Last Updated : 29 May, 2021 03:11 AM

1  

Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

ரெம்டெசிவிர் தேவையில்லை; ஸ்டீராய்டில் கவனம் தேவை: அறிகுறி புறக்கணிப்பு கூடாது - டாக்டர் சிவப்பிரகாஷ் நேர்காணல்

கரோனா தொற்று உள்ளவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறத் தொடங்கிவிட்டால் ஆக்சிஜன், ரெம்டெசிவர், ஸ்டீராய்டு உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் தேவைப்படுவது குறித்து எளிதாகத் தீர்மானிக்க முடியும். அத்துடன் யாருக்கு, எந்தச் சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய முடியும் என்கிறார் டாக்டர் சிவபிரகாஷ்.

கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்திருக்கிறது. இன்னமும்கூட நாவல் கரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகங்கள் பொதுமக்களிடையே அதிகமாக உள்ளன. புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ‘நாளமில்லாச் சுரப்பியிய’லில் முனைவர் பட்டம் பெற்றவரும், கடந்த ஓராண்டாக கரோனா சிகிச்சை அளித்துவருபவருமான டாக்டர் சிவபிரகாஷ் சில முக்கிய சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்.

கரோனா பாதிப்புக்கு உள்ளான வர்களில் 10 சதவீதத்தினருக்கே உள்நோயாளி சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், அதை எதிர்கொள்ள முடியாத நிலையிலா மருத்துவக் கட்டமைப்பு இருக்கிறது?

இந்தியாவில் கரோனாவுக்குச் சிகிச்சை பெறுபவர்கள் 40 லட்சம். அதில் 10 சதவீதம் நான்கு லட்சம்தான். தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்கள் நான்கு லட்சம் என்றால், உள்நோயாளி சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 40,000. அதேநேரம் தமிழகத்தில் 1,50,000 மருத்துவமனைப் படுக்கைகள் உள்ளன.

பிரச்சினை என்னவென்றால் கரோனா குறித்து நிலவும் அதீத பயத்தால் உள்நோயாளி சிகிச்சை தேவையற்றவர்களும் மருத்துவ மனையில் சேரத் துடிக்கிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறை, உயிர்காக்கும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இதுவே அடிப்படை காரணம்.

கரோனாவுக்கான பரிசோதனை, சி.டி. ஸ்கேன் போன்றவற்றை எப்போது எடுக்க வேண்டும்?

இன்றைய சூழலில், கரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வராத வரை ஜலதோஷம், காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை கரோனா அறிகுறிகளாகவே கருத வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை ஆலோசித்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கரோனா ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கு சி.டி. ஸ்கேன் அவசிய மில்லை. சி.டி. ஸ்கேன் முடிவின் அடிப்படையில் சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுவதில்லை. ஆனால், இப்போது சி.டி. ஸ்கேன் எடுக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. ஸ்கேன் நிலையங்களில் கூடும் கூட்டம், நோயாளிகள் பலமணி நேரம் அங்கே காத்திருக்க நேர்வதால், ஸ்கேன் நிலையங்கள் கரோனாவைப் பரப்பும் மையங்களாக மாறும் அபாயச்சூழல் நிலவுகிறது. மருத்துவரின் அறிவுரை யின்றி ஸ்கேன் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தீவிர கதிர்வீச்சை எதிர்கொள்ளும் ஆபத்திலிருந்தும் இது நம்மைக் காக்கும்.

நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு குறையும்போதும், மருத்துவமனை அனுமதி தேவைப்படும் நேரத்திலும், மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட வேண்டும்.

கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

நல்ல ஓய்வும் சத்தான உணவும் பெரும்பாலான கரோனா நோயாளி களைக் குணப்படுத்திவிடும். பாசிட்டிவ் என்று வந்தவுடனே மருத்துவரிடம் ஆலோசித்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.

வாட்ஸ் அப்பில் உலவும் மருந்துச் சீட்டுகளின் அடிப்படையில் சுய சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஸ்டீராய்டுகளைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்று பயன்பாட்டில் உள்ள ஆன்ட்டிபயாடிக், ஆன்ட்டிவைரல் மருந்துகளால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம். நம்முடைய உடலில் இருக்கும் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன் மட்டுமே கரோனாவுக்கான தீர்வு.

வீட்டில் இருக்கும்போது, காற்றோட் டமாக இருக்கும்படி கதவுகளையும் ஜன்னலையும் திறந்து வைக்க வேண்டும். மூடிய அறை களையும், ஏசி அறைகளையும் தவிர்ப்பது நல்லது. முழுமையான ஓய்வு எடுப்பது, முடிந்த வரை குப்புறப் படுப்பது, சத்தான உணவு, சூப் / ஜூஸ் குடிப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை கரோனாவை எதிர்கொள்வதற்குப் போதும்.

பாசிட்டிவ் வந்த பின்னர் உடலில் ஆக்சிஜன் அளவு 95க்குக் கீழ் குறைந்தாலோ, மூச்சு விடுதல் (Respiratory rate) ஒரு நிமிடத்துக்கு 24 தடவைக்கு மேல் சென்றாலோ, மூச்சு விடுவதில் சிரமம், 103 டிகிரிக்கு மேல் காய்ச்சல், நெஞ்சில் வலி, மனக்குழப்பம், திடீரென நினைவிழப்பு போன்றவை ஏற்பட்டாலோ தாமதிக்காமல் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும்.

உள்நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் படுக்கை தேவைப்படாது. ஆக்சிஜன் அளவு 93-க்குக் கீழே செல்லும்போது, ஆக்சிஜன் படுக்கை தேவைப்படும். ஆக்சிஜன் வசதியைத் தயார்நிலையில் வைத்திருப்பது எதிர்பாராத பின்னடைவையும் சிக்கலையும் தவிர்க்கும்.

ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுகிறதே. அதற்கு மாற்று இல்லையா?

கரோனாவுக்கான சிகிச்சையி லிருந்து ரெம்டெசிவிர் மருந்தைச் சென்ற ஆண்டே உலக சுகாதார நிறுவனம் நீக்கிவிட்டது. நோயாளிகள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் போது இந்த மருந்து உயிரிழப்பைத் தவிர்த்ததற்கும், பாதிப்பைக் குறைத்த தற்கும், வென்ட்டிலேட்டர் தேவையை இல்லாமல் ஆக்கியதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த மருந்தைக் கொடுப்பது நல்லதல்ல. அதன் பக்க விளைவுகளால் மிகுந்த ஆபத்து ஏற்படும் சாத்தியமுண்டு. இருப்பினும், கரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அது பலனளிப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இது குறித்துத் தேர்ந்த மருத்துவரே தீர்மானிக்க முடியும்.

என்னுடைய அனுபவத்தில், கரோனா சிகிச்சையில் டோசிலிசுமாப், ஸ்டீராய்டு ஆகியவையே உயிர் காக்கும் மருந்துகள். ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிர கரோனா பாதிப்புக்கு உள்ளாகும்போது, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் இன்டர்லூகினைச் (Interleukin) சுரக்கும். இதனால், நுரையீரல் முடங்கும் நிலை ஏற்படும். இந்த நிலையே சைட்டோ கைன் ஸ்டார்ம் (Cytokine storm). இது மிகவும் ஆபத்தானது. இந்த நிலையில் ரத்தத்தில் சி.ஆர்.பி (CRP) அளவும், இன்டர்லூகின் (Interleukin) அளவும் அதிகமாக இருக்கும்.

அப்போது கரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்பட்டு NIV, HFNO, mechanical ventilator மூலமாக ஆக்சிஜன் கொடுக்க நேரிடும். அந்த நேரத்தில் டோசிலிசுமாப் மருந்தையும் ஸ்டீராய்டு மருந்துகளையும் செலுத்தினால், நுரையீரல் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம்; உயிரிழப்பையும் தவிர்க்கலாம். ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ நிலை ஏற்படுவதற்கு முன்போ, முடிந்த பின்போ இந்த மருந்தைச் செலுத்தினால் பயனில்லை. சைட்டோகைன் ஸ்டார்ம் முடிந்த பின்னர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குவது, ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சரியான நபருக்கு, சரியான நேரத்தில் (Golden Hour), சரியான நிலையில் இந்த மருந்தை வழங்குவதன் மூலம் உயிரிழப்பை வெகுவாகக் குறைக்கலாம்.

கோவிட் நிமோனியாவின் தீவிரப் பாதிப்புக்கு உள்ளான நோயாளி களுக்கு ஆக்சிஜன், ஸ்டீராய்டு, தேவைப்பட்டால் டோசிலிசுமாப், ரத்த உறைவைத் தடுக்கும் மருந்து போன்றவையே பலன் அளிக்கும். நோயாளிகளின் வயது, உடல்பருமன், ரத்த அழுத்தக் கோளாறு, நீரிழிவு பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஸ்டீராய்டுகளுடன் சேர்த்து, ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளும், இன்சுலினும் வழங்கப்பட வேண்டும். ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளையும் இன்சுலினையும் வீடு திரும்பிய பின்னரும் மருத்துவரின் மேற்பார்வையில் சில வாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஸ்டீராய்டு மருந்துகள் பரவ லாகப் பரிந்துரைக்கப்படுவது சரியான அணுகுமுறையா?

கரோனா பாதிப்பில் மூன்று நிலைகள்: முதல் நிலையில் வைரஸ் பல்கிப் பெருகும். இரண்டாம் நிலையில் வைரஸின் பெருக்கம் நின்று, இறந்துபோன வைரஸ் செல்கள், அழற்சி / புண் கசிவு (சீழ்) ஆகியவை நுரையீரலின் கீழ் தேங்கும். இது அழற்சி (Inflammation) நிலை. மூன்றாம் நிலை பாதிப்பிலிருந்து உடல் மீளும் நிலை.

இவற்றில் இரண்டாம் நிலைதான் மிகவும் சிக்கலானது. இந்த நிலையில்தான், பாதிப்பின் தீவிரத்துக்கு ஏற்ப மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோ ஆக்சிஜன் உதவியோ தேவைப்படும். இரண்டாம் நிலையில், ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நேரத்தில்தான் ஸ்டீராய்டுகள் வழங்கப்பட வேண்டும். மருத்துவர் மேற்பார்வை அவசியம்.

பாதிப்பின் முதல்நிலையில் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டால், வைரஸ் பெருக்கம் பெருமளவு அதிகரித்து, இக்கட்டான நிலைக்குத் தள்ளும். உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்று ஆராய்ச்சிகளின் முடிவுகள் எச்சரிக்கின்றன. பாதிப்பின் மூன்றாம் நிலையில் எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல.

ஸ்டீராய்டுகளுக்கும் நீரிழிவு நோய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதால், மிகுந்த கவனத்துடன், மருத்துவரின் மேற்பார்வையில் தேவையான அளவு (7 முதல் 10 நாட்கள்) மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது, கருப்புப் பூஞ்சை போன்ற அபாயத் தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

மருத்துவர் சிவபிரகாஷ், நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணர், நீரிழிவு சிறப்புச் சிகிச்சை நிபுணர்.

தொடர்புக்கு: sivaprakash.endo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x