Published : 26 Dec 2020 11:26 AM
Last Updated : 26 Dec 2020 11:26 AM
வல்லரசு என்று மார் தட்டிக்கொண்ட நாடுகள்கூட கரோனாவை எதிர்க்கத் திராணியற்று மண்டியிட்டு நின்றன. ஓர் அசாதாரண சூழலில் சிக்கி, அபாயகரமான நிலையில் மனித இனம் நின்றதால், உலகமே முடங்கி நின்றது. ஆனால், அறிவியலும் மருத்துவமும் முடங்கவில்லை. மனித இனத்தைக் காக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் அவை வழக்கத்தைவிட அதீத வேகத்தில் செயலாற்றின. 2020இல் மருத்துவ அறிவியல் சந்தித்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:
அம்மா மினி க்ளினிக்
ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளருடன் இயங்கக்கூடிய 2,000 சிறிய மருத்துவமனைகளை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, சென்னையில் 47 மருத்துவமனைகளும் தமிழ்நாடு முழுவதும் 630 சிறிய மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டன. இதில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது. இப்படிச் செய்வது மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். ஏற்கெனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை பாதிக்காமல், மினி கிளினிக்குகள் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆந்திரத்தில் மர்ம நோய்
ஆந்திர மாநிலம் ஏலூரு, அதன் சுற்றுப்புற கிராம மக்கள், வலிப்பு, வாந்தி, மயக்கம் என ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஏலூரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நோய்க்கான உண்மையான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. பூச்சிக்கொல்லி மாசுபாடு, காரீய மாசுபாடு போன்றவை இந்த நோய்க்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து மக்கள், அரசு அதிகாரிகளிடையே போதிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு முதன்மைக் காரணம்.
கோவிட்-19 தடுப்பூசிகள்
கரோனாவுக்குத் தடை போட தடுப்பூசி மட்டுமே கையிலிருக்கும் வழி என்பதால், அனைத்து நாடுகளும் தடுப்பூசியை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டுள்ளன. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் இறுதிக் கட்டப் பரிசோதனை நிலையை எட்டியுள்ளன. இவற்றைத் தவிர அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்கள், மாநில மருத்துவப் பணிகள் கழகம் எனத் தமிழகம் முழுவதும் 2,600 இடங்களில் 2 கோடி தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுமா, போடப்படாதா என்பது குறித்து திட்டவட்டமான முடிவை மத்திய அரசு அறிவிக்காமல் இருந்துவருகிறது.
பெருந்தொற்றும் சமூக வெறுப்புணர்வும்
கடந்த ஆண்டு இறுதி முதல் பரவத் தொடங்கிய நாவல் கரோனா வைரஸை, மூன்று மாதங்கள் கழித்து 2020 மார்ச் 11-ல் ‘உலகளாவிய தொற்றுநோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. கரோனா குறித்த அச்சம், கரோனா நோயாளிகள் மீதான வெறுப்பாக உருமாறியது. இந்த வெறுப்புணர்வுக்கு நோயாளிகள் மட்டுமல்ல, சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடிய முன்களப் பணியாளர்கள் ஆகியோர் இரையானது, மனிதர்களின் சுயநலத்தையும் புரிதலின்மையையும் வெட்ட வெளிச்சமாக்கியது. அதிலும் குறிப்பாக பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை அண்ணாநகர் வேலங்காடு இடுகாட்டில் அடக்கம்செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது, நாடு தழுவிய அளவில் சர்ச்சையானது.
கோவிட் 19 விருதுகள்
* உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
* கரோனா ஊரடங்குக் காலத்தில் பல்வேறு சமூகநலப் பணிகளில் ஈடுபட்ட பாலிவுட் நடிகர் ‘சோனு சூட்’டை பாராட்டும் வகையில் ‘சிறந்த மனிதநேய செயல்பாட்டாளர்’ விருதை ஐ.நா. அறிவித்துள்ளது.
* HEROES என்ற இணையதளத்தை உருவாக்கிய ரவி சோலங்கி என்கிற இந்திய வம்சாவளி மருத்துவர், நோய்த்தொற்று தடுப்பு சேவைக்கான, பிரிட்டன் ராயல் அகாடமி ஆஃப் என்ஜினியரிங் அமைப்பின் தலைவர் வழங்கும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
* கரோனா காலத்தில் சிறப்பான சிகிச்சை அளித்ததற்காக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு இந்தியச் சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பு விருது வழங்கப்பட்டது.
* தொற்றில்லா நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு பணிகளில் சிறப்புடன் பங்காற்றியதற்காக இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது கேரளத்துக்கு வழங்கப்பட்டது.
புதிய உமிழ்நீர் சுரப்பி
நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தொண்டையின் மேல் பகுதியில் ஆழமான உமிழ்நீர் சுரப்பிகளின் தொகுப்பைக் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ‘டூபரியல் உமிழ்நீர் சுரப்பிகள்’ எனப் பெயரிட்டுள்ளனர். நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தினர் நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சியின்போது எதிர்பாராதவிதமாக, மனித தொண்டையில் ஒரு புதிய உறுப்பைக் கண்டு பிடித்துள்ளனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சுரப்பிகள் சராசரியாக சுமார் 3.9 சென்டிமீட்டர் நீளமுள்ளவை. அவை டோரஸ் டூபரியஸ் எனப்படும் குருத்தெலும்புக்கு மேல் அமைந்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
நம்பிக்கை தரும் நோபல் பரிசு
2020-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்ட்டர், சார்லஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாவ்டன் ஆகிய மூவருக்கு ஹெபடைடிஸ் சி வைரஸ் கண்டறிந்ததற்காக வழங்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸை எதிர்த்து உலகம் போராடி வரும் சூழ்நிலையில், ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பரிசு, கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டி ருக்கும் அறிவியலாளர்களுக்கு நிச்சயம் உத்வேகத்தை அளிக்கும்.
அதிகரிக்கும் தற்கொலை, மனநல நோய்கள்
இந்தியாவில் சுமார் 15 கோடி பேருக்கு உடனடியாக உளவியல் சார்ந்த மருத்துவ உதவி தேவைப்படுவதாகத் தேசிய மனநலம் - நரம்பு அறிவியல் நிறுவனம் (NIMHANS) நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உளவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதற்குரிய மருத்துவ உதவி கிடைக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், உலகில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.
குணமடைந்த எய்ட்ஸ் நோயாளி
‘தி லண்டன் பேஷன்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படுபவர் `ஸ்டெம்செல்’ மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி. பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார். சர்வதேச அளவில் ஹெச்.ஐ.வி. வைரஸ் முழுமையாக நீக்கப்பட்ட உலகின் இரண்டாம் நபர் இவரே. இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன், `எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல் மாற்று அறுவைசிகிச்சை’ நடத்தப்பட்டது. அதன்பிறகு, ஒன்றரை ஆண்டு தொடர் சிகிச்சையிலிருந்தவரின் உடலிலிருந்து ஹெச்.ஐ.வி. வைரஸ் தற்போது முழுமையாக நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலியோவை ஒழித்த ஆப்பிரிக்கா
1988 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு போலியோவுக்கு எதிராகத் தீவிரமான பிரசாரத்தில் இறங்கியது. அப்போது உலகம் முழுவதும் 3,50,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 70,000 பேர் ஆப்பிரிக்காவில் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் யாருக்கும் போலியோ பாதிப்பு ஏற்பட வில்லை. போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளது. முன்னதாக பெரியம்மையிலிருந்து விடுபட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT