Published : 05 Mar 2016 11:34 AM
Last Updated : 05 Mar 2016 11:34 AM
என்னுடைய கணவர் சமீபகாலமாக மிக அதிகமாகக் கோபப்படுகிறார். கோபத்தில் வீட்டிலுள்ள பொருட்களை உடைத்துவிடுகிறார். எப்போதும் பதற்றமாகவே காணப்படுகிறார். சில நேரம் அவருடைய கோபத்தை அவராலேயே கட்டுப்படுத்த முடிவதில்லை. இவ்வளவுக்கும் அவர் அமைதியான ஒரு நபர்தான், நன்றாக வேலை பார்க்கிறார். மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், கவுன்சலிங் பெறவும் அவர் தயாராக இருக்கிறார். அவரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். எனக்கு வழிகாட்டுங்கள்.
- ஒரு வாசகி
இந்தக் கேள்விக்குத் திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜி. ராமானுஜம் பதிலளிக்கிறார்:
மன அழுத்தம் (Stress) ஏற்பட ஒருவருடைய சூழல், ஆளுமை, பிரச்சினைகளைப் பற்றிய அவருடைய கண்ணோட்டம், குடி, சிகரெட் போன்ற பழக்கங்கள் மற்றும் அவருடைய மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வாழ்க்கைமுறை போன்றவை காரணமாகின்றன. கோபம் ஏற்படுவது, வெளிப்படுத்தும் விதம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கும் மேற்கண்டவையே காரணங்களே அமைகின்றன. கோபப்படுவது இயல்பான உணர்ச்சிதான் என்றாலும் காரணமே இல்லாமல் கோபப்படுவது, அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவது, கோபத்தைக் கடும் வன்முறையில் வெளிப்படுத்துவது போன்றவை இயல்புக்கு மாறானவை.
அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவதற்கு ஒருவருடைய ஆளுமைக் கோளாறு (personality disorder) காரணமாக இருக்கலாம். இவ்வகை நபர்கள் பல வருடங்களாக எப்பொழுதும் சின்ன விஷயங்களுக்குக்கூட மிகையாகக் கோபப்பட்டு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பார்கள்.
இயல்பாக அமைதியாக இருப்பவர்களுக்குக்கூடப் புறச்சூழல் மற்றும் பணியழுத்தம் போன்ற காரணங்களாலும் அதீதக் கோபம் ஏற்படக் கூடும். திடீரென்று ஒருவர் காரணமில்லாமல் கோபப்பட ஆரம்பிப்பது மனச்சோர்வு மனப்பதற்றம், மன எழுச்சி (Mania) போன்ற மனநோய்களாலோ அல்லது மூளையில் ஏற்படும் பாதிப்புகளாலோ இருக்கக் கூடும். குடி போன்ற போதைப் பழக்கமும் அதீதக் கோபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
ஆளுமைக் கோளாறு இருப்பவர்கள் சைக்கோதெரபி போன்ற உளவியல் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறை மாற்றங்கள், யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவையும் பயன் தரும். மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள், உளவியல் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம்.
|
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT