Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM
டாக்டர் முத்துச் செல்லக் குமார்
உலக அளவில் 46 கோடிப் பேரும் நமது நாட்டில் 7.7ப் கோடி பேரும் சர்க்கரை நோயாளிகளாக இருக்கிறார்கள். உலகிலேயே உணவு முறை குறித்து அதிக அளவு வலியுறுத்தப்பட்ட நோய் இதுவாகத்தான் இருக்கும்!
நீரிழிவை நோயே இல்லை என்றும், சிறிய குறைபாடு என்றும் ஆளுக்கு ஒன்று சொல்கிறார் கள். மருந்து, இன்சுலின் தயாரிக்கும் சில கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகோத்து நவீன மருத்துவர்கள் பணத்தைக் கொள்ளையடிக்க உருவாக்கிய ஒரு செயற்கை நோய் எனப் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான எண்ணங்கள் என்று மருத்துவ அறிவியல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீரிழிவு வகைகள்
முதல் வகை: இன்சுலின் சுரப்பது குறைந்துவிடும்; இன்சுலின்தான் இதற்குச் சிகிச்சை; வைரஸ் அல்லது பிற காரணங்களால் நோய் எதிர்ப்பாற்றல், பீட்டா செல்களைத் தாக்கி அழிப்பதால் ஏற்படுவது.
இரண்டாம் வகை: இன்சுலின் சுரந்தும் நன்கு செயல்பட முடியாது; இன்சுலின் சுரப்பதும் குறையலாம்; மருந்துகளோடு, இன்சுலின் தேவைப்படும்.
மூன்றாம் வகை: கர்ப்ப காலத்தில் கண்டறியப்படும் நீரிழிவு; இன்சுலின் தேவைப்படும்.
இந்த மூன்றும் முக்கியமானவை என்றாலும், உண்மையில் நீரிழிவு நோயில் சுமார் 40 வகைகள் இருக்கின்றன.
பரிசோதனைகள்
நீரிழிவு இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகள், எந்த வகை எனக் கண்டறிய வேறு பல நவீன பரிசோதனைகள், நீரிழிவுக் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள்.
உணவு - உடற்பயிற்சி போதுமா?
நீரிழிவுக்கு முந்தைய நிலையில் (Pre diabetic) இருந்தால் நீரிழிவைத் தவிர்ப்பதோ தள்ளிப்போடுவதோ சாத்தியம். ஆனால், பிறவியிலேயே நீரிழிவு நோயுடன் (Neonatal diabetes) பிறந்த குழந்தைக்குத் தாய்ப் பாலைத் தவிர்த்து என்ன உணவு கொடுக்க முடியும்? என்ன உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்க முடியும்?
உடல் பருமன்-தொப்பை, இடுப்பளவு குறைத்தால் போதுமா? போதாது. இது இன்சுலின் நன்கு செயல்பட உதவும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவலாம்.
முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?
இன்றைய நிலையில் பெரும்பாலான நீரிழிவு நோய் களைக் கட்டுப்படுத்தி, சீராக வைத்திருக்கலாம். நோய் முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது.
நடைபெறும் முயற்சிகள்
அறுவை சிகிச்சை: பேரியாட்ரிக் அறுவை, அதிகக் கொழுப்பை அகற்றுதல் (Liposuction). ஆனால், நீரிழிவைப் பொறுத்த அளவில் பெரிய பலன் கிடைக்கவில்லை.
மரபணு சிகிச்சைகள்: மனித உடலில் இதன் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.
ஸ்டெம் செல் சிகிச்சை: ஸ்டெம் செல்களிலிருந்து புதிய மனித ஐலண்ட் செல்களை உருவாக்குவதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன.
கணைய மாற்று அறுவை சிகிச்சை: கணைய நாளமில்லா லாங்கர்ஹான்ஸ் ஐலண்ட் செல்கள் மாற்று அறுவை சிகிச்சை டைப் 1 நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிக்க முடியும்
இந்த நவீன வருங்கால சிகிச்சைகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவை ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இந்த நவீன சிகிச்சைகள், தொழில்நுட்பத்தை நடைமுறைக்குக் கொண்டுவர மேலும் விரிவான ஆய்வுகள் தேவை. இவை நடைமுறைக்குச் சாத்தியப்படும்போது மட்டுமே நீரிழிவை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
அத்துடன் வருங்காலத்தில் எல்லா நீரிழிவு நோயாளிகளையும் ஒன்றாகக் கருதாமல், நீரிழிவு வகையை அறிந்து அதற்கேற்ப பிரத்தியேக சிகிச்சை அளிக்கும் நிலை வரும்போதுதான் முழுமையாகச் சிகிச்சை வழங்க முடியும்.
அப்போதுதான், நீரிழிவு முற்றிலும் தீர்க்கப்பட்டு விட்டது, இனி எந்த மருந்தும் தேவையில்லை என்று உறுதி கூற முடியும். இன்றைய நிலையில் அப்படிக் கூறுவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT