Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

நரபலியும் மனப்பிறழ்வும்: புரிந்துகொள்ளப்படாத தொடர்பு

டாக்டர் ஆ.காட்சன்

இப்படியும் உலகில் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்று நம்மை வியக்கவைப்பது சாதனைகள் மட்டுமல்ல; மனநல பாதிப்புகளால் ஏற்படும் சோதனைகளும்தாம். சமீபத்தில் திருப்பதி அருகே உயர்கல்வித் துறையில் பணிபுரியும் பெற்றோர், தங்களது இளம் வயது மகள்களை நரபலி கொடுத்த சம்பவமும் இதில் அடங்கும்.

நம்பிக்கைகளின் பரிமாணங்கள்

நடைபெற வாய்ப்பு இருக்கும் ஒன்றைப் பற்றி நம்புவது நம்பிக்கை. நடைபெற எந்த வகையிலும் வாய்ப்பற்ற ஒன்று, நிச்சயம் நடைபெறும் என நம்பிக்கொண்டி ருப்பது மூடநம்பிக்கை. அடிப்படை அறிவியல் உண்மைகளுக்கு எதிரான அனைத்துமே மூட நம்பிக்கைகள்தாம். நம்பிக்கை, மூடநம்பிக்கை இரண்டுமே நாம் அன்றாட வாழ்வில் காணப்படு பவைதாம்.

ஆனால் மனநோய்களின் அறி குறிகளில் ஒன்றான மனப் பிறழ்வு (Delusion) என்பது, நடைபெற வாய்ப்பற்ற ஒன்று அதிநிச்சயமாக நடந்துகொண்டி ருப்பதாக அல்லது எதிர்காலத்தில் நடைபெறும் என்று கண்மூடித்தன மான நம்பிக்கையைக் கொண்டிருப்பது.

திருப்பதி தம்பதி தங்கள் மகள்களின் வாழ்க்கை நன்றா யிருக்க வேண்டுமானால் அவர்க ளையே நரபலி கொடுக்க வேண்டும்; அப்படிச் செய்தாலும்கூட அவர்கள் உயிரிழக்க மாட்டார்கள் அல்லது மீண்டும் உயிரோடு வந்து விடுவார்கள் என்கிற மனப்பிறழ்வு சார்ந்த புரிதலின் காரணமாகத்தான், யாரும் நினைத்துப் பார்க்க அஞ்சும் இத்தகைய கொடுஞ்செயலை நிகழ்த்தியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ளப்படும் மனப்பிறழ்வு

இரண்டு பேரும் நன்கு படித்தவர்கள் தானே; அதில் ஒருவருக்குக் கூடவா அடிப்படை அறிவு இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வி எழலாம். தொடக்கத்தில் குடும்பத்தில் ஒரு நபர்தான் மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டு இருந்திருப்பார். ஒரு கிருமி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவி எப்படி நோய்த்தொற்றை உண்டாக்கு கிறதோ, அதுபோலவே மனப்பிறழ்வும் ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு, முக்கியமாக நெருங்கிய குடும்ப நபர்களுக்குப் பரவக்கூடிய தன்மை கொண்டது. இது ‘பகிர்ந்துகொள்ளப்பட்ட மனப்பிறழ்வு’ (Shared Delusion) என்கிற ஒருவகை மனநோய். ஒருவரின் நம்பிக்கையும் உணர்வுகளும் (Emotions) நெருங்கிய உறவுகொண்டவர்களுக்குத் தொற்றும் சாத்தியம் உண்டு. மனப்பிறழ்வு என்பது மூடநம்பிக்கையைவிட அதிக வீரியம் மிக்கது மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அதற்குப் பலியாகலாம்.

என்னென்ன மாற்றங்கள் தெரியும்?

சில நேரம் இது குடும்ப நபர்கள் எல்லோரையும் பாதிக்க வாய்ப்பிருப்பதால், இந்த பாதிப்பு நெடுநாள்களாக வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. வீட்டைவிட்டு வெளியே வராமல் பல நாள்களாக பூட்டிக்கொண்டிருப்பது; அக்கம்பக்கம் உள்ளவர்களுடன் தொடர்பைத் துண்டித்துக்கொள்வது; வீட்டின் உள்ளே ஆள் இருந்தும் வெளி, உள் பகுதிகள் அதிக நாள்களாகச் சுத்தம் செய்யப்படாமல் காணப்படுவது; நடவடிக்கைகளில் அசாதாரண மாற்றங்கள் போன்ற செயல்பாடுகள் மனப்பிறழ்வு கொண்டவர்களிடம் காணப்படலாம். இம்மாற்றங்களை அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே புரிந்துகொண்டு, மேல் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

ஒன்றும் புதிதல்ல

பகிர்ந்துகொள்ளப்பட்ட மன நோய்களால் இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் ஏதாவது சிறிய அளவில் நடந்து கொண்டுதாம் இருக்கின்றன. ஆனால், அவை மூடநம்பிக்கைகள் என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடப்படுகின்றன. இதுபோன்ற பெரிய கொடூரச் சம்பவங்கள் நடைபெறும்போதுதாம், அவை வெளிச்சத்துக்கு வருகின்றன.

சம்பவம் 1

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி என்.ஐ.டி.யில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, இந்திய அளவில் கூடைப்பந்து அணியிலிருந்து வெளி வந்த (செல்லம்பிள்ளை) என்பவரும் அவரது குடும்பமும் இறந்துபோன தங்கள் தாய் மீண்டும் உயிரோடு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் 20 நாள்களுக்கு மேலாக வீட்டிலேயே சடலத்தை வைத்துக்கொண்டு காத்தி ருந்தார்கள். இந்தச் சம்பவத்தை மனநல மருத்துவராக நான் எதிர்கொண்டேன். அவரும் அவரது குடும்பத்தினரும் மனசிதைவு நோயால் பாதிக்கப்பட்டி ருந்ததன் விளைவாகத்தான், அப்படி நடந்து கொண்டனர் என்கிற அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் சிகிச்சைக்காக விடுவிக்கப்பட்டனர்.

சம்பவம் 2

ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் ஜெபம் செய்த பின்பு, அனைவரும் தற்கொலை செய்துகொண்டால் சொர்க்கம் நிச்சயம் என்று போதித்த மனநலம் பாதிக்கப்பட்ட மதபோதகரைப் பின்பற்றிய 900 பேர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் (Jonestown mass suicide) 1978இல் தென்னமெரிக்க நாடான கயானாவில் அரங்கேறியுள்ளது.

சம்பவம் 3

ஒரு குறிப்பிட்ட அரசியல் பெரும்புள்ளியால், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மகள் சொன்னதை அப்படியே நம்பி, சம்பந்தப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவரது புகழுக்குக் களங்கம் விளைவிக்க முயன்ற நிகழ்வு நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது. முதலில் அந்த இளம்பெண்ணும், அதைத் தொடர்ந்து அவரது விதவைத் தாயும் பகிர்ந்துகொள்ளப்பட்ட மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டதன் விளைவே இந்தப் புகார்.

தீர்வு என்ன?

l அக்கம் பக்கத்திலிருப்பவர் களின் ஆதரவு, கண்காணிப்பு

l சமூக கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வைப்பது

l முதல் நபர் பாதிக்கப்படும் போதே மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது

l முற்றிய நிலையில் மனப் பிறழ்வால் பகிரப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது

சமூகத்திலிருந்து விலகி வாழும் குடும்ப நபர்களிடையேதான் இந்த பகிர்ந்துகொள்ளப்பட்ட மனநோய் அதிகம் காணப்படுவதாக ஆய்வு கள் தெரிவிக்கின்றன. கரோனா காலத்தில் தங்களைச் சமுதாயத்தி லிருந்து விலக்கிக்கொண்டு, பக்தி சார்ந்த மூடநம்பிக்கை செயல்பாடுகளில் ஒரு சிலர் அதிகம் ஈடுபட்டிருந்ததுகூட, இச்சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

மனநோய்கள் தொடக்கக் கட்டத்திலேயே கவனிக்கப்படாத தன் விளைவுதான் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள். அத்துடன் மனநலம் குறித்த அறிவியல் ரீதியிலான புரிதலின்மை, மனநலம் குறித்த அறியாமை, மதம்-பக்தி சார்ந்த அதீத மூடநம்பிக்கை போன்றவையும் இந்த வகை மனப்பிறழ்வுக்கும் உயிர்ப்பலிக்கும் முக்கியக் காரணங்கள் என்பதில் சந்தேக மில்லை.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் - திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உதவிப்பேராசிரியர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x