Published : 27 Feb 2016 12:07 PM
Last Updated : 27 Feb 2016 12:07 PM
வயது ஆக ஆக ஆண்கள் பலருக்கும் பகலில் சிறுநீர் செல்வது குறைந்து, இரவில் அதிகமாகச் செல்லத் தொடங்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில், புராஸ்டேட் சுரப்பி வீங்குவது ஒரு முக்கியக் காரணம்.
எது புராஸ்டேட் சுரப்பி?
அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி தொடங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றித் தசையாலான சுரப்பி ஒன்று உள்ளது. அதற்குப் புராஸ்டேட் சுரப்பி என்று பெயர். ஒரு வாதுமைக்கொட்டை அளவில் அதிகபட்சமாக 16 கிராம் எடையே உள்ள இச்சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது.
இது முழுக்க முழுக்க ஒரு பாலியல் சுரப்பியாகும். இளமைப் பருவம் வந்தவுடன் இதன் முக்கியத்துவம் அதிகரித்து விடுகிறது. இதில் புரதம் மற்றும் என்சைம்கள் கலந்த திரவம் சுரக்கிறது. இது விந்தணுவுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. விந்தணுவின் அளவு, இயக்கம் ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. பாலுறவு தொடர்பான உணர்ச்சிகளை ஊக்குவிப்பதும், பாலுறவின்போது பெண்ணுறுப்புக்கு விந்துவைச் சுமந்து செல்வதும் இந்தத் திரவம்தான். ஆகவே புராஸ்டேட் சுரப்பிக்கு ‘ஆண்மை சுரப்பி’ என்று ஒரு காரணப் பெயரும் உண்டு.
புராஸ்டேட் சுரப்பி வீக்கம்
பொதுவாக, வாலிபப் பருவத்தில் இது ஆரோக்கியமாகவே இருக்கும். வயது ஆக ஆக இது வீக்கமடையும். ‘பினைன் புராஸ்டேடிக் ஹைப்பர்பிளேசியா’ (Benign prostatic hyperplasia - BPH) என்று இதற்குப் பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வீக்கம் ஏற்படுவது மிகச் சாதாரணமானதுதான். முதுமையில் தலைமுடி நரைப்பதைப் போல இதுவும் முதுமையின் ஓர் அடையாளம் எனக் கருதப்பட்டாலும், பலருக்கு இது ஒரு நோயாகத் தலையிடும்போது, இதைப் பிரச்சினை தரும் உறுப்பாகக் கருதுவதுண்டு. முக்கியமாக, இந்தச் சுரப்பி வீக்கமடைந்து சிறுநீர்ப் பையை அழுத்திச் சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சினையை உருவாக்கும்.
அறிகுறிகள்
* சிறுகச் சிறுகச் சிறுநீர் கழித்தல்.
* சிறுநீர் கழிக்கும்போது தடை உண்டாவது.
* சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுதல்.
* இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
* சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளது போன்று உணர்தல். மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல்.
* கடைசியில் சொட்டுச்சொட்டாகச் சிறுநீர் சொட்டுதல்.
இந்த அறிகுறிகளில் ஒன்றோ பலவோ காணப்படுமானால், அந்த நபருக்குப் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளதாகச் சந்தேகப்படலாம். பொதுவாக, இந்த வீக்கத்துக்குப் பயப்படத் தேவையில்லை. ஆரம்ப நிலையில் இதை மருந்துகள் மூலமே சமாளித்துவிடலாம். முடியாதபோது, ‘டிரான்ஸ் யுரேத்திரல் ரிசக்ஷன் ஆஃப் புராஸ்டேட்’ (TURP) எனும் அறுவை சிகிச்சை மூலம் அல்லது இப்போது வந்துள்ள நவீன முறையான லேசர் சிகிச்சையின் மூலம் புராஸ்டேட் வீக்கத்தைக் குறைத்துவிடலாம்.
புராஸ்டேட் புற்றுநோய்
இந்த வீக்கத்துக்குப் புற்றுநோய் காரணமாக இருந்தால்தான் ஆபத்து. இதன் அறிகுறிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்:
* சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் வரலாம்.
* விரைப்பைக்கு அடியிலோ, விரைகளிலோ வலி உண்டாகலாம்.
* சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவதற்குச் சிரமம் ஏற்படலாம்.
* சிறுநீர் செல்லும்போது வேகம் குறையலாம்.
* சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் முழுமையாக வெளியேறாமல், ஓரளவுக்கு மீதம் இருக்குமானால், மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கத் தோன்றுவதுண்டு.
* பொதுவாகச் சொன்னால் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்குச் சொல்லப்பட்ட எல்லா அறிகுறிகளும் இதிலும் காணப்படும். அத்தோடு சிறுநீரில் ரத்தம் வெளியேறும்.
இந்த ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால் நல்லது. இல்லையென்றால், பின்னாளில் நிணநீர் மூலம் உடலில் பல இடங்களில் இது பரவிவிடும். குறிப்பாக, இது முதுகெலும்புக்குப் பரவத் தொடங்கும். அப்போது முதுகெலும்பில் வலி ஏற்படும். இந்த நேரத்தில் நோய் கடுமையாகிவிடும்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சுமார் 14 சதவீதம் பேருக்குப் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆகவே, இந்த வயதில் உள்ள ஆண்கள் அனைவரும் தங்கள் புராஸ்டேட் சுரப்பியின் நிலைமையைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
என்ன பரிசோதனை?
1. ஆசனவாய் விரல் பரிசோதனை (Digital Rectal Examination DRE)
நோயாளியின் ஆசனவாயில் மருத்துவர்கள் விரலை நுழைத்துப் பரிசோதிப்பார்கள். அப்போது புராஸ்டேட் சுரப்பி வீங்கியிருந்தால் அந்த வீக்கத்தை ஓரளவுக்கு மருத்துவரால் உணர முடியும். இதில் வீக்கமுள்ளது எனத் தெரிந்த பின்னர், அதை உறுதி செய்யும் விதமாக வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு உட்படுத்தப் பரிந்துரைப்பார்கள்.
2. வயிறு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை
இந்தப் பரிசோதனையில் புராஸ்டேட் சுரப்பி எந்த அளவுக்கு வீக்கமடைந்துள்ளது என்பது தெரியும். விரல் பரிசோதனையில் தெரியாத மிதமான வீக்கமும் இதில் தெரிந்துவிடும். மேலும் இந்த வீக்கம் எந்த அளவுக்குச் சிறுநீர்ப்பையை அடைத்துள்ளது என்பதையும், ஒருமுறை சிறுநீர் கழித்த பின்னர் சிறுநீர்ப் பையில் எவ்வளவு சிறுநீர் தங்குகிறது என்பதையும் கண்டுகொள்ளலாம். இதை வைத்து நோயை மருந்தால் குணப்படுத்துவதா, அறுவை சிகிச்சை அவசியமா என்பது போன்ற விவரங்களைச் சொல்லமுடியும்.
3. ‘பி.எஸ்.ஏ.’ (PSA) ரத்தப் பரிசோதனை:
* புராஸ்டேட் பிரச்சினைகளுக்குச் செய்யப்படுகிற மிக முக்கியமான ரத்தப் பரிசோதனை இது. எளிய பரிசோதனையும்கூட. செலவு குறைவு. முடிவு உடனே தெரிந்துவிடும்.
* பி.எஸ்.ஏ. என்பது ‘புராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்’ (Prostate Specific Antigen PSA) என்பதைக் குறிப்பது.
* இது ஒரு புரதப் பொருள்; புராஸ்டேட் சுரப்பி செல்கள் இதைச் சுரக்கின்றன.
* இது ரத்தத்தில் தனித்ததாகவும் (Free PSA) வேறு சில புரதச் சுமப்பான்களுடன் இணைந்ததாகவும் (Bound PSA) இரண்டு விதமாகக் கலந்திருக்கும்.
* இந்த அளவை அளப்பதுதான், இந்தப் பரிசோதனையின் நோக்கம்.
* பி.எஸ்.ஏ. அளவு ஒரு மில்லி ரத்தத்தில் நான்கு நானோகிராமுக்குக் கீழ் இருந்தால் புராஸ்டேட் வீக்கம் சாதாரணமானது.
* இது நான்கு நானோகிராமுக்கு மேல் தாண்டிவிட்டால், புற்றுநோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்.
* மேலும் Free PSA சதவீதத்தை அளந்தும் புராஸ்டேட் வீக்கம் சாதாரணமானதா, புற்றுநோயைச் சேர்ந்ததா எனத் தெரிந்துகொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து சிறுநீர்ப் பையை சிஸ்டாஸ்கோப்பி மூலம் நேரடியாகப் பரிசோதிப்பது, மலக்குடலை ‘டிரான்ஸ்ரெக்டல் அல்ட்ரா சோனோகிராம்’ பரிசோதனை செய்வது, வயிற்றை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்வது போன்றவற்றின் மூலம், இந்தப் புற்றுநோயைத் திட்டவட்டமாக உறுதி செய்ய முடியும்.
பி.எஸ்.ஏ. பரிசோதனையை யார், எப்போது செய்துகொள்வது?
* 50 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு ஒருமுறை பி.எஸ்.ஏ. பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
* குடும்பத்தில் எவருக்காவது புராஸ்டேட் புற்றுநோய் வந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்த ஆண்கள் 40 வயதிலிருந்தே ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்யத் தொடங்கிவிட வேண்டும்.
திசுப் பரிசோதனை
புராஸ்டேட் சுரப்பியிலிருந்து சிறிதளவு திசுவை ஊசி மூலம் உறிஞ்சியெடுத்துப் பரிசோதனை (Needle Biopsy) செய்வதன் மூலம், புற்றுநோயின் வகையையும் நிலையையும் (Cancer stage) தெரிந்துகொள்ளலாம். இந்தப் புற்றுநோய் ஏற்பட்டுள்ள நிலையைப் பொறுத்து நோயாளிக்குத் தேவைப்படுவது அறுவை சிகிச்சையா, கதிர்வீச்சு சிகிச்சையா எனத் தீர்மானிக்கப்படும்.
முக்கியக் குறிப்பு
புராஸ்டேட்டில் சீழ் பிடித்து வீக்கம் ஏற்பட்டாலும் (Prostatitis) பி.எஸ்.ஏ. அளவு அதிகரிக்கும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இப்படி ஏற்படுவது இயல்பு. உடனே இவர்களுக்குப் புராஸ்டேட் புற்றுநோய் வந்துவிட்டதாகப் பயப்படக்கூடாது. சிறு அறுவைசிகிச்சை மூலம் புராஸ்டேட் சுரப்பியிலிருந்து சீழை வெளியேற்றிவிட்டால், பி.எஸ்.ஏ. அளவு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்
(அடுத்த வாரம்: இசிஜி பரிசோதனை செய்யப்படுவது ஏன்?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு : gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT