Published : 17 Jun 2014 10:00 AM
Last Updated : 17 Jun 2014 10:00 AM

யோகா: வாழ்வை அனுபவிப்பதற்கான கலை

உலக யோகா நாள்- ஜூன் 21

யோகாவுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு தற்செயலானது. நீச்சலுக்காகத்தான் அங்கே போனேன். நான் செல்லும் ஜிம்மின் ஒரு மூலையில் ஒரு சின்ன அறை உள்ளது. அங்கே சில சமயம் ‘யோகா வகுப்பு’ நடப்பதுண்டு. அங்கே யாரும் போவதாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு நாள் ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு அழகான பெண், யோகா வகுப்பு எங்கே என்று விசாரித்தாள். அவளைப் பற்றி நான் என்ன சொல்வேன்? காண்பவரை வசியப்படுத்தும் ஏதோ ஒரு சக்தி அவளிடம் இருந்தது. அவள் நடையும் உடல் அசைவுகளும் வித்தியாசமாக இருந்தன. அவளிடம் விசேஷமாக ஏதோ ஒன்று இருந்தது. நான் அவளைப் பின்தொடர்ந்து சென்றேன்.

அறிமுகம்

அவள் கார்டிஃபில் உள்ள யோகா ஆசிரியை என்று தெரியவந்தது. அன்றுவரையிலும் யோகா என்றால் அது ஒரு வகை உடற்பயிற்சி என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். யோகா என்பது வாழ்வை ரசித்து அனுபவிப்பதற்கான கருவியாக இருக்க முடியும் என்பதை அந்தச் சிறிய அறையில் நான் உணரத் தொடங்கினேன். மோசமான சந்தர்ப்பங்களிலும் வாழ்வை ரசிக்க முடியும் என்பதைக் கண்டுகொண்டேன்.

ஆனால், யோகா என்பது முதலில் குழப்பமானதாக இருந்தது. சங்கடப்படுத்துவதாக இருந்தது. கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. என் காலைப் போதிய அளவு நீட்ட முடியவில்லை. போதிய அளவு வளைய முடியவில்லை. நளினமான முறையில் உடலைக் கையாள முடியவில்லை. நான் நடனம் ஆடுபவள். உடல் அசைவுகளில் அழகு என்பது நடனத்துக்கு முக்கியம். ஆனால், யோகா செய்யும்போது அதைக் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. யோகா செய்யும்போது, நரியால் துரத்தப்படும் கோழிக்குஞ்சைப் போல எனக்கு மூச்சு வாங்கியதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவமானம் என்றால் என்னவென்று யோகா எனக்குக் கற்றுத் தந்தது. என் மூச்சுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டால் என் உறுப்புகளை உயிர் (பிராண) சக்தியால் நிரப்ப முடியும் என்பதைக் கற்றுக்கொடுத்தது. கட்டுப்பாட்டைப் பயிற்சி செய்தால் அமைதி கிடைக்கும் என்பதை யோகா உணர்த்தியது. அதுதான் அப்யாசம் என்பது, எனக்கு அப்போது தெரியாது. மிகுந்த அமைதியை அளிக்கும் உடற்பயிற்சி இது என்பதை அறிந்துகொண்டேன். பல்வேறு யோகாசனங்களைச் செய்து சவாசனத்தை அடையும்போது அப்படி ஒரு அமைதி ஏற்படும்.

மனநிலை

அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு. அன்று முதல், சவாசனத்திலும் அதை எட்டுவதற்கான பயணத்திலும் கிடைக்கும் அமைதியைத் தேடும் முயற்சிகளை எடுத்துவருகிறேன். அஷ்டாங்க யோகா, மைசூர், வின்யாசா, ஃப்ளோ, அனுசரா, பிக்ரம், ஐயங்கார் எனப் பல விதமான யோகப் பயிற்சிகளைப் பயின்றுவருகிறேன். "யோகாசன விரிப்பில் காலையில் நீ எப்படி இருக்கிறாயோ அப்படித்தான் அன்று நாள் முழுவதும் இருப்பாய்" என்று மைசூர் பாணி ஆசிரியர் ஒருமுறை சொன்னார். ஒரு நாளின் மகத்தான நுழைவாயிலான பிரம்ம முகூர்த்தத்தில் அந்த நாளுக்கான என் மனநிலையை நிர்ணயிக்கும் கருவியாக யோகா எனக்கு இருக்கிறது.

2011-ல் இலக்கிய விழா ஒன்றிற்காக (ஹே ஃபெஸ்டிவல்) கேரளத்திற்குச் செல்லும் அதிருஷ்டம் எனக்கு வாய்த்தது. இலக்கிய விழாவும் கவிதை மொழிபெயர்ப்புப் பயிலரங்கும் நடைபெற்றன. அங்கே புகழ்பெற்ற கவிஞர் சச்சிதானந்தனைச் சந்தித்தேன். இப்போது அவர் எனக்கு நண்பர். அவர் பெயருக்கு அர்த்தம் என்ன என்று அவரிடமே கேட்டேன். சத் - சித் - ஆனந்தம் அதாவது பிரக்ஞைபூர்வமான நித்திய ஆனந்த நிலை என்று விளக்கினார். சவாசனத்திலும் அதற்கான பாதையிலும் உணரும் அமைதிதான் அந்த நிலை.

யோகா குரு

கேரளாவில் தினமும் காலையில் உள்ளூர் ஆசிரியர் ஒருவருடன் ஆசனங்களைப் பயிற்சிசெய்தேன். வீடு திரும்பியதும் யோகாவில் இன்னும் ஆழமாகச் செல்ல உதவக்கூடிய குரு ஒருவரைத் தேடத் தொடங்கினேன். என்னுடைய யோகா ஆசிரியர்களில் ஒருவர் டி.ஜே. ஜேக்சன் என்னும் வருகைதரு ஆசிரியர் பற்றிச் சொன்னார். அவர் தர்ம மித்ர யோகா என்னும் யோகப் பயிற்சியை அளித்துவருகிறார் என்றார். அந்த வகை பற்றி எனக்கு அப்போது எதுவும் தெரியாது. நான் இத்தாலியில் தங்கியபடி ஒரு நாவலுக்காக ஆய்வுசெய்துகொண்டிருந்தேன். அவர் ஃபிரான்ஸ், வேல்ஸ் என்று பயணம் செய்துகொண்டிருந்தார். எவ்வளவோ முயன்றும் அவரைச் சந்திக்க முடியாமல் போய்க்கொண்டிருந்தது. ஓராண்டுக்கு முன்புதான் அந்த முயற்சி பலித்தது. இவர்தான் என்னுடைய குரு என்பதைக் கண்டுகொண்டேன்.

எளிய சுபாவம் கொண்ட அவர், யோகாவை ஆழமாகப் புரிந்து வைத்திருப்பதுடன் அதன் மீது ஆழமான அன்பும் கொண்டிருக்கிறார். புனிதமான யோகப் பயிற்சியிலும் ஒழுங்கிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவருடைய குரு தர்ம மித்ராவிடமிருந்து ஜேக்சன் யோகப் பயிற்சிகளையும் இத்தகைய பண்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். இவர்கள் மூலம் நான் அலாதியானதொரு பாதையில் பயணிப்பதாக உணர்கிறேன். இந்தப் பாதை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ எனக்கு உதவுகிறது. இது அற்புதமானது. இந்த எளிமையான - உண்மையிலேயே எளிமையான - தினசரிப் பயிற்சிகள் நான் யார் என்பதையும் ஒரு நாளில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதையும் தீர்மானிக்கின்றன. எவ்வளவு அதிசயமான விஷயம் இது.

மாற்றங்கள்

குறைவான தூக்கமே எனக்கு இப்போது போதுமானதாக இருக்கிறது. இவ்வளவு அதிகாலையில் எழுந்திருக் கிறாயே, தூங்காமல் எப்படிச் சமாளிக்கிறாய் என்று என்னைச் சிலர் கேட்கிறார்கள். என்னுடைய பதில் எளிமையானது. நான் விழிப்புடன் இருக்கிறேன். அப்படி இல்லாதபோது நாடி ஷுப்தாசன் செய்ததும் தூக்கக் கலக்கம் நீங்கிப் புத்துணர்வு பெற்றுவிடுகிறேன். மணிக்கணக்கில் யோகாசனம் செய்வதால் தூக்கத்தையோ வேலையையோ விளையாட்டையோ தியாகம் செய்ய வில்லை. என் வேலையை முன்பைவிட உத்வேகத்துடன் செய்கிறேன். முன்பைவிட ஆழமாகச் செய்கிறேன். என் அம்மாவுடன் என் வாக்குவாதங்கள் குறைந்திருக்கின்றன.

யோகா பற்றிய ஆய்வில் ஈடுபட ஈடுபட, நான் அதிகமாகக் கற்க வேண்டியிருப்பதை உணர்கிறேன். என் எழுத்திலும் இதே அனுபவம்தான். கணினித் திரையில் என் நாவல் நீண்டுகொண்டே போவதைக் கண்டு அச்சம் ஏற்படுகிறது. ஆனால், என்னுடைய வழிகாட்டிகளை நான் நம்புகிறேன். அவர்களுடைய வார்த்தைகள் ஒளியூட்டுவனவாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளன. உண்மையிலேயே மகிழ்ச்சிதான்.

மகிழ்ச்சி

தர்மா என்னைச் சிரிக்க வைக்கிறார். 15 வயதிலிருந்து நான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுகிறேன். இப்போது பால் பொருள்களைத் தவிர்த்த இயற்கை உணவை மட்டுமே சாப்பிடுகிறேன். இதுதான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தர்மா இதை மேலும் செறிவாகச் சொல்கிறார்: “பொரித்த, உயிரற்ற, சமைத்த உணவைச் சாப்பிட்டால் பொரிக்கப்பட்ட, உயிரிழந்த, சமைக்கப்பட்ட உணர்வைத்தான் பெறுவாய்”. மூச்சுப் பயிற்சி எனப்படும் பிராணாயாமம், மந்திர உச்சாடனம் ஆகியவையும் என்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள உதவுகின்றன. கூடவே பகவத் கீதை, யோக சூத்திரம், ஹட யோக ப்ரதீபிகா ஆகிய நூல்களையும் படித்துவருகிறேன். “இவை இல்லாத யோகா என்பது சாஸ் இல்லாத ஸ்பெகட்டி (பாஸ்தா) போன்றது” என்பார் தர்மா. “ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். சரியான உணவைச் சாப்பிடுங்கள். கடவுளிடம் சரணடையுங்கள். தான் என்னும் எண்ணத்தைக் கைவிடுங்கள். அவ்வளவுதான். உங்கள் கால்களை எடுத்துக் கழுத்துக்குப் பின்னால் போட வேண்டாம். விசித்திரமான ஆசனங்களைச் செய்ய வேண்டாம். எதைச் செய்தாலும் ஈடுபாட்டோடு ரசித்துச் செய்யுங்கள். அதுபோதும் என்பார் அவர்.” ஜிம் என்பது யோகா வகுப்புக்கு ஏற்ற இடம் இல்லை. ஆனால், நல்லவேளை நான் போகும் ஜிம்மில் யோகா வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இல்லாவிட்டால் இது எனக்குத் தெரிந்திருக்காது.

நான் யோகா கற்றுத்தர ஆரம்பித்திருக்கிறேன். இதை நான் தொழில் வாய்ப்பாகப் பார்க்கவில்லை. இதில் கிடைக்கும் பேரானந்தத்திற்காக இதைச் செய்கிறேன். எனக்குக் கிடைத்திருப்பதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு முறை யோகாசனம் செய்யும்போதும் வாழ்வில் நான் செய்திருக்கும் மதிப்பு வாய்ந்த செயல்களில் ஒன்றாகவே அதைக் கருதுகிறேன். எனவே, நான் இதைத் தொடர்ந்து செய்கிறேன்.

தமிழில்: அரவிந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x