Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM
நாவல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஜனவரி 2020இல் இந்தியாவில் கண்டறியப்பட்டதில் தொடங்கிய கரோனாவின் கோரத் தாண்டவம் இன்றும் முடிந்தபாடில்லை. இரண்டாம் கரோனா அலையில் நாடே முடங்கியது. இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்று, இந்தியாவிலும் இரண்டாம் அலையில் கரோனா தொற்றின் பரவல் மிகுந்த வீரியத்துடன் இருந்தது. இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஏற்கெனவே நாவல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகிவருவதுதான்.
இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, பாதிப்பிலிருந்து நாடு மெல்ல விடுபட்டுவரும் இன்றைய சூழலில்தான், மூன்றாம் அலை குறித்த செய்திகள் மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. மூன்றாம் அலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது; இதன் பாதிப்பு குழந்தைகளிடையேயும் சிறார்களிடையேயும் அதிகமாக இருக்கும் என்பது போன்ற எச்சரிக்கைகள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த எச்சரிக்கைகளில் எது உண்மை, எது பொய் என்று பிரித்துணர முடியாதபடி மூன்றாம் அலை குறித்த போலி செய்திகளும் அதிவேகமாகப் பரவி மக்களைக் குழப்பிவருகின்றன.இந்தக் குழப்பங்களை நீக்கும் விதமாக, லண்டனில் வசிக்கும் குழந்தைகளுக்கான மருத்துவரும் தடுப்பூசி நிபுணருமான டாக்டர் ராஜாராம், மூன்றாம் அலை குறித்த முக்கியச் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்.
கரோனாவின் முதல் அலையில் முதியவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகினர். இரண்டாம் அலையில் நடுத்தர வயதினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர். எனவே, மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே, இது சரியா?
கரோனாவின் மூன்றாம் அலை எந்த வயதினரைப் பாதிக்கும் என்று கணிப்பது கடினம். இருந்தாலும், இங்கிலாந்தில் ஏற்பட்ட மூன்றாம் அலையின் ஆரம்ப அறிகுறிகளின்படி குழந்தைகள் (10-18 வயது), இளையவர்கள் (18-30 வயது) இடையே நாவல் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்: குழந்தைகளுக்கும் இளையோருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. மேலும், பொது முடக்கத் தளர்வுகளால், பள்ளிகளிலும் சமூகரீதியாகவும் அவர்கள் நெருங்கி உலாவும் சாத்தியம் அதிகமுள்ளது.
இருந்தாலும், குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவது குறித்து மிகுந்த அச்சம் கொள்ளத் தேவையில்லை. குழந்தைகள் நாவல் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும்போது, பெரியவர்களைவிடக் குறைந்த அளவு வைரஸ் சுமையையே பெறுகிறார்கள். உடலுக்குள் வைரஸ் நுழைவதற்கு வழிவகுக்கும் ACE2 ஏற்பிகள் குழந்தைகளின் மூக்குப் பகுதிகளில் குறைவான அளவே இருப்பதால், வைரஸ் சுமையும் குறைவாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கரோனாவின் முதல் அலை முற்றிலும் முடிவுறும் முன்னர் அவசரகதியில் அளிக்கப் பட்ட தளர்வுகளே, இரண்டாம் அலைக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படியானால் இப்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த உகந்த நேரம் எது?
நாவல் கரோனா வைரஸ் மனிதர்களிடையே எளிதில் பரவுகிறது என்பது உண்மைதான். பொது இடங்களில் நிகழும் சமூகக் கூடல், மூடப்பட்ட இடங்களில், அறைகளில் நிகழும் சந்திப்புகள் ஆகியவை நாவல் கரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கியக் காரணங்கள். எனவே, பொது முடக்கம் தளர்த்தப்படும்போது, பொதுமக்களுக்கு இடையே ஏற்படும் தொடர்பால் மற்றொரு அலை ஏற்படும் சாத்தியம் இயற்கையாகவே அதிகரிக்கும்.
பொது முடக்கத் தளர்வுகளைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உன்னிப்புடன் கண்காணிப்பது ஆகிய இரண்டு விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் மூன்றாம் அலையில் மோசமான பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியும். நோயாளிகளின் எண்ணிக்கையைக் கண்காணிப்பதும், தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும். தடுப்பூசிப் பாதுகாப்பு பரவலாக அனைவருக்கும் கிடைக்காத சூழ்நிலையில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு ஆசைப்படுவதால், மூன்றாம் அலை உடனடியாக ஏற்படுவதைத் தவிர்க்கப் பொது முடக்கத் தளர்வுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் படிப்படியாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
மூன்றாம் அலை எவ்வளவு வீரியத்துடன் இருக்கும் என்று கணிக்க முடியுமா?
தொற்றுநோயியல் (Epidemiological) மாதிரிகளை உருவாக்கி, அதன் போக்குகளை ஆய்வுசெய்வதன் மூலம் இது சாத்தியம். உலகம் முழுவதும் இதுவரையிலான கணிப்புகளில் இந்த முறையே மிகவும் சிறந்தது. மண்டல அளவிலான தொற்றுநோயியல் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாதிரிகள் எவ்விதச் சார்புமற்ற துல்லியமான கணிப்புகளைத் தரும். இந்த மாதிரிகளின் துல்லியக் கணிப்புகள், கணினியில் நாம் அளிக்கும் உள்ளீடுகளைப் பொறுத்தே அமையும். அதனால், உள்ளீடுகள் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இல்லையென்றால், கணிப்பு உண்மையிலிருந்து விலகிச் சென்றுவிடும்.
வைரஸ் வேற்றுருக்கள், சமூக நோய் எதிர்ப்பாற்றல், தடுப்பூசிப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கரோனாவின் மூன்றாம் அலை இங்கிலாந்து போன்ற நாடுகளில் இரண்டாவது அலையைவிட மட்டுப்பட்டும் வீரியம் குறைந்ததாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிப் பாதுகாப்பு குறைந்த எண்ணிக்கையில் கிடைத்துள்ளது என்பதால், மூன்றாம் அலை சார்ந்த அணுகுமுறையில் அரசும் மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது சமூக நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்திருக்கும். இதனால் மூன்றாம் அலையில் இரண்டாம் அலையைவிடப் பாதிப்பு குறைவாக இருக்கச் சாத்தியமுள்ளது.
மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் பொருட்டு அரசும் மக்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மக்கள் இரண்டாம் அலையிலிருந்து தங்களுக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் இயற்கையாகவே நாவல் கரோனா வைரஸை எதிர்கொள்வதில் மிகவும் கவனத்துடன் இருப்பார்கள். இருந்தாலும், இன்னும் சிலர் தடுப்பூசிகளின் ஆற்றலை நம்பத் தயங்குகின்றனர்.
மேலும், சிலர் கரோனா தொற்றுநோய் இருப்பதையே நம்ப மறுக்கின்றனர். இந்தச் சிலரின் மூலமாகத்தான் மூன்றாம் அலை பெரிதாகப் பரவக்கூடும். ஆபத்தை விளைவிக்கும் இந்தச் சிலருக்குத் தேவையான விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்த அரசாங்கம் தீவிரமாகக் களப் பணியாற்ற வேண்டும். இரண்டாம் அலையில் தேர்தல் பிரச்சாரம் நடத்தியது, கும்பமேளா போன்ற பெரிய விழாக்களுக்கு அனுமதி அளித்தது ஆகியவற்றைப் போன்ற தவறுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வது விருப்பத் தேர்வல்ல. அது நம் சமூக கடமை. மூன்றாம் அலை தொடங்கி முடியும்வரை நாம் அனைவரும் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஈரடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இவற்றில் ஒன்று பின்பற்றப்படாவிட்டாலும், மூன்றாம் அலை முடிவது தாமதப்படும். காரணம், வைரஸ் பரவல் அதிவேக வளர்ச்சியை எட்டிய பிறகு, அதைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம்.
மூன்றாம் அலையோடு கரோனா பரவல் முற்றுப்பெறுமா அல்லது இந்த அலைகள் மேலும் தொடருமா?
இது மில்லியன் டாலர் கேள்வி.உலகம் முழுவதும் பல வல்லுநர்கள் இதைப் பற்றியே இன்று விவாதித்துவருகின்றனர். இதில் தெளிவாகத் தென்படும் உண்மை என்னவென்றால், உலகம் முழுவதும் இந்த வைரஸிலிருந்து விடுபடும் வரை, இந்த வைரஸின் வேற்றுருக்கள் பரவும் ஆபத்து இருக்கும். எதிர்காலத்தில் பெரிய அலைகள் ஏற்படாவிட்டாலும், மண்டல அளவிலான பரவல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் காட்டும் வேகத்தைப் பொறுத்து இந்தப் பரவல் குறையும் அல்லது தீவிரமாகப் பரவும். இந்த அலைகளிலிருந்தும் பாதிப்புகளிலிருந்தும் வெளிவர இன்னும் 2 – 3 ஆண்டுகள் ஆகும் என்பதே மருத்துவ அறிவியலின் கணிப்பு. அதற்குள் இன்றைக்கு நடைமுறையிலிருக்கும் கரோனா பரிசோதனை, தடுப்பூசி போட்டுக்கொள்வது, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவை நமக்கு வாழ்க்கையின் அங்கமாகிவிடக்கூடும்.
டாக்டர் ராஜாராம் தொடர்புக்கு: rajram75@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT