Published : 10 Jun 2014 12:00 AM
Last Updated : 10 Jun 2014 12:00 AM
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது.
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென் றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.
சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ, (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ணலாம். ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.
# மாம்பழம்
மிகுந்த சர்க்கரை இருப்பதால் பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். உட்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
# சப்போட்டா
இந்தப் பழத்தின் ஜி.ஐ. குறியீட்டு எண் 55க்கு மேலே உள்ளதால், இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிகம்.
# திராட்சை
நார்ச்சத்து, வைட்டமின் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 100 கிராம் திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
# வாழைப்பழம்
அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. 46 முதல் 70 வரை. பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
# தர்பூசணி
குறைந்த நார்ச்சத்து, குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் ஜி.ஐ குறியீடு 72. வைட்டமின் ஏ, சியும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
# அன்னாசி
அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராமுக்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
# சீத்தாப்பழம்
வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகம். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.
# முந்திரிப்பழம்
நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். 103 ஜி.ஐ. மதிப்பு கொண்ட இப்பழத்தின் கால் பங்கிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
- டி.எஸ்.உமாராணி, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT