Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM
கரோனாவை நினைத்து பீதி தேவையில்லை. ஆனால், அலட்சியம் கூடவே கூடாது. காய்ச்சல், உடல்வலி ஆரம்பித்து 7, 10 நாட்கள் கழித்துத்தான் பலரும் சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்போது நுரையீரலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டிருக்கும், சிகிச்சை அளித்தாலும் பலன் இருக்காது.
லேசாகக் காய்ச்சல், இருமல், உடல்வலி வந்த உடனேயே RT PCR - Swab பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் பாசிட்டிவ் வந்தால், கரோனா கிருமி சுவாசப் பாதையில் குடியிருக்கிறது என அர்த்தம். அது சில நாட்களில் வீட்டைக் காலி செய்யுமா அல்லது மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்துமா எனத் தெரிந்துகொள்ள மேலும் சில பரிசோதனைகள் தேவை.
Complete Blood Count - ரத்தத்தில் வெள்ளை அணு, சிவப்பணு, தட்டணு ஆகிய வற்றை அறிவது.
C Reactive Protein (CRP) - இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் தாக்கும்போது உடலில் சுரக்கும் புரதம். இது கூடிக்கொண்டே போனால் நோய் பாதிப்பு கூடுவதன் அறிகுறி. இரட்டை இலக்கத்தில் இருந்தால் கவனம் அவசியம். 50-க்கு மேல் சென்றால், கட்டாயம் சிகிச்சை தேவை. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துகள், ரெம்டெஸிவிர்.
D-Dimer - கரோனா கிருமிகள் ரத்தக் குழாய்களில் ரத்த உறைவை உருவாக்குகின்றன. குறிப்பாக, நுரையீரலில். அதைக் கண்டறிவ தற்கான பரிசோதனை. 500 ng/ml அளவுக்கு மேல் போனால் எச்சரிக்கை. ரத்தம் உறையாமல் இருக்க ஆஸ்பிரின், ஹெப்பாரின் போன்ற மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.
இது போக LDH, Pro calcitonin, Ferritin போன்ற சில சோதனைகளும் நோய்த்தொற்றின் தீவிரத்தை அறிய உதவும். பொதுவாக உடல்நிலையை அறிய Sugar, Liver function tests, Urea, Creatinine, Electrolytes போன்ற சோதனைகளையும் அடிக்கடி செய்தாக வேண்டும்.
மேலே குறிப்பிட்ட ரத்தப் பரிசோதனைகளை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை நோயின் தீவிரத்தைப் பொறுத்து எடுப்பார்கள். கட்டாயம் முதல் நாளும் பின் 5-6ஆம் நாள் இன்னொரு முறையும் எடுக்க வேண்டும்.
நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆக்ஸிஜன் அளவை Pulse oximeter வைத்துப் பார்க்க வேண்டும்.
சி.டி. ஸ்கேன்: மிக அவசியம். இதுதான் நோயின் தீவிரத்தைக் கணிக்க உதவும். 7ஆவது நாளோ தீவிர நோய் இருப்பவர்களுக்கு அதன் முன்னரோ எடுக்க வேண்டும். சி.டி. ஸ்கேனில் 25 சதவீதப் பாதிப்பு இருந்தால் உடனே ஆக்ஸிஜன், ரெம்டெஸிவிர் போன்ற சிகிச்சைகள் அவசியம்.
ஆக்ஸிஜன் அளவு 94 வந்தாலோ, சி.டி. ஸ்கேனில் 25 சதவீதப் பாதிப்பு இருந்தாலோ, ரத்தப் பரிசோதனை களில் CRP, D-dimer கூடுதலாக இருந்தாலோ சிகிச்சை அவசியம்.
இவை எதுவுமே செய்யாமல் கூல்டிரிங்க்ஸ் குடித்தேன் அதான் தொண்டைக்கட்டு, சாப்பாடு சரியில்லை சூட்டைக் கிளப்பிவிட்டது என்றெல்லாம் சமாதானம் சொல்லி தாமதமாக வரும்போதுதான் பிரச்சினை. லேசான அறிகுறிகள் இருந்தாலே அலட்சியப்படுத்த வேண்டாம், பேராபத்தாக முடியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT