்றே பலரும் இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார்கள். பெரும்பாலும் இந்நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, நமக்கே தெரியாமல் சத்தமில்லாமல் ஓரளவு பார்வையைப் பறித்திருக்கும். இவ்வாறு கணிசமான அளவு பார்வையிழப்பு ஏற்பட்ட பிறகே, பலரும் மருத்துவமனையை நாடுகிறார்கள் என்பதுதான் மிகவும் வருத்தமான செய்தி.
ஆரம்ப அறிகுறிகள்
இந்நோய் ஏற்பட்டவுடன் ஆரம்ப நிலையிலேயே பலரும் மருத்துவமனைக்கு வராததற்குக் காரணம், இந்நோய் இருப்பதை நோயாளியால் எளிதில் அறிந்துகொள்ள முடியாததுதான். ஏனென்றால் இந்நோய் எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. இருந்தாலும் கிட்டப்பார்வைக்குக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் (Myopia); வீட்டில் வேறு யாருக்காவது கண் நீர் அழுத்த உயர்வு இருப்பவர்கள்; பக்கப் பார்வையில் தடுமாற்றம் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை கண் நீர் அழுத்தத்துக்குரிய பரிசோதனைகளைக் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும். அதிலும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், ஸ்டீராய்டு வகை மருந்து எடுத்துக்கொள்பவர்கள் கூடுதல் கவனம் காட்ட வேண்டும்.
நாற்பது வயதை நெருங்கும்போது அடிக்கடி தலைவலி ஏற்பட்டாலோ, மின்விளக்கைச் சுற்றி ஒளிவட்டம் தெரிந்தாலோ, கண் நீர் அழுத்தம் இயல்பாக இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பெரும்பாலும் ஏற்படுவதால் ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஒருவேளை குடும்பத்தில் யாருக்கேனும் கண் நீர் அழுத்த உயர்வு இருந்தால், 35 வயதிலிருந்தே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண் நீர் அழுத்தத்தைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.
கண் நீர் அழுத்த உயர்வு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதற்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் மிகமிகக் குறைவே. சோம்பேறித்தனத்தாலும் அலட்சியத்தாலும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் பலரும் நடைமுறையில் துன்பப்படுகிறார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
தொடர் சிகிச்சையின் அவசியம்
கண் நீர் அழுத்த உயர்வை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால், கண் நீர் அழுத்த உயர்வால் கண்ணில் உள்ள பார்வை நரம்புகள் நசிந்து போய்விடும். எப்படியென்றால், செடிக்குத் தண்ணீர் ஊற்றவில்லையென்றால் காய்ந்து பட்டுப்போய் விடுகின்றன. பட்டுப்போன பிறகு அதைக் காப்பாற்ற எதுவும் செய்ய முடியாது அல்லவா. அதுபோலவே கண் நீர் அழுத்த உயர்வால் ஒருமுறை நசிந்துபோன பார்வை நரம்புகளை, எந்த மருத்துவத்தாலும் மீண்டும் சரிசெய்ய முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்தப் பார்வை நரம்புகள்தான் நாம் பார்க்கும் பொருளின் பிம்பத்தை மூளைக்குக் கடத்துகின்றன. எனவே, ஆரம்ப நிலையிலேயே இந்தப் பிரச்சினையைக் கண்டறிய வேண்டியது முக்கியமாகிறது. 40 வயதுக்கு மேல் நீரிழிவு, ரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்துப் பார்ப்பதுபோல் கண் நீர் அழுத்தத்தையும் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்துப் பார்ப்பது, பார்வையைப் பாதுகாக்க உதவும்.
எதனால் உயர்ந்தது என்பதைப் பொறுத்து சொட்டுமருந்து, லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலமாகக் கண் நீர் அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. கண் நீர் அழுத்தம் கண்டுபிடிக்கப்படும்போதே, ஏற்கெனவே குறிப்பிட்ட அளவுக்குப் பார்வை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவர் சொல்வதுபோல் முறையான சிகிச்சையைக் கட்டாயம் செய்துகொள்ளவேண்டும். இதன்மூலம் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுத்து, பார்வையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
கட்டுரையாளர்,
தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், மதுரை.
தொடர்புக்கு: veera.opt@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT