Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM
பல புற்றுநோய்கள் தற்போது மனிதர் களைத் தாக்கிவருகின்றன. இவற்றில் கருப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு 99 சதவிதம் வைரஸ்தான் காரணம். அது மனித பாப்பிலோமா வைரஸ் (Human papilloma viruses - HPV).
இந்த வைரஸ் உடலுறவு மூலமாகப் பரவக்கூடியது. இதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் தானாகவே வெளியேறி உடலைப் பாதிப்பதில்லை. ஆனால், இவற்றின் சில வகைகள் உடலுறவு சார்ந்த பகுதிகளில் தங்கி, நீண்ட கால அழற்சியை ஏற்படுத்தும். இதன்மூலம் பெண்களுக்குக் கருப்பை வாய்ப் பகுதியில் புற்றுநோய் உண்டாகும். இந்த வைரஸின் 16, 18, 31, 33, 45, 52, 58 வகைகள் கருப்பை வாய்ப் பகுதியைப் பாதிக்கக்கூடியவை.
யாருக்கு ஏற்படும்?
# மிகச் சிறுவயதிலேயே (15-16) திருமணம்
# எய்ட்ஸ், பிற பால்வினை நோய்களைக் கொண்டவர்கள்
# பலருடன் உறவு வைத்துக்கொள்பவர்கள்
# கருத்தடை மருந்துகளைத் தொடர்ந்து நீண்ட காலம் பயன்படுத்துபவர்கள்
# நேரடியாகவோ, பிறர் மூலமாகவோ புகையால் பாதிக்கப்படுபவர்கள்
# மேற்சொன்னவர்களுக்கு இவ்வகைப் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு இந்த வைரஸால் பெரும்பாலும் பாதிப்புகள் ஏற்படு வதில்லை. சிலருக்குப் பிறப்புறுப்புப் பகுதிகளில் மருக்கள் ஏற்படலாம். அபூர்வமாக, உடல் எதிர்ப்பாற்றல் குன்றியவர்களுக்கு உடலுறவு சார்ந்த பகுதிகள், கழுத்து - தொண்டை பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கலாம்.
பாதிப்பு:
உலக சுகாதார நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டு கணக்குப்படி 5.7 லட்சம் பெண்கள் இந்தப் புற்றுநோய்க்கு ஆளானார்கள். அவர் களில் 3.1 லட்சம் பெண்கள் இறந்துவிட்டார்கள். 2018ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 97,000 பெண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்பட்டு, அவர்களில் 60,000 பேர் இறந்துள்ளார்கள். உலக அளவில் இவ்வகைப் புற்றுநோயால் இறப்பவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியப் பெண்.
எப்போது தடுப்பூசி?
இந்த வகைப் புற்றுநோய் எளிதில் தவிர்க்கக்கூடியது, தடுக்கக்கூடியது. இதற்கு எதிரான தடுப்பூசியைப் பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் போட்டுக் கொள்ளலாம். பாலுறவு கொள்வதற்கு முன்பு இது போடப்பட வேண்டும்.
இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்கக்கூடிய இரண்டு வகைத் தடுப்பூசிகள் இருக்கின்றன: Gardasil - Quadrivalent vaccine, Cervarix - bivalent vaccine. இந்தத் தடுப்பூசியை, ஒன்பது வயதிலிருந்து 26 வயதுக்குள் போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்தப் புற்றுநோய் எளிதிலும் இளம் வயதிலேயேயும் தடுக்கக்கூடியது என்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும். குறிப்பிட்ட காலத்துக்குள் இதற்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது நல்ல பலனைத் தரும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்துக்கு ஒரு முறையாவது கருப்பை வாய்க்கான ‘பாப்’ பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT