Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM
பேரிடர்களும் பேரழிவும் மனித குலத்துக்குப் புதியவையல்ல. இயற்கை சீற்றங்களாலும் உலகப் போர்களாலும் ஏற்பட்ட பேரழிவுக்கு நிகரான பாதிப்பைக் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸால் ஏற்படுத்த முடியும் என்கிற உண்மையை 2020ஆம் ஆண்டு நமக்கு உணர்த்தியுள்ளது. பேரிடர் காலங்களில், உயிருக்கு ஆபத்தான நிலைமைகளில் நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்து நிற்கும்போது, நம்மைக் காக்கும் கரங்களாக சக மனிதர்களின் கரங்களே இருந்துள்ளன. இந்த கரோனாப் பெருந்தொற்றுக் காலத்திலும் அதுவே நிகழ்ந்துள்ளது. நம்மைக் காப்பதற்காக தன்னலம் தொலைத்து, கண்ணுக்குத் தெரியாத கரோனாவுடன் போராடியவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் (இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது):
முகமறியா முன்களப் பணியாளர்கள்
கரோனா என்றவுடன் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிவிட்டனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள், காவலர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் உள்ளிட்ட எண்ணற்ற முகமறியா முன்களப் பணியாளர்கள் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரத் தீரத்துடன் போராடிவந்தனர்; இன்றைக்கும் போராடிவருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் குடும்பமும் குழந்தைகளும் உண்டு. ஆனால், மக்கள் நலனை முதன்மையாகக் கருதியதால் வீடுவீடாகச் சென்று தரவுகளைச் சேகரிப்பது, காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, சாலையெங்கும் கிருமிநாசினியைத் தெளிப்பது, இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்வது உள்பட அவர்கள் மேற்கொண்ட பணிகளை வெறும் மக்கள் நலச் சேவையாக மட்டும் சுருக்கிவிட முடியாது.
ஜெ.ராதாகிருஷ்ணன்
சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு
வெளிநாடு சென்றுவிட்டுக் கடந்த மார்ச் மாதம் திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளரின் மூலம் சென்னைக்குள் நுழைந்த கரோனா மளமளவெனப் பரவிவந்தது. கரோனா தொற்று கைமீறிப் போய்விட்டதை உணர்ந்த அரசு மே மாதத்தில் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும், ஜூன் மாதத்தில் சுகாதாரத் துறை செயலாளராகவும் இவரை நியமித்தது. பேரிடர்களைச் சமாளிப்பதில் முன்அனுபவம் கொண்டிருந்த அவர், கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதிலும் முத்திரை பதித்தார். அதிக அளவிலான கரோனா பரிசோதனைகள், கரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள், விழிப்புணர்வுப் பிரசாரம் போன்ற அவருடைய முன்னெடுப்புகள் நாட்டுக்கே வழிகாட்டுபவையாக இருந்தன.
பிரப்தீப் கவுர்
தேசியத் தொற்றுநோய்ப்பரவலியல் நிறுவனத் துணை இயக்குநர்
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிக்காக 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவைத் தமிழக அரசு நியமித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின்கீழ் (ஐ.சி.எம்.ஆர்.) செயல்படும் தேசியத் தொற்றுநோய்ப்பரவலியல் நிறுவனத் துணை இயக்குநரான பிரப்தீப் கவுர், இந்தக் குழுவை வழிநடத்தினார். தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வகுத்ததிலும், கரோனா குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. பொது முடக்கம், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றின் அவசியத்தை மக்களிடம் அறிவியல்பூர்வமாகக் கொண்டுசென்றார்.
சௌம்யா சுவாமிநாதன்
உலக சுகாதார நிறுவனத் தலைமை விஞ்ஞானி
கரோனா குறித்த அச்சங்களும் யூகங்களும் மட்டுமே பரவியிருந்த காலகட்டத்தில், அது குறித்த அறிவியல்பூர்வமான உண்மைகளை அழுத்தமாக முன்வைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன். கரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வழக்கமாகப் பின்பற்றப்படும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் புறந்தள்ளும் முயற்சியில் ஈடுபட்டபோது, அவற்றை எதிர்த்தார். குறைந்தபட்ச செயல்திறனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் கரோனா தடுப்பூசியே மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
பிரியா ஆபிரகாம்
தேசிய வைராலஜி நிறுவன இயக்குநர்
கேரளத்தைச் சேர்ந்த பிரியா ஆபிரகாம் இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்குவதற்கு முன்புதான் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். தொடக்கத்தில் தேசிய வைரலாஜி நிறுவனம் மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான ஒரே மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளிலிருந்து கரோனா வைரஸைப் பிரித்தெடுக்கும் சாதனையை தேசிய வைராலஜி நிறுவனம் நிகழ்த்தியது. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் பிரியா ஆபிரகாம்.
கே.கே.ஷைலஜா
கேரள சுகாதார அமைச்சர்
ஒட்டுமொத்த உலகமும் கரோனாவைப் பெரும் அச்சத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் அந்த நோய்த்தொற்றை தைரியமாக எதிர்கொண்ட மாநிலம் கேரளம். அதற்கு முதன்மைக் காரணம் கேரள சுகாதார அமைச்சர் கே.கே ஷைலஜா. நிபா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய முன் அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. கேரளம் முழுக்கப் பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் எனக் கேரள சுகாதாரத் துறையை முடுக்கிவிட்டு செயல்பட்டார். கேரளமே கரோனாத் தொற்றை மாநிலப் பேரிடராக முதலில் அறிவித்தது, பொது முடக்கக் கட்டுப்பாடுகளையும் முதலில் நடைமுறைப்படுத்தியது.
செலின்
கரோனாவைக் கட்டுப்படுத்தும் ஜோ பைடனின் சிறப்புக் குழு உறுப்பினர்
அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜோ பைடன், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல் குழுவை அமைத்திருக்கிறார். அதில் ஈரோடு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் செலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கக் காசநோய்த் தடுப்புப் பிரிவு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள செலின், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
கலா நாராயணசாமி
சிங்கப்பூர்
கரோனா தொற்றுக் காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலா நாராயணசாமி, சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ளார். சிங்கப்பூர் உட்லாண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸில் செவிலியர் பிரிவு துணை இயக்குநராகத் தற்போது அவர் பணிபுரிந்துவருகிறார். கடந்த 2003-ம் ஆண்டில் சார்ஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியதில் பெற்ற அனுபவத்தை கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிஸ்மெகியா கார்பெட்
நோய்த் தடுப்பாற்றல் ஆராய்ச்சியாளர்
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ள கரோனா தடுப்பூசிகளில் ஃபைசருக்கு அடுத்தபடியாக மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசிக் கண்டுபிடிப்பின் மூளையாக விளங்கியவர் கிஸ்மெகியா கார்பெட் (34) என்கிற ஆப்ரோ அமெரிக்கர். அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு சமஉரிமை மறுக்கப்பட்டிருக்கும் நிலையிலும் சிறுவயதிலிருந்தே அறிவியலின் மீதும், அதன் புரியாத புதிர்களைக் களைவதிலும் ஆர்வம்கொண்டவராக இவர் இருந்துள்ளார். பாடப் புத்தகங்களில் இருக்கும் ஒவ்வொரு வரியும் யாரோ ஒருவரின் கண்டுபிடிப்பு என்பதை உணர்ந்த அவர், வருங்காலப் புத்தகங்களில் தன் பெயரும் இடம்பெற வேண்டுமென விரும்பினார். அவருடைய குழு கண்டுபிடித்திருக்கும் எம்.ஆர்.என்.ஏ 1273 (மாடர்னா தடுப்பூசி) அதற்கு விடை.
கியூப மருத்துவர் குழு
கரோனா தொற்று குறித்த அச்சத்தில், நாட்டு எல்லைகளை அடைத்து அனைத்து நாடுகளும் முடங்கியபோது, தன் நாட்டு மருத்துவக் குழுவை உலகெங்கும் அனுப்பி உன்னத சேவையாற்றியது கியூப அரசு. கரோனா தொற்றால் தன்னம்பிக்கை இழந்து தத்தளித்த இத்தாலி நாட்டு மக்களுக்குக் கியூப மருத்துவர் குழு அளித்த சேவை வரலாற்றில் இடம்பெற வேண்டியது. வளர்ந்த நாடுகளே கரோனாவின் பிடியில் சிக்கித் திணறியபோது, வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாடான கியூபா தன்னுடைய மருத்துவக் குழுவை 22க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி, மனித சேவையின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT